search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை முடிந்து 1 மாத மருத்துவ விடுப்பில் சென்றார் அபிநந்தன்
    X

    சிகிச்சை முடிந்து 1 மாத மருத்துவ விடுப்பில் சென்றார் அபிநந்தன்

    டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததை அடுத்து அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #Abhinandan #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

    இதில் பயங்கரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் எப்-16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் பழுதடைந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். காற்றின் வேகம் காரணமாக அவரது பாராசூட் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. இதை பயன்படுத்தி அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.

    அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா எச்சரித்தது. அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரித்தன. இந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

    அவருக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உளவியல் நிபுணர்களும் அவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். இந்த சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்தன.



    இந்த நிலையில் அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பாக அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விரைவில் அபிநந்தனிடம் மருத்துவ தகுதி சோதனைகள் நடைபெற உள்ளது.

    அவர் முழு தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகே அபிநந்தனை மீண்டும் போர் விமானியாக பணியில் இணைத்துக் கொள்வார்கள்.

    இந்திய விமானப்படை பிரிவில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக அபிநந்தன் பணியாற்றி வந்தார். மிக்-21 ரக விமானங்களை அவர் இயக்கி மீண்டும் அதே போர் விமானப்படை பிரிவில் அபிநந்தன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. #Abhinandan
    Next Story
    ×