search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomb throw"

    புதுவை அருகே இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அருகே ஏம்பலத்தை அடுத்த மணக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது31). காங்கிரஸ் பிரமுகரான இவர் சமீபத்தில் நடந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    சபரிக்கு திருமணமாகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் பிறந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளன. ஹேமாவதி கைக்குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சபரி தனது தாய் ராஜேஸ்வரி, தம்பி சுரேந்தர் மற்றும் மகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் சபரி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி மீது வெடிகுண்டு சிதறல்கள் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே ராஜேஸ்வரி மற்றும் சபரி அவரது தம்பி சுரேந்தர் வீட்டில் இருந்து வெளியே அலறியடித்து ஓடிவந்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசியல் விரோதம் காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசி இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    புதுவை அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர்:

    புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    தருமபுரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மாது (வயது 55). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் தனியார் கல் குவாரியில் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியில் உள்ள அரசு கல் குவாரி அருகே வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டின் சமையல் அறை, சிமெண்டு அட்டைகளால் வேயப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு 8 மணிக்கு மாது வீட்டில் இருந்தார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் சிமெண்டு அட்டைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. வெடிகுண்டு துகள் பட்டு காயமடைந்த மாது பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து மாது கூறியதாவது:-

    என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக எனது வீட்டில் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். வெடி பட்டதில் சிமெண்டு அட்டைகள் சிதறி என்மேல் பட்டு எனக்கும் காயம் ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று வெடித்த வெடி மருந்து எந்த வகையை சேர்ந்தது என்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். உண்மையிலேயே வெடித்தது வெடிகுண்டா? அல்லது பாறைகளில் வெடி வைத்து தகர்க்க பயன்படும் வெடி மருந்தா? என்றும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    மாதுவும், கல் குவாரியில் வேலை பார்ப்பதால் அவர் தனது வீட்டில் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து அது வெடித்ததா? என்ற கோணத்திலும் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கைக்கு பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இரவு சுந்தர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சுந்தர் வீட்டின் மீது 2 மண்எண்ணை குண்டுகளை வீசி தப்பி சென்றுவிட்டனர்.

    வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் மீது விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுந்தர், குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் ஞானசுந்தர், இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மண்எண்ணை குண்டுகளை வீசியது விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    இதையடுத்து மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வெள்ளை மணி என்கிற வினோத், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றவாளியான தக்காளி பிரபா, கூட்டாளிகள் சரவணன், புறா முத்து, பார்த்திபன் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த அன்று காலை பெட்ரோல் பங்க்கில் உள்ள அலுவலகத்தில் தக்காளி பிரபா கோஷ்டியினர் செல்போன் திருடி உள்ளனர்.

    இது தொடர்பாக சுந்தர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த கோபத்தில் அவரது வீட்டில் மண்எண்ணை குண்டுகளை தக்காளி பிரபா கோஷ்டியினர் வீசி இருப்பது தெரிந்தது. #Tamilnews
    ஸ்ரீவைகுண்டம் தொழில் அதிபர் மீது குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க நிர்வாகி உள்பட 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மருந்து கழிவுகள் உள்ளிட்ட இதர கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சுற்று சூழலை மாசுப்படுத்தும் நபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதனால் பிற மாநிலங்களில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளையும் இதர கழிவுகளையும் இரவோடு இரவாக பல கனரக வாகனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அக்கழிவுகளை சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்பட்டு புதுப்புது நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வல்லநாடு மான்கள் சரணாலயம் அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் குப்பைகளும் மருத்துவக் கழிவுகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக கொட்டப்பட்டது. இதை பார்த்த நிலத்தின் மேற்பார்வையாளரும் தொழிலதிபருமான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவராமன்(எ) ராஜா(39) என்பவர் அந்நிலத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதையும் குப்பைகளில் வெளி நாட்டினர்களின் அடையாள அட்டையும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும், அந்நிலத்தில் இருந்து செம்மண் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரினை தொடர்ந்து, வருவாய் துறையினரும் காவல் துறையினரும் நேற்று அக்குப்பைக் கழிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது, அவ்விடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்து கொண்டு இருந்த 5 கனரக வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பறிமுதல் செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவராமன்(எ)ராஜா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் பொழுது மேடைபிள்ளையார் கோயில் அருகில் எதிரே காரிலும் பைக்கிலும் வந்த மர்மநபர்கள் வெடி குண்டுகளை வீசினர். இதில், நிலை தடுமாறிய சிவராமனை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற அவரது உறவினரான நல்லமாடன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி காவல் ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை தண்ணீர் வாளியில் போட்டு போலீசார் செயல் இழக்க செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜாரில் நடைபெற்ற வெடிகுண்டு வீசி தொழிலதிபர் உள்பட இரண்டு பேரையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சிவராமன்(எ) ராஜா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், இவரது உறவினர்களான பேச்சி முத்து, கருப்பசாமி, ராமன் உள்ளிட்ட 9 பேர்தான் சிவராமன் மீது வெடிகுண்டுகளை வீசியது என தெரியவந்தது. இதையடுத்து 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×