search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் விவகாரம் - சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை மேல்முறையீடு
    X

    குட்கா ஊழல் விவகாரம் - சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை மேல்முறையீடு

    குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். #Gutkha #supremeCourt #CBI
    புதுடெல்லி:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.


    எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
    Next Story
    ×