search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village people"

    • வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.

    வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    • பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதி இல்லை.
    • உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு குடிநீர் செயல்பாட்டுக்கு வந்தது.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு வெங்கடாசலபுரம் மேல தெருவில் உள்ள பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது, இந்த வீடுகளுக்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதியும் இல்லை. இப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா ரமீஸ் பாத்திமா, 5-வது வார்டு கவுன்சிலர் பிரதீப் கண்ணன் ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டுகுடிநீர் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இப்பகுதி மக்கள் தீபாவளி பரிசாக குடிநீர் வந்ததாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்சியில் ஊர்தலைவர் ரமேஷ்பாபு, ஊர் நிர்வாகிகள் அலெக்சாண்டர், முருகேசன் மற்றும் முகேஷ், ஸ்ரீராம், கந்தன், கவுன்சிலர் அஸ்ஸாப் அலி உட்பட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் டி.எஸ்.பி. ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தி னருக்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி விழா கமிட்டினர் சார்பில் சிறும ளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    • கடந்த 16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அனுப்பட்டியில் கடந்த 8 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் தெரிவித்தார்.இந்தநிலையில் அனுப்பட்டி கிராமத்தில் 8-வது நாளாக பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அனுப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில் அலவந்தான்குளம் கிராம மக்கள் இன்று கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் கிராமசபை கூட்டம் நடந்த பகுதி முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்காக சிப்காட் மூலம் அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிந்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே அதனை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்

    • திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
    • களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்

    களக்காடு:

    திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.

    களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தையல் அழகு கலை பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்களையும், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற லெவிஞ்சி புரம், நம்பி தலைவன் பட்டயம் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பை களும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.

    அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

    சூழல் கோட்டத்தில் 653 கிராம வனக்குழுக்களும், 16 ஆயிரம் உறுப்பினர்களும், 20 கோடி நிதியும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பது துறை சார்ந்த படிப்பு களாகத்தான் இருக்கும், அதை முழுமையாக்குவது புத்தகங்கள்தான். அதற்காகத்தான் கிராமங்கள் தோறும் படிப்பகத்தை அமைத்து வருகிறோம்.

    வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூழல் இளையோர் விளையாட்டு குழு வீரர்கள் இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் களக்காடு புலிகள் காப்பக லோகோவுடன் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும். மறந்து போன நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நெல்லை தனியார் கல்லூரி நாட்டார் வழக்காடு குழு சார்பில், சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு நாட்டுப்புற பாட்டு, நாட்டு புற விளையாட்டு, நாட்டுபுற கலைகள் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் நெல்லை அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் ராஜ மதிவாணன், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய், சூழல் திட்ட வனசரகர்கள் திருக்குறுங்குடி யோகேஸ்வரன், களக்காடு பிரபாகரன், அம்பை முகுந்தன், வனவர்கள் அப்துல் ரஹ்மான், சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சுகன் யா, கிராம வனக் குழு தலை வர்கள் கவிதா, அய்யம்மாள், பால சுப்பிர மணியன், பொ ன்னி வளவன். முன்னாள் வனக்குழு தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது.
    • தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது.

    மேற்படி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ- மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர்களை இதுேபான்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

    கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் 27 வயது இளைஞருக்கு ஊர் முதலாளி பட்டம் சூட்டி கிராம மக்கள் மரியாதை செய்தனர்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் முதன் முதலாக குடியேறிய மண்ணாடியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பூர்வகுடிகளாகவும் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் மண்ணாடியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பட்டம் சூட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பூம்பாறை கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வேலமண்ணாடி, ஊர் முதலாளி பட்டத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இறந்ததன் காரணமாக இவரது மகனான செல்வேந்திரன் (வயது 27) என்ற இளைஞருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றாக சேர்ந்து வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டினர். இவர் 7வது தலைமுறையாக பட்டம் பெறும் நபராவார்.

