search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil"

    நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி பேராசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது.

    இதைதொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்த திரேசா (வயது 60) என்ற ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை காய்ச்சல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க திறக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் திரேசாவை அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திரேசாவுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை திரேசா இறந்துவிட்டார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்புடன் வேறு சில உடல் நலக்குறைவுகளும் இருந்ததால் அவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்கள், ஒரு வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அதேப்போல நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல்நலம் தேரி வருவதாகவும், அவர்கள் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பன்றி காய்ச்சலுக்கு ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை பலியானதை தொடர்ந்து பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பேராசிரியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை 2 பெண்கள் கவனித்து வந்தனர். அவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நோய் தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. பன்றி காய்ச்சலால் இறந்த ஓய்வு பெற்ற பேராசிரியை வசிக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    தற்போது விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இதனால் யாராவது மாணவ, மாணவிகள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்து உள்ளார்களா? என்பதை பற்றி தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சம்மந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்கு சுகாதார ஊழியர்கள் நேரில் சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஆய்வு செய்வார்கள். மேலும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீசுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    நாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். #Rain
    நாகர்கோவில்:

    தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை 5 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழையின் வேகம் நேரம் செல்ல, செல்ல அதிகரித்தது. சுமார் 3½ மணி நேரமாக கன மழை பெய்தது.

    இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக கோட்டார் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கித் தவித்தன. பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களும் நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்த பெற்றோரும் மழையில் சிக்கித் தவித்தனர். ஒருசிலர் மழையில் நனைந்தவாறே பள்ளிக்கு சென்றனர். குடை பிடித்தவாறும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிக்கு ஆளானார்கள்.

    செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் வெள்ளம் அதிகமாக இருந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது. 3 மணி நேரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், இடலாக்குடி, சாமிதோப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை அணை பகுதிகளிலும் நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    சிற்றாறு 1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை 15.75 அடியாக உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 27 அடியாக இருந்தது. அணைக்கு 482 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 657 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 70.30 அடியாக இருந்தது.

    அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் மழை பெய்து வருவதாலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-1, சிற்றாறு1-4, சிற்றாறு2-7, ஆணைக்கிடங்கு-3, குளச்சல்-6.4, குருந்தன்கோடு-25.6, அடையாமடை-8, திற்பரப்பு-9.8, நாகர்கோவில்- 26.2, கன்னிமார்-4.6, பாலமோர்-28.  #Rain

    வருகிற டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06011) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06012) செங்கோட்டையில் இருந்து 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி வழியாக செல்லும்.

    சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06001) டிசம்பர் 14 மற்றும் 28-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06002) நெல்லையில் இருந்து 9 மற்றும் 16-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும்.

    தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் (06027) டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06028) கொல்லத்தில் இருந்து 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடமான், புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரா, குந்தாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06008) 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இந்த அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-அகமதாபாத் (06051) டிசம்பர் 1, 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கும், சென்டிரல்-சந்திரகாச்சி (06058) டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கும், புதுச்சேரி-சந்திரகாச்சி (06010) டிசம்பர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கும் சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது. 

    விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ.36 கோடி வழங்கப்பட்டது. குளச்சலில் ரூ.96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.



    தற்போது எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையல்ல. பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது ஸ்டாலினுக்கே பொருந்தும் என அவர் அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்றனர். #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.



    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Expresstrains
    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று இந்த வழியாக ரெயில் போக்குவரத்து தடைபட்டது. தண்டவாள சீரமைப்பு பணி இன்றும் நீடிக்கிறது. இதனால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்..

    1. காலை 6.30 மணி:- நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில்

    2. காலை 7.55 மணி:- நாகர்கோவில்- கொச்சுவேளி பயணிகள் ரெயில்

    3. காலை 10.50 மணி:- கன்னியாகுமரி-பெங்களூரு ஐலேண்டு எக்ஸ்பிரஸ்

    4. மதியம் 12.20 மணி :- நாகர்கோவில்-கோட்டயம் பயணிகள் ரெயில்

    5. மாலை 3 மணி:- கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரெயில்

    6. மாலை 4.50 மணி:- கன்னியாகுமரி-கொல்லம் மெமூ ரெயில்

    7. மாலை 6.20 மணி:- நாகர்கோவில்-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில்

    8. காலை 9.40 மணி:- சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

    9. மதியம் 1.52 மணி:- திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

    இதுபோல் மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு வரும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. #Expresstrains
    நாகர்கோவிலில் செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த இளைஞரை போலீசார் தட்டிக்கேட்ட நிலையில், போலீசாரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #Nagercoil #Trafficpolice
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    நேற்று மதியம் கலெக்டர் அலுவலக சந்திப்பில் தெற்கு பகுதி நோக்கி வாகனங்கள் சென்றதால் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக செல்போனில் பேசிக்கொண்டே வேகமாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    முதலில் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாரை இடிப்பது போல தனது வண்டியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை தட்டிக் கேட்டனர். ஆனால் வாலிபர் திடீரென போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.



    இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அவர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அந்த வாலிபர் குமரி காலனியை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் ஸ்ரீநாத் (வயது 32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். #Nagercoil #Trafficpolice

    நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ஊர்வலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்தியது தொடர்பாக 140 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #PonRadhakrishnan #BJP
    நாகர்கோவில்:

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி நேற்று நாகர்கோவிலில் பாரதிய ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் அவரும் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் ஓட்டிச்சென்றார்.

    இந்த பேரணி நாகர் கோவில் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் திரளான பாரதிய ஜனதா கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாக வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    இதைதொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட இளைஞரணி தலைவர் நீலேஷ்ராம், பாரதிய ஜனதா நகரத்தலைவர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட 140 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 143, 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #PonRadhakrishnan #BJP
    நாகர்கோவிலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்தவர் அமீர் சாகாவத் கான் (வயது 27). இவர் திருவிழா கடைகளில் துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு, இரணியல் தலக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசினர். செல்போனிலும் பேசி மகிழ்ந்தனர்.

    அந்த பெண் தான் வேலையில்லாமல் தவிப்பதாகவும், தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரும்படி கூறியிருந்தார். அமீரும், அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து இருப்பதாகவும், உடனடியாக அங்கு வருமாறும் அந்த பெண்ணிடம் அமீர் கூறினார். அவர் சொன்னபடி அந்த பெண்ணும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர் வரும்போது திக்கணங்கோட்டைச் சேர்ந்த தனது தோழியையும் அழைத்து வந்திருந்தார்.

    அவர்கள் 2 பேரையும் வெளியே நிறுத்தி விட்டு அமீர் மட்டும் முதலில் அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு அதிகாரி இருப்பார், அவரை போய் பாருங்கள், உங்களுக்கு வேலை போட்டு கொடுப்பார் என சொன்னார். போகும்போது நகை அணிந்து செல்ல வேண்டாம், என்னிடம் கழற்றி கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று அமீர் கூறினார்.

    அதை நம்பி 2 பெண்களும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி அமீரிடம் கொடுத்தனர். அமீர் சொன்னபடி அங்கு அலுவலகத்தில் எந்தவொரு அதிகாரியும் இல்லை. இதனால் 2 பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அப்போது அமீர் மாயமாகி இருந்தார்.

    அமீருடன் பழகிய பெண் கவரிங் நகைகள் மட்டுமே அணிந்திருந்தார். அவரது தோழி 2½ பவுன் நகை அணிந்திருந்தார். அந்த நகையுடன் அமீர் மாயமானது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அந்த 2 பெண்களும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீரை தேடி வந்தனர். நேற்று இரவு கோட்டார் பகுதியில் பதுங்கியிருந்த அமீரை போலீசார் கைது செய்தனர்.

    எனக்கு தலக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் அவர் நாகர்கோவிலில் உள்ள பூங்காவுக்கு வருவார். அங்கு பூங்காவில் அமர்ந்து பேசுவோம். நான் அந்த பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன்.

    ஆனால் அந்த பெண்ணோ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதற்கு பழி வாங்குவதற்காக அவரிடம் இருந்து நகை பறிக்க முடிவு செய்தேன். அதற்காக வேலை வாங்கி தருவதாக கூறி அவரை நாகர்கோவில் வரவழைத்தேன். ஆனால் அவரோ தனது தோழியையும் வரவழைத்திருந்தார்.

    இருந்தாலும் எனது திட்டப்படி அவர்களிடம் இருந்து நகை பறித்தேன். வடசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நகையை அடகு வைக்கச் சென்றேன். அங்கு நான் பழகிய பெண்ணிடம் இருந்து வாங்கிய நகை கவரிங் என்பதும், அவர் தோழியிடம் இருந்து வாங்கிய 2½ பவுன் நகை மட்டும் ஒரிஜினல் என்பதும் தெரியவந்தது. அதனால் அந்த 2½ பவுன் நகையை மட்டும் அடகு வைத்து அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமீர் அடகு வைத்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். #Tamilnews
    நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

    மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் அடங்கிய குழு தினந்தோறும் திட்டம் வகுக்கிறது என்று நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசினார்.

    இரவு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இங்கு வந்துள்ளேன். நான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. ஆனால் சிறு பிள்ளையாக இருக்கும்போது எனது ஆசான் டி.கே. சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.

