search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான அமீர்.
    X
    கைதான அமீர்.

    நாகர்கோவிலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

    நாகர்கோவிலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்தவர் அமீர் சாகாவத் கான் (வயது 27). இவர் திருவிழா கடைகளில் துணி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு, இரணியல் தலக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசினர். செல்போனிலும் பேசி மகிழ்ந்தனர்.

    அந்த பெண் தான் வேலையில்லாமல் தவிப்பதாகவும், தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரும்படி கூறியிருந்தார். அமீரும், அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

    கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து இருப்பதாகவும், உடனடியாக அங்கு வருமாறும் அந்த பெண்ணிடம் அமீர் கூறினார். அவர் சொன்னபடி அந்த பெண்ணும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர் வரும்போது திக்கணங்கோட்டைச் சேர்ந்த தனது தோழியையும் அழைத்து வந்திருந்தார்.

    அவர்கள் 2 பேரையும் வெளியே நிறுத்தி விட்டு அமீர் மட்டும் முதலில் அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு அதிகாரி இருப்பார், அவரை போய் பாருங்கள், உங்களுக்கு வேலை போட்டு கொடுப்பார் என சொன்னார். போகும்போது நகை அணிந்து செல்ல வேண்டாம், என்னிடம் கழற்றி கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று அமீர் கூறினார்.

    அதை நம்பி 2 பெண்களும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி அமீரிடம் கொடுத்தனர். அமீர் சொன்னபடி அங்கு அலுவலகத்தில் எந்தவொரு அதிகாரியும் இல்லை. இதனால் 2 பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அப்போது அமீர் மாயமாகி இருந்தார்.

    அமீருடன் பழகிய பெண் கவரிங் நகைகள் மட்டுமே அணிந்திருந்தார். அவரது தோழி 2½ பவுன் நகை அணிந்திருந்தார். அந்த நகையுடன் அமீர் மாயமானது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அந்த 2 பெண்களும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீரை தேடி வந்தனர். நேற்று இரவு கோட்டார் பகுதியில் பதுங்கியிருந்த அமீரை போலீசார் கைது செய்தனர்.

    எனக்கு தலக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் அவர் நாகர்கோவிலில் உள்ள பூங்காவுக்கு வருவார். அங்கு பூங்காவில் அமர்ந்து பேசுவோம். நான் அந்த பெண்ணை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன்.

    ஆனால் அந்த பெண்ணோ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அதற்கு பழி வாங்குவதற்காக அவரிடம் இருந்து நகை பறிக்க முடிவு செய்தேன். அதற்காக வேலை வாங்கி தருவதாக கூறி அவரை நாகர்கோவில் வரவழைத்தேன். ஆனால் அவரோ தனது தோழியையும் வரவழைத்திருந்தார்.

    இருந்தாலும் எனது திட்டப்படி அவர்களிடம் இருந்து நகை பறித்தேன். வடசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நகையை அடகு வைக்கச் சென்றேன். அங்கு நான் பழகிய பெண்ணிடம் இருந்து வாங்கிய நகை கவரிங் என்பதும், அவர் தோழியிடம் இருந்து வாங்கிய 2½ பவுன் நகை மட்டும் ஒரிஜினல் என்பதும் தெரியவந்தது. அதனால் அந்த 2½ பவுன் நகையை மட்டும் அடகு வைத்து அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமீர் அடகு வைத்த நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். #Tamilnews
    Next Story
    ×