search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் நடைபெற்ற தாக்குதலால் பா.ஜனதா வாக்கு வங்கி உயராது- முத்தரசன்
    X

    எல்லையில் நடைபெற்ற தாக்குதலால் பா.ஜனதா வாக்கு வங்கி உயராது- முத்தரசன்

    எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது என்று முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.

    வருகிற தேர்தல் மிக பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்றார். தற்போது இந்த வாக்குறுதி குறித்து பேச மறுக்கிறார்.

    ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். ஆனால் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது.

    அவர்களுடன் தற்போது பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. எங்கள் அணி கொள்கை அடிப்படையிலான அணி. மாநில உரிமைகளை காக்க தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

    கோவையில் நாளை 7 கட்சிகளின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து எங்கள் குழு பேசி உள்ளது. முதல் கட்ட பேச்சு வார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.வுடன் இணைந்து பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சேர்ந்த கூட்டணி.

    மாயமாகி உள்ள சமூக ஆர்வலர் முகிலனை மாநில அரசு தேடி கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது. இது தேர்தலில் எதிரொலிக்காது.

    தேர்தல் சமயத்தில் இது போன்று பல சாகசங்களை பாரதிய ஜனதா மேற்கொண்டாலும் தேர்தலில் பலிக்காது. அ.தி.மு.க. கூட்டணி மர்ம கூட்டணி. எங்களது கூட்டணி பகிரங்கமான வெளிப்படையான கூட்டணி.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    Next Story
    ×