search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு- இந்திய விமான படை விமானிகளுக்கு ராகுல் சல்யூட்
    X

    பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு- இந்திய விமான படை விமானிகளுக்கு ராகுல் சல்யூட்

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.

    இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், ‘‘இந்தியர்களை பாதுகாக்க இந்திய விமான படை மேற்கொண்ட உறுதியான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் ஜெய்ஹிந்த்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.



    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி பெருமைப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘‘சகோதி, முசாபராபாத், பாலாகோட் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    இதுவே அவர்களது (பாகிஸ்தான்) எல்லை என்றால் ஐ.நா. படை மூலம் தான் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். எங்களை தாக்கினால் நாங்கள் இந்தியாவை ஆயிரம் கூறு போடுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி இருந்தது. எனவே 1000 குண்டுகளை இந்தியா வீசியிருப்பது சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறுகையில், “40 வீரர்கள் பலியானபோது வேதனை அடைந்தோம். இப்போது பதிலடி கொடுப்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். #PulwamaAttack #IAFAttack #LoC
    Next Story
    ×