search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் குழு திட்டம் வகுக்கிறது- கமல்ஹாசன்
    X

    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் குழு திட்டம் வகுக்கிறது- கமல்ஹாசன்

    தமிழக மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க 17 பேர் அடங்கிய குழு தினந்தோறும் திட்டம் வகுக்கிறது என்று நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய அவர் கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசினார்.

    இரவு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இங்கு வந்துள்ளேன். நான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. ஆனால் சிறு பிள்ளையாக இருக்கும்போது எனது ஆசான் டி.கே. சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.

    ஒருவகையில் பார்த்தால் நான் கல்வி கற்ற ஊர்களில் இதுவும் ஒன்று. நான் கற்ற கல்வி கலை தான். அதை எனக்கு கற்று தந்த ஆசான் இந்த ஊர்க்காரர் தான். அவ்வை சண்முகம் என்று நாடு போற்றும் அந்த அறிஞரின் கடைநிலை மாணவன் நான்.

    இன்று இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் நடுவில் நின்று பேசுவீர்களா? என்று 10, 15 வருடங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் பேசுவேன் சினிமாக்காரன் தானே கூட்டத்தை பார்த்து பேசுவேன் என்று சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது நான் வந்திருப்பது சினிமாக்காரனாக அல்ல. உங்களில் ஒருவனாக, உங்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். இது தமிழகம் ஒரு புது மாற்றத்தை நோக்கி நகரும் வேளை. அதை நகர்த்தப்போகும் கரம் உங்களின் கரங்கள். இந்த கரங்களின் உதவியுடன் தான் நாளை நமதாகப் போகிறது.

    எனக்கு சிலர் அறிவுரை சொன்னார்கள். எதற்கு மெனக்கிட்டு இவ்வளவு தூரம் போக வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் சனி, ஞாயிறு அன்று பேசினால் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமே. உடம்பு வலியில்லாமல் சென்னையில் இருந்தே செய்யலாமே என்று அறிவுரை வந்தது.

    ஒரு பக்கம் பார்த்தால் அறிவுப்பூர்வமாக அது சரியாக இருக்கலாம். ஆனால் உணர்வுப்பூர்வமாக உங்களை சந்திப்பதற்கு நிகரானது எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்காக அந்த 4.5 கோடி பேரை நான் மதிக்கவில்லை என்றில்லை. அவர்களை நான் உணர்கிறேன். இங்கே நான் உங்களை பார்க்கிறேன், உணர்கிறேன். நீங்களும் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கண்களை பார்க்க முடிகிறது. அந்த அன்பை பார்க்க முடிகிறது.

    மக்கள் நீதி மய்யம் என்ன செய்யும் என்று பட்டியல் போடும் வேளை இதுவல்ல. ஆனால் யாருக்காக செய்யும் என்பதை சுட்டிக்காட்டலாம் உங்களுக்காக. இங்கே நாங்கள் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறோம்.


    நான் இப்போது மேற்கொண்டுள்ள இந்த யாத்திரை, பயணம் உங்களை பற்றி நான் கற்றுக் கொள்வதற்காக. உங்களுக்கு செவி சாய்ப்பதற்காக. இப்பொழுதே உங்கள் குறைகளையெல்லாம் தீர்த்து விடுவேன் என்று மார்தட்டி கொள்ள முடியாது. என்னை போலவே உங்கள் பால் அன்பு கொண்டவர்கள் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உங்களுக்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக எப்படியெல்லாம் நாம் குறைகளை தீர்க்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்திற்காக பிரத்யேகமாக 17 பேர் அடங்கிய அந்த ஹார்வேர்ட் குழு தினந்தோறும் இதற்காக யோசித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் செய்திகள் சேகரித்துக் கொடுத்து கொண்டிருக்கிறேன்.

    உங்கள் குறைகளை அறிந்து கொஞ்சம், கொஞ்சமாகஅவர்களிடம் அதை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது பேச்சு இதை செய்யப் போகிறேன், அதை செய்யப் போகிறேன் என்று மார்தட்டும் வீண் பேச்சாக இருக்காது.

    என் மவுனத்தை கலைக்க சொல்கிறீர்கள். என்னுடைய மவுனம் எப்போதோ கலைந்து விட்டது. நீங்கள் மவுனமாக இருந்ததால் இதுவரை நானும் மவுனமாக இருந்தேன். இன்று நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்கும் நேரமிது.

    நான் உங்களிடம் பேச வந்தது, உங்களிடம் கேட்க வந்தது அனைத்தையும் நீங்கள் பட்டியல் போட்டு கொடுங்கள். எங்கள் கட்சியினர் உங்கள் ஊருக்கு வருவார்கள். கிராம சபை கூட்டங்களில் அனைவரும் பங்கேற்று குறைகளை கூறுங்கள். இதனை நான் பல இடங்களில் தெளிவாக வலியுறுத்தி உள்ளேன்.

    குளச்சலில் மீனவ நண்பர்களை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டேன். நாகர்கோவிலிலும் எனக்கு பல புகார்கள் வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராகி விட்டவர்கள், தயவு செய்து மய்யம் விசில் என்ற செயலியை உங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேச நினைத்ததை எல்லாம் அதில் சொல்லலாம். அதை என்னால் கேட்க முடியும். உங்கள் குறைகளை கேட்க வேண்டியது என் கடமை. அதை நான் கேட்டே தீருவேன். மீண்டும் வருவேன், வரவேண்டி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    Next Story
    ×