search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivachandran"

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

    இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

    இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர் வீரர் சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது’ என்று இளைஞர்கள் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தில் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் பலியாகினர். இருவரின் உடல்களும் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

    முன்னதாக சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவச்சந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் சிவசந்திரனின் உடல், அவருக்கு சொந்தமான நிலத்தில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    அஞ்சலி நிகழ்ச்சியின் போது சிவசந்திரனின் தந்தை சின்னையன், மகன் சிவமுனியன் ஆகியோர் ராணுவ உடை அணிந்திருந்தனர். சிவமுனியன், தந்தையின் உருவப்படத்திற்கு முத்தமிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

    மேலும் அஞ்சலி செலுத்த வந்திருந்த அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பொது மக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி வந்ததோடு, கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டையை சட்டையில் குத்தியும் வந்திருந்தனர். வாய் பேச முடியாத சிவசந்திரனின் தங்கை ஜெயசித்ரா, அண்ணனின் உடல் இருந்த மரப்பெட்டியை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், இளைஞர்கள் பலர், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். ராணுவ வீரர்களின் ரத்தம் வீண் போகக்கூடாது என்று கூறி பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

    இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.



    மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுப்ரமணியனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PulwamaAttack #CRPF #EdappadiPalaniswami
    ×