search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cbi probe"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



    அதேசமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணையின்போது துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்குகளையும் ரத்து செய்தனர். #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
    சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. பொன் மாணிக்கவேல் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் 2017-ம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் சிபிஐக்கு மற்றியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  மேலும் மனுதாரரின் மனுவுக்கு தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

    ‘ஒரே நாளில் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய நீங்கள், ஓராண்டாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? ஒரு நிமிடம் கூட இந்த அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    பீகார் மாநிலத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். #ShelterHomeCase #NitishOrderCBIProbe
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்நகரில் செயல்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளனர்.

    காப்பகத்தில் உள்ள 44 சிறுமிகளில் 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சிறுமிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என தெரிகிறது. இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.



    காப்பக சிறுமிகளை கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  அரசு பாதுகாப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் சட்டசபையில் கடுமையாக குற்றம்சாட்டியது. முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதன் காரணமாக அவையில் கடும் அமளி ஏற்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், காப்பக சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை விவரங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு இந்த உத்தவை அவர் பிறப்பித்திருக்கிறார்.

    ‘காப்பகத்தில் நடந்த சம்பவம் அவமானகரமானது. இது தொடர்பாக காவல்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது. எனினும், குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பதால், வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது’ என நிதிஷ் குமார்  கூறியுள்ளார். #ShelterHomeCase #NitishOrderCBIProbe
    பீகார் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு வலியுறுத்தினால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #CBI #Biharshelterhomekilling
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 42 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அங்குள்ள 42 சிறுமிகளில் 29 பேர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள ஒரு சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த சம்பவம் பீகார் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. அரசு காப்பகத்தில் சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி மாநில காவல்துறை சிறப்பாக விசாரித்து வருவதாகவும், சி.பி.ஐ விசாரணைக்கு அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதே வேளையில், இதை ஏற்க மறுத்த பீகார் மாநில எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை இன்று எழுப்பினர். மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பீகார் மாநில அரசு கேட்டுக்கொண்டால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #Biharshelterhome #Biharshelterhomerape #Biharshelterhomekilling
    தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 3-வது கட்டமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. #DMK #CBI #Ramajeyam
    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயணம் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    சம்பவம் நடந்து 6 ஆண்டுகளை கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்து 32 மாதங்களாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம். எனவே இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிமன்றம், 2015 ஜனவரி 8-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது. அதன்பின் விசாரணை சூடுபிடித்தது. ஆனாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் சி.பி.சி.ஐ.டி.க்கு பல முறை கோர்ட்டு அவகாசம் அளித்தது. எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இதைத்தொடர்ந்து திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் , முதல் கட்ட விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தொடங்கினார். ராமஜெயம் உடல் கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் மார்ச் மாதம் அதிகாரிகள் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். தற்போது கடந்த 16-ந்தேதி திருச்சி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அளித்த ஆவணங்களை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்கிங் சென்றதாக கூறப்படும் இடங்கள் மற்றும் வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 3-வது கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK #CBI #Ramajeyam

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கேட்ட மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 15 பேர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், துப்பாக்கி சூடு, வன்முறை குறித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

    எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உள்ளதாகவும் அந்த வழக்குடன் இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHighCourt
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனும் விசாரித்து வருகிறது. இது தவிர இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்பது, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.



    துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசாங்கம் உண்மை நிலவரங்களை தெரிவிக்க மறுத்து வருவதால் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்தார். எனவே, இந்த விஷயம் தொடர்பாக மனுதாரர் சி.பி.ஐ.-ஐ அணுகலாம் என்றும் கூறினார்.

    அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் என்பது கண்துடைப்பு வேலை. அந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷனால எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.

    அவை தொடங்குவதற்கு முன்பே இது தொடர்பாக பேரவைத் தலைவரிடம் இதனை தெரிவித்தோம். ஆனால் முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் இதுபற்றி பேச வேண்டாம் என பேரவைத் தலைவர் கூறினார். துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothuKudiFiring #DMKWalkout
    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. #GutkhaCase #GutkhaScam
    சென்னை:

    குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். அத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.

    முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது.  அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக 17 கீழ்மட்ட அதிகாரிகள் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்தது. தற்போது அவர்களின் பெயர்கள் சி.பி.ஐ.யின் முதல்  தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அடுத்தகட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    மேலும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தருமாறு தமிழக அரசிடம் டெல்லி சி.பி.ஐ. கேட்டிருப்பதால் அந்த ஆவணங்கள் கைமாறியதும் விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது. #GutkhaCase #GutkhaScam
    குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றமே முறியடித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #Gutkha #CBI #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, “குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன்.

    மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீதான 40 கோடி ரூபாய் ஊழலுக்கும் வித்திட்ட குட்கா ஊழல் வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை முதலில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அந்த விசாரணையை அ.தி.முக. அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்தது. பிறகு மீண்டும் தி.மு.க.வின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை கோரியபோது அதற்கு ஒப்புக்கொள்ள அடியோடு மறுத்து அ.தி.மு.க. அரசு எவ்வளவோ வாதாடியது.

    இறுதியில் தடை செய்யப்பட்ட குட்கா ஊழல் வழக்கினை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நல்ல தீர்ப்பு அளித்தது.


    உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தும், அதிமுக அரசு குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை; திட்டமிட்டுத் தாமதித்தது. இந்த இடைவெளியில் தான், சுகாதாரத்துறையில் உள்ள சுகாதார ஆய்வாளர் பதவியிலிருக்கும் சிவக்குமார் என்பவரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் சேர்ந்து தங்களின் பினாமியாக்கி, அதற்கு முதல்-அமைச்சர் பழனிசாமியும் ஒத்துழைத்து உதவி செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, “குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அமைச்சர், டி.ஜி.பி, முதல்-அமைச்சர் ஆகியோர் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றமே முறியடித்திருக்கிறது.

    ஆகவே, குட்கா ஊழல் வழக்கை மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக சி.பி.ஐக்கு அதிமுக அரசு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. அதே முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளாமல் வருமான வரித்துறை தமிழக அரசிடம் கொடுத்த “குட்கா டைரியின்” அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையைத் துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இருவரும் தொடர்ந்து இந்த குட்கா விசாரணைக்கு முட்டுக்கட்டைக்கு மேல் முட்டுக்கட்டைபோட்டு வருவதால், அவர்களை பதவியில் வைத்துக் கொண்டு சி.பி.ஐ. நேர்மையாக விசாரணை நடத்துவது உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வர நிச்சயம் உதவாது.

    ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்யத் தவறினால், விசாரணை தடையின்றி நியாயமாக நடைபெற இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. அமைப்பு தமிழக அரசுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Gutkha #CBI #DMK #MKStalin
    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #Gutkha #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது.

    இதுபற்றி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

    இதை ஏற்று குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி இ.சிவக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே சி.பி.ஐ. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர் தனது பினாமி மூலம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-


    குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக கோர்ட்டு கூறியிருக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.

    மேலும் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. மேல் முறையீடு செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தனிப்பட்ட முறையில் தான் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து குட்கா ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    அதே சமயம் அன்புமணி ராமதாஸ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதும் அதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gutkha #TNMinister #Jayakumar
    குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். #Gutkha #supremeCourt #CBI
    புதுடெல்லி:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.


    எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
    ×