என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக நிர்வாகி"

    • வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
    • அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.

    கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.

    மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
    • சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவில், "தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!

    எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!

    சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அதன் உறுதிமிக்க தொண்டர்களால் உருவானது. அவர்களே கழகத்தின் முகவரி. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சேவை புரிந்து, கழகத்தின் அடையாளமாய் திகழும் திரு. சக்திவேல் அவர்களின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தேன்.

    கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களும் தொலைபேசி வழியாக அவரிடம் பேசி ஊக்கமளித்ததோடு, கழகம் என்றும் துணைநிற்கும் என உறுதியளித்தார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.
    • 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து அதனை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் அங்கு வந்து செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மர்மநபர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வரும் அந்த வாலிபர்கள் வீட்டின் முன்புள்ள தெருவில் வைத்து பெட்ரோல் குண்டை பற்ற வைப்பதும், 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவதும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. செல்வசங்கர் அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சாமியாடி வந்துள்ளார்.

    இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனிடையே போலீசாரும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்
    • இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்த பணிக்கு 18 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் கூறுகிறார்.

    மேலும், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் பலருக்கும் இந்த கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டி உள்ளது.

    எனவே கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்கு தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம் என்று அந்த நிர்வாகி கூறுகிறார்.

    அப்போது எதிரே அமர்ந்து பேசும் ஒப்பந்ததாரர், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும், ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது என்று கூறுகிறார்.

    ஆனால் அந்த நிர்வாகி, அது எல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.
    • எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி.நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக மேனகா(32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மேனகா உங்கள் கார்டுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். மற்றவர்கள் கார்டுகளை மொத்தமாக எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.

    என்னிடமே நியாயம் கேட்கிறாயா என அமீர்பாட்சா அந்த விற்பனையாளரை மிரட்டி நான் பல ஆண்டுகளாகவே இதேபோல மொத்தமாக மூட்டை மூட்டையாக வாங்கி சென்றுள்ளேன். நீ புதிதாக வந்ததால் உனக்கு அதைப்பற்றி தெரியாது. எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார். மேனகா கெஞ்சியும் அவர் கேட்காமல் மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர்.
    • பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பிரேம்ராஜா. இவர் திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

    இவர் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார். பிரேம் ஜி.எஸ்.டி. வரியை சரியாக கட்டுவதில்லை என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு பாக்கி வைத்துள்ளார் என்பது தொடர்பாக சோதனைகளை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    • வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
    • 100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மணியகாரம்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க நிர்வாகியான இவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை 19-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கிறேன். மணியகாரம்பாளையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தள்ளு வண்டியில் இரவு நேரத்தில் 2 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயரின் கணவர் ஆனந்தகுமார் எனது கடைக்கு வந்தார். அப்போது அவர் என்னிடம், நான் கடை நடத்தி வரும் இடத்திற்கு வாடகையாக ஒரு தொகையினை கேட்டார்.

    எனது குடும்பமே இந்த கடையில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஓடுகிறது. அப்படி இருக்கையில் நான் எப்படி பணம் கொடுப்பது என தெரிவித்தேன்.

    அதற்கு அவர், பக்கத்தில் இருக்கும் கழிவறையை பராமரித்து, அதில் கட்டணம் வசூலித்து கொள்ளுங்கள். மாதம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு மீதியை நீங்கள் வருமானமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினார். இலவசமாக கட்டப்பட்டு உள்ள கழிப்பிடத்துக்கு பணம் வசூலித்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்பதால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் மாநகராட்சி ஊழியர்களை வைத்து எனது தள்ளுவண்டி கடையை எடுத்து கொண்டு போய்விட்டார். மேலும் எனக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு இல்லை. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்று காலை தி.மு.க நிர்வாகியான ரங்கநாதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் நாங்கள் மாநகராட்சியில் இருந்து பேசுகிறோம். உங்கள் தள்ளுவண்டியை நீங்கள் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தள்ளுவண்டி நின்றிருந்தது. இதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

    புகார் தொடர்பாக மேயர் கல்பனா கூறியதாவது:-

    100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள். தொட்டதெற்கெல்லாம் எனது கணவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    கக்கன் வீதியில் மாநகராட்சி கழிப்பறை சிதிலமடைந்து இருந்தது. அங்கு ஒருவர் கட்டில் போட்டு படுத்து கொண்டு கட்டணம் வசூலித்தார். கழிப்பறைக்கு அருகே ஸ்டாண்ட் வைத்து கொண்டு எப்போதும் 4 பேர் நிற்கின்றனர். பெண்கள் எப்படி அங்கு வருவார்கள்.

    தள்ளுவண்டியை இரவில் நடத்தி விட்டு பகலில் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் நிரந்தரமாக அங்கு கூடாரம் அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. தற்போது மாநகராட்சி அலுவலர்கள் சென்று அகற்றி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு எனது கணவரை காரணம் சொல்கிறார்கள். தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
    • வீடு, தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதன் என்பதால் அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

    • சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
    • வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாளாக வருமான வரிச்சோதனையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனையானது கோவையிலும் நீடிக்கிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்குள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டில் நடந்த சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது.

    மீனா ஜெயக்குமார் வீடு உள்பட மற்ற இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நீடித்தது.

    மீனா ஜெயக்குமாரின் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் அவர்களது வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக அவரது வீட்டில் சோதனையானது நீடிக்கிறது. இந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அங்கு 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்குள்ள ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

    கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
    • அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

    சென்னை அடுத்த வண்டலூரில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக நிர்வாகி ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதையடுத்து, திமுக நிர்வாகி ஆராமுதனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    திமுக நிர்வாகியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க. 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை நியமித்து பணியாற்றி யார்-யார் எந்த கட்சியை சார்ந்தவர் என பட்டியல் எடுத்து அதற்கேற்ப வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு தெருவிலும் யார் யார் உள்ளூர்காரர் யார் வெளியூர்காரர் என எங்கு ஓட்டு போடுவார்கள் என்பதை அறிந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொருவரும் சொந்த பணத்தை செலவு செய்து கலக்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சேரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன் காரணமாக உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பகுதி கழக, ஒன்றிய, நகர பேரூர் சட்டமன்ற கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகளுக்கு மட்டுமே வேட்பாளர் பணம் கொடுப்பதால் மற்ற தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகிகளே பணம் செலவு செய்வதை காண முடிகிறது.

    ×