search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pondicherry"

    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்று ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். #BSP

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

    அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

     


    மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

    புதுவை அருகே வாகன சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சேதராப்பட்டு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டன.

    வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள், பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில- மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அது போல் வானூர் சிறப்பு தேர்தல் படை பிரிவு அதிகாரி இளவரசன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று இரவு புதுவை அருகே மொரட்டாண்டி சுங்கச்சாவடி மையத்தில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உதவியோடு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அந்த காரில் 18 அட்டை பெட்டிகளில் வெள்ளி ஆபரண பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (வயது 26) மற்றும் சென்னையை சேர்ந்த முகமது ஷேக் அலி (25) என்பதும், சென்னையில் வெள்ளி நகைக்கடை நடத்தி வரும் இவர்கள் வெள்ளி பொருட்களை புதுவையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் கொடுத்து விட்டு மீதி வெள்ளி பொருட்களை சென்னைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. ஆனால், நகைகளை கொண்டு செல்லும் வாகனத்துக்கு ஆவணம் இல்லை.

    இதையடுத்து வெள்ளி பொருட்கள் மற்றும் காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 19 கிலோ எடை கொண்ட இந்த வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும். #LSPolls

    தமிழக கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. #SSLCExam
    புதுச்சேரி:

    தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப்பார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள 239 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 988 மாணவர்களும், 6 ஆயிரத்து 970 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 948 பேர் 36 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் ஆயிரத்து 294 பேர் 6 மையங்களில் தேர்வு எழுதினர்.

    காரைக்காலில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 335 மாணவர்களும், ஆயிரத்து 477 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 812 பேர் 13 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 நிலைக்குழுவும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #SSLCExam

    கோட்டக்குப்பத்தில் இன்று காலை நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி. (வயது 45). இவர் இன்று காலை 6.15 மணியளவில் கோட்டக்குப்பம் சறுக்கு பாலம் அருகே பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அங்குள்ள சாலையை கடந்து செல்ல முயன்ற போது காலாப்பட்டில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது.

    இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற தனியார் கல்லூரி பஸ் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ் செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த ஏமன் (21) மற்றும் காரில் வந்த இவரது நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஏமன் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான ஏமன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும்.



    சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #MeteorologicalCentre
    புதுவை அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர்:

    புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    புதுவையில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது62). இவர் புதுவை கால்நடை துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இவர் ரெயின்போ நகரில் கால்நடைகளுக்கான கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை மனோகரன் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ. 1½ லட்சம் பணத்தை எடுத்து பேக்கில் வைத்து தனது காரில் கொண்டு வந்தார். காரை கிளினிக் அருகே நிறுத்திவிட்டு கிளினிக் உள்ளே சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்ல காரை எடுக்க வந்தபோது காரின் பக்கவாடு கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரில் பேக்கில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோகரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
    முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    புதுச்சேரி:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதகமாக சட்டங்களை திருத்தக்கூடாது.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும்( செவ்வாய்க்கிழமை), நாளையும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தது.

    இந்த நிலையில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமின்றி புதுவை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூரில் பணி செய்யும் ஊழியர்கள் பஸ் நிலைய வாசலில் நூற்றுக்கணக்கில் பஸ்களுக்காக காத்திருந்தனர். தனியார் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வதற்காக சில பஸ்கள் மட்டும் இயங்கின. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோ, டெம்போக்களும் முழுமையாக இயங்கவில்லை.

    நகரின் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நகர பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றனர். #BharatBandh
    புதுவையில் தமிழக அரசு பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. #Bharatbandh
    புதுச்சேரி:

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

    புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Bharatbandh

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் 100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் வங்கி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 8 இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதே போல் அங்குள்ள மற்றொரு தேசிய வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 11 இருந்ததை அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் சென்னையில் உள்ள தலைமை ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ரிசர்வ் வங்கி மானேஜர் சேனாதிபதி புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை கவர்னர் கிரண்பேடியுடன் மேலும் 4 கவர்னர்கள் செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    2018-ம் ஆண்டு மத்திய அரசில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் இருந்து நாம் திட்டத்திற்காக, திட்டமில்லா செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையை செலவிட தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளோம்.

    நம் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை, மாநிலத்தில் கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களின் சம்பளத்தை தவிர மற்றவற்றை முறையாக நிறைவேற்றி வருகிறோம்.

    விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, நகர சுத்தம் என பல விருதுகளை பெற்றுள்ளோம். மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரமானது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது.