    ஒருவகையில் பார்த்தால் நான் கல்வி கற்ற ஊர்களில் இதுவும் ஒன்று. நான் கற்ற கல்வி கலை தான். அதை எனக்கு கற்று தந்த ஆசான் இந்த ஊர்க்காரர் தான். அவ்வை சண்முகம் என்று நாடு போற்றும் அந்த அறிஞரின் கடைநிலை மாணவன் நான்.

    இன்று இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் நடுவில் நின்று பேசுவீர்களா? என்று 10, 15 வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் பேசுவேன் சினிமாக்காரன் தானே கூட்டத்தை பார்த்து பேசுவேன் என்று சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது சினிமாக்காரனாக அல்ல. உங்களில் ஒருவனாக, உங்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். இது தமிழகம் ஒரு புது மாற்றத்தை நோக்கி நகரும் வேளை. அதை நகர்த்தப்போகும் கரம் உங்களின் கரங்கள். இந்த கரங்களின் உதவியுடன் தான் நாளை நமதாகப் போகிறது.

    எனக்கு சிலர் அறிவுரை சொன்னார்கள். எதற்கு மெனக்கிட்டு இவ்வளவு தூரம் போக வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் சனி, ஞாயிறு அன்று பேசினால் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமே. உடம்பு வலியில்லாமல் சென்னையில் இருந்தே செய்யலாமே என்று அறிவுரை வந்தது.

    ஒரு பக்கம் பார்த்தால் அறிவுப்பூர்வமாக அது சரியாக இருக்கலாம். ஆனால் உணர்வுப்பூர்வமாக உங்களை சந்திப்பதற்கு நிகரானது எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்காக அந்த 4.5 கோடி பேரை நான் மதிக்கவில்லை என்றில்லை. அவர்களை நான் உணர்கிறேன். இங்கே நான் உங்களை பார்க்கிறேன், உணர்கிறேன். நீங்களும் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கண்களை பார்க்க முடிகிறது. அந்த அன்பை பார்க்க முடிகிறது.

    மக்கள் நீதி மய்யம் என்ன செய்யும் என்று பட்டியல் போடும் வேளை இதுவல்ல. ஆனால் யாருக்காக செய்யும் என்பதை சுட்டிக்காட்டலாம் உங்களுக்காக. இங்கே நாங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறோம்.


    நான் இப்போது மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை, பயணம் உங்களை பற்றி நான் கற்றுக் கொள்வதற்காக. உங்களுக்கு செவி சாய்ப்பதற்காக. இப்பொழுதே உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து விடுவேன் என்று மார்தட்டி கொள்ள முடியாது. என்னை போலவே உங்கள் பால் அன்பு கொண்டவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உங்களுக்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக எப்படியெல்லாம் நாம் குறைகளை தீர்க்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திற்காக பிரத்யேகமாக 17 பேர் அடங்கிய அந்த ஹார்வேர்ட் குழு தினந்தோறும் இதற்காக யோசித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் செய்திகள் சேகரித்துக் கொடுத்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் குறைகளை அறிந்து கொஞ்சம், கொஞ்சமாகஅவர்களிடம் அதை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது பேச்சு இதை செய்யப் போகிறேன், அதை செய்யப் போகிறேன் என்று மார்தட்டும் வீண் பேச்சாக இருக்காது.

    என் மவுனத்தை கலைக்க சொல்கிறீர்கள். என்னுடைய மவுனம் எப்போதோ கலைந்து விட்டது. நீங்கள் மவுனமாக இருந்ததால் இதுவரை நானும் மவுனமாக இருந்தேன். இன்று நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்கும் நேரமிது.

    நான் உங்களிடம் பேச வந்தது, உங்களிடம் கேட்க வந்தது அனைத்தையும் நீங்கள் பட்டியல் போட்டு கொடுங்கள். எங்கள் கட்சியினர் உங்கள் ஊருக்கு வருவார்கள். கிராம சபை கூட்டங்களில் அனைவரும் பங்கேற்று குறைகளை கூறுங்கள். இதனை நான் பல இடங்களில் தெளிவாக வலியுறுத்தி உள்ளேன்.

    குளச்சலில் மீனவ நண்பர்களை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டேன். நாகர்கோவிலிலும் எனக்கு பல புகார்கள் வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராகி விட்டவர்கள், தயவு செய்து மய்யம் விசில் என்ற செயலியை உங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேச நினைத்ததை எல்லாம் அதில் சொல்லலாம். அதை என்னால் கேட்க முடியும். உங்கள் குறைகளை கேட்க வேண்டியது என் கடமை. அதை நான் கேட்டே தீருவேன். மீண்டும் வருவேன், வரவேண்டி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    ×