search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oddanchatram"

    வரத்து குறைவால் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இடைய கோட்டை, அம்பிளிக்கை, முத்து நாயக்கன்பட்டி, கேதையறும்பு, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக வரத்து நின்றதால் இந்த கிராமங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படவில்லை.

    இதனால் மலை கிராமங்களான பால்கடை, வடகாடு, பாச்சலூர், பெத்தேல்புரம், பெரியூர் ஆகிய கிராமங்களில் இருந்தே தக்காளி கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இது சராசரி வரத்தை விட மிகவும் குறைவு ஆகும்.

    இதனால் விலையும் அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.400 முதல் ரூ.420 வரை விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி என பல்வேறு ஊர்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக அப்பகுதி வியாபாரிகள் பெங்களூர், மதனபள்ளி, உடுமலைப்பேட்டை, பழனி, சிந்தாமணி போன்ற பல்வேறு ஊர்களுக்கு சென்று தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

    சிந்தாமணியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், பழனியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், உடுமலைப்பேட்டையில் ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.410 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலை கிராம விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்தி நகர் வண்ணாம்பாறையை சேர்ந்தவர் முனுசாமி(வயது42). ஆட்டோ டிரைவர். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    முனுசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டின் முன்புறம் படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது முனுசாமி எழுந்திருக்காமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அருகே சென்று பார்த்த போது முனுசாமியின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கப்பட்டு ரத்தக்களறியாக காட்சியளித்தது. எனவே மர்மநபர்கள் இரவில் இவரை அடித்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனுசாமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடையால் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    நகர் பகுதியில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் தங்கள் பணிகளை செய்ய முடியாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுபற்றி மாயவன் கூறுகையில், இரவு நேர மின் தடையால் தற்பொழுது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின் தடையால் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி மின் வாரியத்திடம் புகார் கூறினால் நகர் பகுதிகளில் மின் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மின் தடை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர்.

    இந்த மின்தடையை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படாத மின் தடையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், கொசவபட்டி, தேவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50-க்கும் கீழ் சென்றதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். இதனால் விரக்தியில் இருந்த அவர்கள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுச்சென்றனர்.

    இந்த வாரம் தக்காளி விலை ஓரளவு உயர்ந்து 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வருங்காலங்களில் தக்காளி தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதி பள்ளி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் கண்ணன் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிவேல் (வயது33). இவர் காளஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிவைராக வேலை பார்த்து வந்தார்.

    வேலை முடிந்ததும் பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அத்திக்கோம்பை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்தபோது செல்வம் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென வளைவு பகுதியில் வந்துள்ளார்.

    இதனால் நிலைதடுமாறிய மணிவேல் அவரது பைக் மீது மோதி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    செல்வம் காயங்களுடன் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே மலை கிராம மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையால் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலை கிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப் புலிகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், செந்நாய்கள், மலைப்பாம்புகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைப் பகுதியில் ஒற்றை யானை இரவு நேரங்களில் சாலையில் நின்றுகொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.

    ஒட்டன்சத்திரத்திலிருந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்ற பெத்தேல்புரம், வடகாடு பகுதி பொதுமக்களை சாலையில் வழிமறித்து அச்சுறுத்தி தாக்கியது. மேலும் கடந்த மாதம் யானை ரேசன் கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூரையாடியது.

    அதுமட்டு மல்லாமல் அருகில் உள்ள பள்ளியின் மேற்கூரை, வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது. யானை மலைக்கிராமங்களுக்குள் சுற்றித்திரிந்து விவசாயிகளின் நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்ய முடியாமலும் தினமும் அச்சத்துடனையே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே வனத்துறையினர் சுற்றித்திரியும் ஒற்றை யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரத்தில் அரசு காண்டிராக்டர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளைபோனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சேர்ந்தவர் முகமது ரசீம். அரசு காண்டிராக்டராக உள்ளார். இவர் பொங்கல் பண்டிகையையொட்டி தனது குடும்பத்துடன் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு முகமது ரசீமின் வீட்டில் மாடி வழியாக ஏறி குதித்தனர். அங்கு ஜன்னல் திறந்திருந்ததால் அதன் வழியாக புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    மறு நாள் காலை முகமது ரசீம் வீடு திரும்பினார். அபபோது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 60 பவுன் நகை, ரூ1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    பதறிப்போன அவர் இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை எடுத்து சோதித்து பார்த்தனர்.