    மேலும் இவ்விழாவில் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க இவருக்கு பட்டு சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊரின் மைய பகுதியில் உள்ள மந்தையில் வைத்து மகுடம் சூட்டினர். இவர் இறக்கும் வரை இந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து சமுதாய சுபகாரியங்களுக்கும், ஊர் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்துவார் என்றும், கிராமத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் இவரது ஆலோசனை பெற்ற பிறகே நடைபெறும் என இந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இவ்விழாவில் கொடைக்கானலை சுற்றியுள்ள கிளாவரை, வில்பட்டி, தாண்டிக்குடி, குண்டுபட்டி, வடகவுஞ்சி, போளூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களிலிருந்து அனைத்து பட்டயக்காரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டம் சூட்டப்பட்ட இளைஞருக்கு மாலை அணிவித்தும் பாராட்டுகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

    கொடைக்கானல் மலைக்கிராமங்களில் முதன் முறையாக திருமணம் ஆகாத 27 வயதான இளைஞருக்கு வேல மண்ணாடி பட்டமும், ஊர் முதலாளி பட்டமும் சூட்டப்பட்டது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, சீவல்சரகு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோடைகாலம் தொடங்கியது முதல் தண்ணீர் தேவை மேலும் அதிகரிப்பால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை வரிசையில் வைத்து தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து அதனை குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையால் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களும் யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தாலும் குறைந்த அளவு தண்ணீரே மேல்நிலை தொட்டியில் சேமிக்க முடிகிறது. அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் தண்ணீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால் பல கிராமங்களை கண்டு கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வந்து விடுகின்றனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். #Parliamentelection
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில் செல்லப்ப கவுண்டன்புதூர் கிராமம் உள்ளது.

    7, 12 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய இந்த கிராமத்தில் 1,056 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இங்கு உள்ள வாக்காளர்கள் ஓட்டுபோட வாக்குப்பதிவு மையம் மாதம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டியில் உள்ள இந்த வாக்குப்பதிவு மையம் 5 கி.மீ. தொலைவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் வாக்குப்பதிவு மையத்தை உள்ளூரிலேயே அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Parliamentelection

    ஒட்டன்சத்திரம் அருகே மலை கிராம மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையால் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப் புலிகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், செந்நாய்கள், மலைப்பாம்புகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைப் பகுதியில் ஒற்றை யானை இரவு நேரங்களில் சாலையில் நின்றுகொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.

    ஒட்டன்சத்திரத்திலிருந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்து அச்சுறுத்தி தாக்கியது. மேலும் கடந்த மாதம் யானை ரேசன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூரையாடியது.

    அதுமட்டு மல்லாமல் அருகில் உள்ள பள்ளியின் மேற்கூரை, வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது. யானை மலைக்கிராமங்களுக்குள் சுற்றித்திரிந்து விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்ய முடியாமலும் தினமும் அச்சத்துடனையே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே வனத்துறையினர் சுற்றித்திரியும் ஒற்றை யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி அருகே காணும் பொங்கலையொட்டி கிராம மக்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் கார்-மோட்டார் சைக்கிள்கள் உடைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன் குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அருண், தர்காஸ் பகுதியை சேர்ந்த ஹரி, அவரது தம்பி வெங்கடேசன் உள்பட சிலர் காணும் பொங்கலையொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் பழையாறு கடற்கரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் பழையாறு பஸ் நிலையம் அருகே சென்றபோது அப்பகுதயை சேர்ந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழையாறு வாலிபர்கள் எதிர்ப்பை மீறி தர்காஸ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பழையாறு கடற்கரைக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி விட்டு இரவு 7 மணி அளவில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு பழையாறு பஸ்நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பழையாறு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களும் மீண்டும் தகராறு செய்து 2 மோட்டார் சைக்கிளையும், ஒரு காரையும் உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் அருண் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    மேலும் இந்த மோதலில் காயமடைந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை எஸ்.பி. விஜயகுமார், சீர்காழீ டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மோதலை தடுக்கும் வகையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    2 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×