search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "mystery death"

  • கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
  • ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

  செங்கம்:

  திருவண்ணாமலை மாவட்டம், சாத்தூர் அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி அதில் வசித்து வந்தார்.

  பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

  அப்போது அந்த வீட்டை ஏற்கனவே திருவண்ணாமலையில் தங்கியிருந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த பெண் தனிமையில் பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

  பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும் அந்த மூதாட்டியை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என செல்லமாக பெயர் சூட்டி அழைத்து வந்தனர்.

  மீனாட்சியம்மாவுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

  இந்நிலையில், கடந்த 23-ந் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.

  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

  நேற்று ஹரி இறந்த அயர்லாந்து பெண் மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.

  மனு மீது விசாரணை செய்த கிராம நிர்வாக அலுவலர், இறந்த பெண் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் சந்தேகமடைந்து இதுகுறித்து சாத்தனூர் அணை போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

  அதன்படி தாசில்தார் அப்துல்ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

  பின்னர், இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

  புதைக்கப்பட்ட அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அவர் வந்ததும் அவரிடம் புகார் பெற்று அதன் பின்னர், இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்.

  அதன் பின்னரே, அவர் எப்படி இறந்தார்? இயற்கையாகவே இறந்தாரா அல்லது பணத்திற்காக அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

  இதனை தொடர்ந்து இன்று காலை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

  புதுச்சேரி:

  ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள ஊழியர் குடியிருப்பில் ஜெயசங்கர் தனியாக வசித்து வந்தார். அவரை அங்கு ஒப்பந்தத்தில் எலக்டீரியனாக பணிபுரியும் காமராஜர் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தினமும் பார்த்து பேசிவிட்டு செல்வார். ஜெயசங்கரின் வீட்டை அவ்வப்போது யசோதா என்ற பெண் சுத்தம் செய்து விட்டு செல்வார்.

  இந்த நிலையில் காலை யசோதா டாக்டர் வீட்டை சுத்தம் செய்ய வந்த போது ஜெயசங்கர் மல்லாந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் டாக்டர் ஜெயசங்கருக்கு நெருக்கமான எலக்டீரிசியன் சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து சங்கர் கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ஜெயசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இறந்து போன ஜெயசங்கருக்கு நீரழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவரே ஊசி போட்டுக் கொள்வார் என தெரிகிறது.

  நீரிழிவு நோய் அதிகம் பாதித்ததால் டாக்டர் ஜெயசங்கர் இறந்து போனாரா? அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.
  தேவகோட்டை:

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுசந்தை அருகே வசிப்பவர் முருகேசன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது28).

  வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இங்கு பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு சர்மிளா (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 4 மாத கர்ப்பிணியான அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சர்மிளாவுக்கு ‘மர்ம’ காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும் சர்மிளா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

  கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.

  ராம்நகரைச் சேர்ந்த வினோத் (42), பெரிய காரை வசந்த் (22) மற்றும் ஒருவர் என மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தேவகோட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  ஒரத்தநாடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒரத்தநாடு:

  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் அரிசன காலனியை சேர்ந்தவர் விக்ரம் (வயது 35). விவசாயி. இவரது மனைவி விமலா (30). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

  விமலா மன்னார்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரது நடத்தையில் கணவர் விக்ரம் சந்தேகப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

  இரவு விமலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

  இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விமலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஒரத்த நாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் விமலாவின் கணவர் விக்ரம் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவர் விமலாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

  திண்டுக்கல் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் மர்மமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  திண்டுக்கல்:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் லோகேஸ்வரன் (வயது 32). இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள தம்பிதோட்டம் காந்தி கிராம குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  திருமணத்துக்கு பிறகு மறு வீடு சம்பிரதாயத்துக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். இன்று காலை குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மற்றொரு சம்பவம்...

  திண்டுக்கல் அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று காலையில் கேட் அருகே சுயநினைவின்றி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

  இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆத்தூர் அருகே பேரூராட்சி பில் கலெக்டர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியில் வசித்து வந்தவர் உதயசூரியன் (வயது 52). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். இவர் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். உதயசூரியன் கீரிப் பட்டியில் தங்கி மொபட்டில் பணிக்கு சென்று வருவார்.

  இந்த நிலையில் நேற்று அவர் பணி முடிந்து மொபட்டில் கீரிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊத்துமேடு பகுதியில் வந்த போது வண்டியில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லியகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்து வந்து மல்லியக்கரை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பில் கலெக்டர் உதயசூரியனை யாராவது கொலை செய்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் மொபட்டில் தொங்கிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பானது.

  செய்யாறு அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செய்யாறு:

  செய்யாறு சமாதியான் தெருவை சேர்ந்தவர் அக்பர்பாஷா (வயது 33). புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஷாயினாதி இவர்களுக்கு 1 மகன் 1மகள் உள்ளனர்.

  அக்பர்பாஷா நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பல இடங்களில் தேடிவந்தார்.

  இந்நிலையில் அக்பர் பாஷா வீட்டின் அருகே உள்ள தனியார் மண்டபத்தின் பின்பக்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒட்டன்சத்திரம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த லாரி உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஒட்டன்சத்திரம்:

  நெல்லை மாவட்டம் நீடாங்குளம் அருகே உள்ள சிவாயர்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(50). லாரி உரிமையாளர். ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் இருந்து தென்காசிக்கு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டி வந்துள்ளார்.

  ஒட்டன்சத்திரம்-மூலனூர் சாலையில் உள்ள கரியாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே லாரியிலேயே மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் கள்ளிமந்தையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கச்சிராயப்பாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கச்சிராயப்பாளையம்:

  விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் ரவீந்திரன் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான்.

  நேற்று காலை ரவீந்திரன் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிசென்றான். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவீந்திரன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.

  அப்போது வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மாணவன் ரவீந்திரன் மயங்கி கிடந்தான். இதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் ரவீந்திரனின்தாய் பாப்பாத்தி புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மாணவனை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உளுந்தூர்பேட்டை:

  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பா.ம.க. நிர்வாகி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

  இந்தநிலையில் இன்று காலை புஷ்பராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஜெயசங்கருக்கு தொலைபேசி மூலம் ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு உளுந்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

  அங்கு வீட்டில் புஷ்பராணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். புஷ்பராணி வீட்டு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

  மகளின் சாவுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் தந்தை ஜெயசங்கர் புகார் செய்தார்.

  அதில் எனது மகள் புஷ்பராணி சாவில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

  அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புஷ்பராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

  புஷ்பராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.