search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boycott"

    கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு மற்றும் வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வக்காலத்தில் போட்டோ ஒட்ட எதிப்பு தெரிவித்தும், விபத்து வழக்குகள் மற்றும் வீட்டு உரிமையாளர், வாடகை தாரர் வழக்குகளை அதற்கான நீதி மன்றத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும். சமரச தீர்வு மையம் மூலம் நிலுவை வழக்குகளை முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை மாற்றியமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை தேக்கம் அடைந்துள்ளது.
    வேலுர் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    வேலூர்:

    வேலூர் அடுத்த திருமலைக்கோடி விஸ்வநாதன் நகர், சரஸ்வதி நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தேர்தல் முடிந்து 4 மாதகாலத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். #Parliamentelection
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில் செல்லப்ப கவுண்டன்புதூர் கிராமம் உள்ளது.

    7, 12 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய இந்த கிராமத்தில் 1,056 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இங்கு உள்ள வாக்காளர்கள் ஓட்டுபோட வாக்குப்பதிவு மையம் மாதம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டியில் உள்ள இந்த வாக்குப்பதிவு மையம் 5 கி.மீ. தொலைவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் வாக்குப்பதிவு மையத்தை உள்ளூரிலேயே அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Parliamentelection

    உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். #RaviShankarPrasad #IndiaVsPakistan #Cricket
    புதுடெல்லி:

    காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.

    இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதிலில் ‘கிரிக்கெட் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். இது சர்வதேச கிரிக்கெட் தொடர். இதில் விளையாடுவதா? வேண்டாமா? என்பதை இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு மற்றும் நிலைமைக்கு தக்கபடி இறுதி முடிவை மேற்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, ‘உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற வேண்டுகோள் கொஞ்சம் நியாயமானது தான். பல சினிமா படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். விஷயம் வழக்கமான நிலையில் இல்லை. அவர்களின் கவலையை நான் புறக்கணிக்க விரும்பவில்லை. விளையாட வேண்டாம் என்று சொல்வதற்குரிய நேரம் தான் இது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை’ என்றார்.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டி நெருங்கும் போது, பாகிஸ்தானுடன் விளையாடுவோமா, இல்லையா என்பது தெளிவாக தெரிய வரும். உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது. எனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால், நாங்கள் விளையாட மாட்டோம். அவ்வாறு ஆட முடியாமல் போனால் அதற்குரிய புள்ளியை நாம் இழக்க நேரிடும். ஒரு வேளை இறுதிப்போட்டியில் நாம் பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருந்து, அதையும் புறக்கணித்தால் இறுதி ஆட்டத்தில் விளையாடாமலேயே பாகிஸ்தான் உலக கோப்பையை வென்று விடும். இந்த விஷயத்தில் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.’ என்றார்.

    ஐ.சி.சி. கூட்டம் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    காஷ்மீர் மக்களையும், பொருட்களையும் புறக்கணியுங்கள் என மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MeghalayaGovernor #TathagathaRoy #PulwamaAttack
    ஷில்லாங்:

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். இந்து, சமூக அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் அதில், “2 ஆண்டுகளுக்கு காஷ்மீருக்கு யாரும் செல்லாதீர்கள், அமர்நாத் செல்ல வேண்டாம், கம்பளம் உள்ளிட்ட காஷ்மீர் பொருட்களை வாங்க வேண்டாம், குளிர்காலத்தில் காஷ்மீர் வியாபாரிகள் விற்கும் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம். நான் இதை ஒப்புக்கொள்வதில் விருப்பம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அரசு மேகாலயா கவர்னரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா கூறும்போது, “இதுபோன்ற மதவெறி தான் காஷ்மீரை பள்ளத்தில் தள்ளியுள்ளது. ததாகத ராயின் கருத்தை நீங்கள் ஏற்பதாக இருந்தால், நீங்கள் ஏன் எங்கள் நதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதையும் நிறுத்தக்கூடாது? அவரைப் போன்ற மக்களுக்கு காஷ்மீர் வேண்டும், ஆனால் காஷ்மீர் மக்கள் இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
    2009-ம் ஆண்டு நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஐகோர்ட்டுக்கு வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வக்கீல்கள் சிலர் முட்டை வீசினர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் வக்கீல்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இந்த சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நடந்தது.

    அன்று போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டு அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    குடும்பநல கோர்ட்டில் உள்ள டியூப் லைட் உள்பட ஏராளமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. வளாகத்தில் நின்று கொண்டிருந்த நீதிபதிகள், வக்கீல்கள் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.

    இந்த தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வக்கீல்கள் பலர் படுகாயமடைந்தனர். நீதிபதிகள், வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந்தேதி கருப்பு தினமாக வக்கீல்கள் கடை பிடித்து வருகின்றனர்.

    இன்று அந்த கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஒன்று கூடினர்.

