search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடியாத வெள்ளம்: 2 மாதங்களாக தண்ணீரில் தத்தளிக்கும் கிராம மக்கள்
    X

    வட்டன்விளை கிராமத்துக்கு செல்லும் சாலையில் தேங்கிய தண்ணீரில் நடந்து செல்லும் கிராம மக்கள்

    வடியாத வெள்ளம்: 2 மாதங்களாக தண்ணீரில் தத்தளிக்கும் கிராம மக்கள்

    • வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.

    வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    Next Story
    ×