    ஆனால் கொள்ளையர்கள் முதலில் கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு அதில் இருந்த டிஸ்க்குகளை எடுத்து சென்றுள்ளனர். எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முகமது ரசீமின் தந்தை ஹைதர் அலி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மிளகாய் பொடி தூவி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஹைதர் அலி தெரிவித்தார்.

    எனவே ஏற்கனவே நடந்த கொள்ளைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதன் அடிப்படையிலும் போலீசார் தீவிரமாக துப்பு துலங்கி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு கிராமங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்பட்டன.

    வரும் 16-ந் தேதி மாட்டு பொங்கலை முன்னிட்டு அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரத்து அதிகரித்த போதிலும் காய்கறிகளின் தேவையும் இருப்பதால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைத்தது. குறிப்பாக பூசணிக்காய் கடந்த சில நாட்களாகவே போதிய விலை கிடைக்காமல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தற்போது உள்ளூர் பயன்பாட்டிற்கே அதிக தேவை இருப்பதால் விலை அதிகரித்தது. இதேபோல தக்காளி ஒரு பெட்டி ரூ.330 வரை விற்பனையானது. கத்தரிக்காய் ஒருபை ரூ.450, வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.27, பீன்ஸ், ரூ.250, முருங்கை ரூ.400, நார்த்தை ரூ.60, சுரைக்காய் ரூ.5, பீட்ரூட் ரூ.12 என விற்பனையானது.

    இதேபோல பொங்கல் பண்டிகைக்கென கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கூலைப்பூ போன்றவையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக இன்று காலை முதலே சந்தை பரபரப்பாக காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் அருகே இறந்ததாக டாக்டர் கூறியவருக்கு மீண்டும் உயிர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி சாமியார்புதூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது46). தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது வி‌ஷ வண்டு கடித்தது. உடனே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்கவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இனையடுத்து சோகத்துடன் அவரை வீட்டிற்கு கொண்டு வந்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்து மாலைகள் அணிவித்தனர். அப்போது திடீரென தங்கவேலு விழித்து பார்த்தார். தூங்கி எழுந்தவர் போல தனக்கு என்ன ஆயிற்று என கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மீண்டும் அவரை ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து டாக்டர்கள் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒட்டன்சத்திரத்தில் ஏ.டி.எம். மையம் இயங்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இ-கார்னர் வசதியுடன் பணம் எடுக்க, செலுத்த எந்திரங்கள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெளியூரில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்

    மேலும் வேலைக்கு செல்பவர்கள், உதவி தொகை பெறுபவர்கள் என ஏராளமானோர் இந்த மையத்தை பயன்படுத்தி வந்தனர். வங்கியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பணம் செலுத்த ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை.

    24 மணி நேர சேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 24 மணி நேரமுமே வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பு பலகை மட்டுமே தொங்குகிறது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் அலைந்து பணம் எடுத்து வருகின்றனர். மேலும் வேறு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில் கூறுகையில், ஏ.டி.எம். சேவை முடங்கியது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து குறைந்த பட்ச நிலுவைத் தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அதற்கான பராமரிப்பு இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த லாரி தலை குப்புற கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

    வடமதுரை:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். லாரியில் கன்னிவாடியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கிளீனராக இருந்தார்.

    இன்று காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை அருகே லாரி வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் ராஜா சம்பவ இடத்திலேயே லாரிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாய மடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த லாரி உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    நெல்லை மாவட்டம் நீடாங்குளம் அருகே உள்ள சிவாயர்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(50). லாரி உரிமையாளர். ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் இருந்து தென்காசிக்கு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்துள்ளார்.

    ஒட்டன்சத்திரம்-மூலனூர் சாலையில் உள்ள கரியாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே லாரியிலேயே மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் கள்ளிமந்தையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×