search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulwama attack"

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதுடன், பயங்கரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #IndiaPakistanConflict #MikePompeo
    வாஷிங்டன்:

    புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    சமீபத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலேவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சந்தித்தபோது, இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக "உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த பிப்ரவரி 14 ந்தேதி  இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளால் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளை  வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

    டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IndiaPakistanConflict #MikePompeo
    புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இந்திய அரசிடம் இருந்து வராத நிலையில் மசூத் அசாரை கைது செய்ய மாட்டோம் என்னும் நிலைப்பாட்டில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக தெரியவந்துள்ளது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.



    இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

    ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வலிமையான ஆதாரங்கள் இல்லாததால் நாங்கள் மசூத் அசாரை கைது செய்யவோ, தடுப்பு காவலில் அடைத்து வைப்பதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தேசிய செயல் திட்டத்தின் அடிப்படையில் மசூத் அசாரின் சகோதரர், மகன் உள்பட சிலரை கைது செய்து ஒருமாத காலம் தடுப்பு காவலில் அடைத்து வைத்திருக்கிறோம்.

    ஆனால், மசூத் அசாரின் பெயர் உள்நாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை. பாகிஸ்தானில் மசூத் அசார் எவ்வித வன்முறை தாக்குதலும் நடத்தியதில்லை. பிறகு, நாங்கள் ஏன் அவரை கைது செய்ய வேண்டும்? எனவும் அந்த உயரதிகாரி உள்நாட்டு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

    இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரின் பெயரை சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதால் அந்த இயக்கத்துக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்போவதாக பிரான்ஸ் அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Pakistangovernment #MasoodAzhar #Pulwamaattack
    டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததை அடுத்து அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #Abhinandan #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

    இதில் பயங்கரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் எப்-16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் பழுதடைந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். காற்றின் வேகம் காரணமாக அவரது பாராசூட் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. இதை பயன்படுத்தி அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.

    அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரித்தன. இந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

    அவருக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உளவியல் நிபுணர்களும் அவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். இந்த சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்தன.



    இந்த நிலையில் அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பாக அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விரைவில் அபிநந்தனிடம் மருத்துவ தகுதி சோதனைகள் நடைபெற உள்ளது.

    அவர் முழு தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகே அபிநந்தனை மீண்டும் போர் விமானியாக பணியில் இணைத்துக் கொள்வார்கள்.

    இந்திய விமானப்படை பிரிவில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக அபிநந்தன் பணியாற்றி வந்தார். மிக்-21 ரக விமானங்களை அவர் இயக்கி மீண்டும் அதே போர் விமானப்படை பிரிவில் அபிநந்தன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. #Abhinandan
    ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். #PulwamaAttack #UNHRC #PoKActivists
    ஜெனிவா:

    சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் சபை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிராந்தியத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி தலைவர் சர்தார் சவுகத் அலி காஷ்மீரி பேசும்போது, பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக போரை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

    ‘இதுபோன்று பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஊக்குவித்தால் நமது நாடு மதங்கள் மற்றும் இனங்கள் வாரியாக ஆயிரம் துண்டாக பிளவுபட்டுவிடும். எனவே பாகிஸ்தான் தனது மனநிலையை மாற்றி பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி ஐநா மனித உரிமைகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.



    மற்றொரு மனித உரிமை ஆர்வலர் மிஸ்பார் ஹசன் பேசும்போது, ‘புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு ஆயத்தமானதால் உலகமே அதிர்ச்சியடைந்தது. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதால், ஏதாவது தவறு நடந்தால் உலகிற்கே பேரழிவு ஏற்படும். எனவே, பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். #PulwamaAttack #UNHRC #PoKActivists
    புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான். #PulwamaAttack

    புல்வாம:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம் ஏற்பட்டது.

    பாகிஸ்தானிடம் இந்திய வீரர் அபிநந்தன் சிக்க நேரிட்டதால் போர் ஏற்படாமல் சுமூக நிலை உருவானது. இதற்கிடையே புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினார்கள்.

    கடந்த 3 வாரங்களில் நடந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (வயது23) என்று தெரிய வந்தது.

    அகமதுகான் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். எலக்ட்ரிசியனான இவனுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆதில் அகமதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் நண்பர்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட போகிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு குழு கண்டறிந்து இருந்தது. பிப்ரவரி 27-ந்தேதி அகமது கான் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அன்று முதல் அகமதுகான் தலைமறைவாகி விட்டான். அவனை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டவன் என்பதால் அவனை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

    நேற்று புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிரால் பகுதியில் உள்ள பிங்கிலீஸ் என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

    இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.

    இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கான் என்று தெரிய வந்துள்ளது. இவனுக்கு முகமதுபாய் என்ற பெயரும் உண்டு.

    கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் உடல்களும் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    முக்கிய பயங்கரவாதியான அகமதுகானை புல்வாமா மாவட்டத்தில் நிறைய பேருக்கு தெரியாது. எனவே செத்தது அவன்தானா? என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #PulwamaAttack

    எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தனது கட்சியினருடன் கலந்துரையாடியதை காங்கிரஸ் மற்றம் ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இன்னும் 10 தினங்களில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

    என்றாலும் பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்யவில்லை. தொடர்ந்து தினமும் அவர் திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில் இன்று மதி யம் அவர் 1 கோடி பா. ஜனதா தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந் துரையாடல் நடத்தினார். நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் காணொலி காட்சி மூலம் மோடியுடன் பேசினார்கள்.

    உலக அளவில் இந்த காணொலி காட்சி நிகழ்ச்சி சாதனை படைப்பதாக கருதப்படுகிறது. இதுவரை எந்த நாட்டின் தலைவரும் ஒரே நேரத்தில் 1 கோடி பேருடன் கலந்துரையாடல் செய்தது இல்லை. இந்த கலந்துரையாடலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசை மக்கள் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக வளர்வோம். ஒன்றாக போரிடுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்.

    இந்தியாவை பிரிப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. ராணுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதன் பிறகு பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கியது. மாநிலம் வாரியாக பா.ஜனதா தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

    தமிழ்நாட்டில் 600 இடங்களில் பிரதமர் மோடியுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் 16 இடங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்கள்.

    விருகம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அதுபோல தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு மோடியிடம் கேள்வி கேட்டனர்.

    மோடியின் இந்த கலந்துரையாடலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    நாட்டில் போர் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் அதை கவனிக்காமல் மோடி தேர்தல் பிரசாரம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடக்கும் தாக்குதல்கள் முடிவடையும் என நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #IndiaPakistanTension
    ஹனோய்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வியட்நாமில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடன் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்ப் கூறுகையில், 'இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு நிலவும் பதற்ற நிலை நிச்சயம் தணியும் என நம்புகிறேன்' என்றார். #DonaldTrump #IndiaPakistanTension
    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் குடும்பத்துக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #Abhinandan #KamalHaasan
    சென்னை:

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அபினந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொது மக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அபினந்தனின் தந்தை வர்த்தமானை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். வர்த்தமானும் முன்னாள் ராணுவ வீரர் தான். அவரிடம் கமல் கூறியதாவது:-

    ‘ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களை போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது. உங்களைப்போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அபினந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.

    இது குறித்து நான் டுவிட்டரில் எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம். எனவே தான் நான் உங்களிடம் நேரடியாக பேசுவது முக்கியம் என்று நினைத்து உங்களை அழைத்தேன். எனது அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.

    ஆனால் இன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத்தக்க செய்தி. அபினந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும் நலமுடனும் நாடு திரும்பி வருவார் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.’

    இவ்வாறு கமல் ஆறுதல் கூறினார்.

    தனக்கு ஆறுதல் கூறியதற்காக கமல்ஹாசனுக்கு வர்த்தமான் நன்றி தெரிவித்துள்ளார்.  #Abhinandan #KamalHaasan
    புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி உள்ளன. மேலும் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத் துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன் ரூ. 2.1 கோடி நிதி உதவி வழங்கினார்.



    நடிகர் அக்ஷயகுமார் ரூ.5 கோடி வழங்கினார். சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள்.

    இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ரூ.1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 24-ந் தேதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி ரூ.1 கோடி நிதி உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans #LataMangeshkar 

    விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோதும், எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். #Abhinandan
    புதுடெல்லி:

    இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

    அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.

    இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

    இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபினந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபினந்தனுக்கு சரியாக தெரியவில்லை.



    எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

    விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.

    பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.

    பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர். #Abhinandan
    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர்.



    நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவத்தினர் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-2-2019 அன்று உத்தரவிட்டு, அத்தொகை உடனடியாக வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மறைந்த துணை ராணுவ வீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-2-2019 அன்று உத்தரவிட்டார்.

    பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

    இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கயத்தார் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #PulwamaAttack #EdappadiPalaniswami
    புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியது. #PulwamaAttack #India #Pakistan
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இது குறித்து இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்தது. அப்போது அவரிடம் புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியது.

    இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக இந்தியா கூறி வரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தொடர்ந்து மறுத்து வருவது வருத்தம் அளிக்கிறது. புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதை ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து உள்ளோம். இனியாவது அவர்கள் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தனர். 
    ×