    இந்த சங்கத்தின் துணை தலைவர் சுர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசாரை கண்டித்து ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் ஊர்வலமாக வக்கீல்கள் சென்றனர். பின்னர் ஐகோர்ட்டு முன்புள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில், வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது தடியடி நடத்தியதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோ‌ஷம் போட்டனர்.

    வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் வக்கீல்கள் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டன.

    ஐகோர்ட்டு வளாகத்தில் 8 குடும்பநல கோர்ட்டுகள் உள்ளன. அதில், 5 கோர்ட்டுகளில் மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். இவர்கள் முன்பு வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘போராட்டத்தின் காரணமாக வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்காடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படும் விதமான எதிர்மறைவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘வக்கீல்கள் கஷ்டம் எங்களுக்கும் தெரியும். எதிர்மறையான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க போவது இல்லை’ என்று பதில் அளித்தனர்.
    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Boycott #SaudiConference #Journalist
    லண்டன்:

    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.



    இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர்.

    அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

    அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

    ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

    அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து, அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இந்த மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அப்படிப்பட்ட இந்த மாநாட்டை சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தினால், ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பலவும் புறக்கணிக்க உள்ளன.

    இப்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவ் மனுசின், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பி.பி.சி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.  #Boycott #SaudiConference #Journalist 
    சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். #IndependenceDay #RajBhavan #BanwarilalPurohit #Judges
    சென்னை:

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில், மாநில முதல்வர்கள், ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், சட்டசபை சபாநாயகர் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் இன்று அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    விருந்து முடிந்ததும் ராஜ்பவனில் உள்ள தோட்டத்தில் கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடி நட்டு வைத்தனர். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ளது போல ரோஜா தோட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் யாரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வில்லை. சில நாட்களுக்கு முன்னர் ராஜ்பவனில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்கும் விழாவில், நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 
    கல்வி கட்டணத்தை குறைக்க கோரி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை சுய்ப்ரேன் வீதியில் அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. 2-ம் ஆண்டு கல்வி கட்டணம் இந்த ஆண்டு முதல் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

    இதனால் இந்த கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் இன்று வகுப்பை புறக்கணித்தனர். அவர்கள் கல்லூரி எதிரே உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க பொறுப்பாளர் உதயன் தலைமை தாங்கினார். ருத்ரா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அவர்கள் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை ரத்து வேண்டும், பழைய கல்வி கட்டணத்தை அமல்படுத்தி தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
    ஹராரே:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இலங்கை தொடரில் இருந்து ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு போட்டி கட்டணம் கூட வழங்கப்படவில்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற 25-ந் தேதிக்குள் வழங்காவிட்டால், ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் (ஜூலை 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை) நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த போட்டி தொடருக்கான பயிற்சி முகாமை வீரர்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். வீரர்களின் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
    சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம் என்று சட்டசபை செயலக அதிகாரி கூறினார்.
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி சட்டசபையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

    நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தவிர அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன்அன்சாரி ஆகியோர் உள்பட 97 பேர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கவில்லை.

    இதனால் சட்டசபையில் ஆளும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர தனியரசு, டி.டி.வி. தினகரன் உள்பட 116 பேர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடந்தது. அவ்வாறு சட்டசபையை நடத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம். அதாவது 10-ல் 1 பங்கு உறுப்பினர்கள் சபையில் இருந்தாலே போதுமானது. சபையை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்த முடியுமா? என்ற கேள்வியே எழாது.

    ஓட்டெடுப்பு என்று வரும் போது சபையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அதில் பெரும்பான்மையை கணக்கிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்டெர்லைட் பிரச்சனையை காரணம் காட்டி தொடரை முழுவதும் புறக்கணித்தது சரியல்ல என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #TNAssembly #DMK
    சென்னை:

    சட்டசபையில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபையில் நேற்று பங்கேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்டெர்லைட் பிரச்சனையை காரணம் காட்டி தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக கூறியிருப்பது நல்ல வி‌ஷயமாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை மட்டும் பிறப்பித்தால் போதாது. அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காரணம் கூறி இருக்கிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தாமிர ஆலை தேவையில்லை என்று அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி சட்டம் கொண்டு வந்தால் தான் நிரந்தரமாக காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க முடியாமல் போகும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டில் தொழிற்சாலையினர் அப்பீல் செய்து ஆலையை இயங்க அனுமதி பெற வாய்ப்பு உள்ளது.


    எனவே தாமிர ஆலையே தேவையில்லை என்று சொன்னால் தான் இதில் சரியாக இருக்கும். எனவே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்து வாதாட வேண்டும். மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டசபைக்குள் வந்து பேசுவதற்கு தான் போட்டி கூட்டத்தில் பேசுவதற்கு அல்ல. நாளையே சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #TNAssembly
    ×