search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK administrator"

    • சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
    • வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாளாக வருமான வரிச்சோதனையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சோதனையானது கோவையிலும் நீடிக்கிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்குள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டில் நடந்த சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது.

    மீனா ஜெயக்குமார் வீடு உள்பட மற்ற இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நீடித்தது.

    மீனா ஜெயக்குமாரின் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் அவர்களது வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக அவரது வீட்டில் சோதனையானது நீடிக்கிறது. இந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    அங்கு 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்குள்ள ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.

    கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

    • சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்
    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகினற 27-ந்தேதி அன்று வெளியிட உள்ளது.

    வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர நவம்பர் மாதத்தில் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,

    ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வேணு,பாஸ்கர் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர்.
    • தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமான மாக வைத்து ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர். இதில் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த வேணு ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கட்டியுள்ளார். மீதி தொகை யை கட்டுவதற்கு காலதாம தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாஸ்கருக்கும், வேணுவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன் என்பவர் மூலமாக வேணு விடம் பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து வேணுவை கடத்தினர். வானூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தில் இருந்து கடத்தி, மாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வேணு, வாட்ஸ்அப் மூலமாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேணுவின் மனைவி கிளியனூர் போலீஸ் நிலையம் சென்றார். தனது கணவரை கடத்தி சென்று மாத்தூரில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டு மெனவும், வாட்ஸ்அப் தரவுகள் மூலம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிளியனூர், கோட்டக்குப்பம் போலீசார் மாத்தூருக்கு விரைந்து சென்று வேணுவை மீட்டனர். மீட்கப்பட்ட வேணு, தன்னை தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதி, நீல மேகம், செல்வம் ஆகியோர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக கிளியனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டி டம் வேணு மனு கொடுத்துள் ளார். இந்த சம்பவம் கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஒருவர் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரை ்அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. இவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவர் அதே ஊரில் வசிப்பவரிடம் ரூ.30 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக இதுவரை ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம் வழங்கிய பின்பும், மீதம் ரூ.20 ஆயிரம் தரவேண்டுமென நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கடன் கொடுத்தவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு வந்த போலீசார், சிவகுரு மற்றும் அவரது மனைவியை மிரட்டி பணம் கொடுக்க வலியுறுத்தினர். எனவே, கடன் கொடுத்த நபர் மீதும், வீட்டிற்கு வந்து மிரட்டிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவகுரு கூறினார். கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென தி.மு.க. பிரமுகர் சிவகுருவிற்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர்.
    • பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பிரேம்ராஜா. இவர் திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

    இவர் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார். பிரேம் ஜி.எஸ்.டி. வரியை சரியாக கட்டுவதில்லை என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு பாக்கி வைத்துள்ளார் என்பது தொடர்பாக சோதனைகளை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    • கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர்
    • பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார்.

    பல்லடம்:

    பல்லடத்தில் சமூக வலைதளங்களில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுபான பாரில் கூடுதலாக விலை அதிகம் வைத்து விற்பனை செய்வது குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    அதில் பல்லடம் மதுபான பாரில் பீர் குடிக்க சென்றேன். அதற்கு 300 ரூபாய் என்றனர். கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர். பல்லடத்தில் இவ்வளவு அதிகமாக பில் போடுகிறீர்களே என்று கேட்டபோது, அந்த பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார். எந்தக் கட்சிக்கா ரர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்று நான் கேட்டபோது எல்லா கட்சிக்கும் தான் என்றனர்.

    எதற்காக கட்சிக்காரர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இது கட்சி தலைமை வரை இது தெரியட்டும் என்றுதான் இந்த பதிவை போடுகிறேன். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்
    • இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்த பணிக்கு 18 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் கூறுகிறார்.

    மேலும், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் பலருக்கும் இந்த கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டி உள்ளது.

    எனவே கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்கு தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம் என்று அந்த நிர்வாகி கூறுகிறார்.

    அப்போது எதிரே அமர்ந்து பேசும் ஒப்பந்ததாரர், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும், ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது என்று கூறுகிறார்.

    ஆனால் அந்த நிர்வாகி, அது எல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பிரமுகரின் காரை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள் ஆந்திர கும்பல் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரது கார் டிரைவராக பணியாற்றி வருபவர் பாளை தியாகராஜநகரை சேர்ந்த துரை (வயது40).

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரமசிவ அய்யப்பன் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 17 லட்சம் ரூபாயை எடுத்து வருமாறு கார் டிரைவர் துரையிடம் கூறினார்.

    அதன்படி அவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சமாதானபுரம் எஸ்.பி. அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மகும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.

    இது தொடர்பாக பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படைகள் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை கைப்பற்றி அதில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ பகுதியில் அதிகநேரம் செல்போன் பேசியவர்கள் தகவலும் சேகரிக்கப்பட்டது.

    அப்போது கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (65) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு கொள்ளை கும்பல் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    அப்போது சுப்பிரமணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று கொண்டிருந்தார். அவர்களை தனிப்படையினர் விரட்டி சென்றனர்.

    இதையறிந்த கொள்ளையர்கள் சித்தூர் காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்ட போது அதில் ரூ. 17 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரூ. 17 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த தனிப்படையினர் அதனை நெல்லை கொண்டு வந்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டம் தொழில் அதிபர் மீது குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க நிர்வாகி உள்பட 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மருந்து கழிவுகள் உள்ளிட்ட இதர கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சுற்று சூழலை மாசுப்படுத்தும் நபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதனால் பிற மாநிலங்களில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளையும் இதர கழிவுகளையும் இரவோடு இரவாக பல கனரக வாகனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அக்கழிவுகளை சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்பட்டு புதுப்புது நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வல்லநாடு மான்கள் சரணாலயம் அருகில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் குப்பைகளும் மருத்துவக் கழிவுகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக கொட்டப்பட்டது. இதை பார்த்த நிலத்தின் மேற்பார்வையாளரும் தொழிலதிபருமான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவராமன்(எ) ராஜா(39) என்பவர் அந்நிலத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதையும் குப்பைகளில் வெளி நாட்டினர்களின் அடையாள அட்டையும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும், அந்நிலத்தில் இருந்து செம்மண் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரினை தொடர்ந்து, வருவாய் துறையினரும் காவல் துறையினரும் நேற்று அக்குப்பைக் கழிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது, அவ்விடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்து கொண்டு இருந்த 5 கனரக வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பறிமுதல் செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவராமன்(எ)ராஜா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் பொழுது மேடைபிள்ளையார் கோயில் அருகில் எதிரே காரிலும் பைக்கிலும் வந்த மர்மநபர்கள் வெடி குண்டுகளை வீசினர். இதில், நிலை தடுமாறிய சிவராமனை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற அவரது உறவினரான நல்லமாடன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உதவி காவல் ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வெடிக்காமல் இருந்த வெடிகுண்டை தண்ணீர் வாளியில் போட்டு போலீசார் செயல் இழக்க செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் பஜாரில் நடைபெற்ற வெடிகுண்டு வீசி தொழிலதிபர் உள்பட இரண்டு பேரையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சிவராமன்(எ) ராஜா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகுண்டபாண்டியன், இவரது உறவினர்களான பேச்சி முத்து, கருப்பசாமி, ராமன் உள்ளிட்ட 9 பேர்தான் சிவராமன் மீது வெடிகுண்டுகளை வீசியது என தெரியவந்தது. இதையடுத்து 9 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×