    இப்போது நிதி அயோக், உலக வங்கி இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் புதுவை மாநிலம் மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து வசதியும் பெற்ற மாநிலங்களில் இந்திய அளவில் 5-வது இடம் பெற்றுள்ளது. இது நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்தியுள்ளோம்? என்பதை தெளிவாக காட்டுகிறது.

    திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படாவிட்டால், கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் 2018-ல் இன்னும் பல சாதனைகளை படைத்திருப்போம். தடைகளை உடைத்தெறிந்து 2019-ல் மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்.

    சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு கிடைக்காததால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போது இவ்வி‌ஷயம் தீவிரமாகியுள்ளது.

    முன்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், அரசியல் கட்சிகள் வலியுறுத்துவார்கள், பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல முயற்சி எடுத்தாலும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்து மாநில அந்தஸ்து தேவை பற்றி எடுத்துக்கூறியுள்ளோம். மத்திய அரசு நிதி கமி‌ஷனில் சேர்க்காத நிலை, நமக்கு கிடைக்க வேண்டிய வரி விகிதாச்சாரப்படி கிடைக்காதது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவது ஏற்புடையது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் நாங்கள் வலியுறுத்தினோம்.

    முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை எங்கள் ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். இது மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்.

    அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், சமூக அமைப்புகள் இணைந்து வருகிற 4-ந்தேதி பாராளுமன்றம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 21 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கிறது. பா.ஜனதா, சிவசேனா தவிர அனைத்து அரசியல் கட்சிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தர கடிதம் அனுப்பியுள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ராஷ்ட்ரிய ஜனதாதளம், பகுஜன்சமாஜ் போன்ற அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.



    ஜனாதிபதி 2016-ம் ஆண்டு கவர்னர் கிரண்பேடியை புதுவை மாநிலத்திற்கு கவர்னராக நியமித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலகம் அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார். கிரண்பேடி கவர்னரா? அல்லது 5 கவர்னர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    தேவநீதிதாஸ் பதவிக்காலம் முடிந்ததும் அவரை பதவி நீட்டிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி தரவில்லை. அதை மறைத்து கவர்னர் தேவநீதிதாசை ஆலோசகராக நியமித்துள்ளதாக எனக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் மறுத்து கன்சல்டன்டாகவே தேவநீதிதாசை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன்.

    ஆனால் கவர்னர் உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை நியமித்துள்ளார். நான் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை.

    ஓ.எஸ்.டி. அண்ட் கன்சல்டன்ட் என தேவநீதிதாசை நியமித்தது தவறானது. கவர்னர் அலுவலகத்திற்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கடிதம் அனுப்பினேன். ஆனால் கவர்னர் யாரையும் நியமிக்காமல் தேவநீதிதாசை செயலாளர் போல நியமித்துள்ளார். அதிகாரிகளை அழைப்பது, கூட்டம் நடத்துவது என கவர்னர் வேலையை தேவநீதி தாஸ் செய்ய முடியாது. அவர் 2-வது கவர்னராக செயல்படுகிறார்.

    மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார். இவர் 3-வது துணைநிலை ஆளுநர். 4-வது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். 5-வதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார். அவர் 5-வது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வரும்.

    கவர்னர் கிரண்பேடி 3 மாதம் இருப்பார். அதன்பிறகு மற்ற அதிகாரிகள் எங்கே செல்வார்கள்? புதுவை சிறிய மாநிலம். அவர்கள் பணியை அவரவர் செய்ய வேண்டும். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு 3 மாதத்தில் விடை கிடைக்கும். புதுவையில் அரசு ஆட்சி நடக்கிறதா? கோமாளிகள் ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை.

    பொய்யான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    கவர்னரால் திட்டத்தை தள்ளிப்போட முடியும். தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்றுதான் நாங்கள் வருந்துகிறோம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து வருகின்றன. எனவே 2019-ம் ஆண்டு புதுவை மாநில மக்களுக்கு நன்மைகளை அளிக்கும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #CMNarayanasamy

    புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் சாராய கடை, கள்ளுக்கடை இயங்கி வந்தது.

    தற்போது புதிதாக மதுபான கடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கோவில், கல்வி நிலையம், குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் சாராயம், மதுபான கடைகள் இயங்கக்கூடாது. இதை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்காக முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் 2 மாதமாக கடைகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என சோ‌ஷலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்ற கம்யூனிஸ்டு அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

    இதற்காக இன்று காலை கருவடிகுப்பம் சித்தானந்தா கோவில் அருகில் நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.

    தொகுதி செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி செயலாளர் பிரளயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து, தலைவர் சிவக்குமார், நிர்வாகி சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சங்கர், இப்ராகிம், முனுசாமி, தன்ராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மதுக்கடை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் சுமார் 50 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    ×