search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikuntam businesssman"

    ஸ்ரீவைகுண்டம் தொழில் அதிபர் மீது குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க நிர்வாகி உள்பட 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மருந்து கழிவுகள் உள்ளிட்ட இதர கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சுற்று சூழலை மாசுப்படுத்தும் நபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதனால் பிற மாநிலங்களில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளையும் இதர கழிவுகளையும் இரவோடு இரவாக பல கனரக வாகனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அக்கழிவுகளை சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்பட்டு புதுப்புது நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வல்லநாடு மான்கள் சரணாலயம் அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் குப்பைகளும் மருத்துவக் கழிவுகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக கொட்டப்பட்டது. இதை பார்த்த நிலத்தின் மேற்பார்வையாளரும் தொழிலதிபருமான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவராமன்(எ) ராஜா(39) என்பவர் அந்நிலத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதையும் குப்பைகளில் வெளி நாட்டினர்களின் அடையாள அட்டையும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும், அந்நிலத்தில் இருந்து செம்மண் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரினை தொடர்ந்து, வருவாய் துறையினரும் காவல் துறையினரும் நேற்று அக்குப்பைக் கழிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது, அவ்விடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்து கொண்டு இருந்த 5 கனரக வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பறிமுதல் செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவராமன்(எ)ராஜா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் பொழுது மேடைபிள்ளையார் கோயில் அருகில் எதிரே காரிலும் பைக்கிலும் வந்த மர்மநபர்கள் வெடி குண்டுகளை வீசினர். இதில், நிலை தடுமாறிய சிவராமனை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற அவரது உறவினரான நல்லமாடன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி காவல் ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை தண்ணீர் வாளியில் போட்டு போலீசார் செயல் இழக்க செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜாரில் நடைபெற்ற வெடிகுண்டு வீசி தொழிலதிபர் உள்பட இரண்டு பேரையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சிவராமன்(எ) ராஜா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், இவரது உறவினர்களான பேச்சி முத்து, கருப்பசாமி, ராமன் உள்ளிட்ட 9 பேர்தான் சிவராமன் மீது வெடிகுண்டுகளை வீசியது என தெரியவந்தது. இதையடுத்து 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×