search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black money"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
    • கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.

    சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.

    இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.

    ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
    • மத்திய அரசு ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளது என மத்திய மந்திரி கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்று நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இதற்குப் பின்னால் இருந்தது.

    ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.

    வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

    135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்.

    மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது.

    கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

    நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும். நல்லாட்சியே அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

    • ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.
    • இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

    புதுடெல்லி :

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு வைத்திருந்தனர்.

    அவர்கள் வரிஏய்ப்பு செய்வதால், அந்தந்த நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே, இதற்கு முடிவுகட்ட அந்த வங்கிக்கணக்கு விவரங்களை பெறுவதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசுடன் செய்து கொண்டன.

    இதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொள்ள தொடங்கியது.

    ஆனால், இந்தியாவிடம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.

    இந்தநிலையில், தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

    இந்த 4-வது தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவற்றில், இந்தியர்களின் பெயர், முகவரி, வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கில் நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இக்கணக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளது, எத்தனை பேரின் கணக்குகள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். ரகசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பதே அதற்கு காரணம்.

    சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அந்தந்த நபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் வருமான வரி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். வருமானத்தை மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

    வரிஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற குற்றங்களை கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு அடுத்தகட்ட தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கும்.

    இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கிக்கணக்கு தகவல்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

    • 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கணக்கில் வராத நகைகள், தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

    புதுடெல்லி :

    குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்தது.

    இதையடுத்து சமீபத்தில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த தகவல், சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன எனவும் தெரிய வந்துள்ளது.

    வருமான வரிசோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனங்களின் நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குவதாகவும், கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்தமானவராக இருந்தால் நாட்டுக்கு நன்மை என்றும் ராதாரவி கூறியுள்ளார். #RadhaRavi #KamalHaasan
    மதுரை:

    நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இது குறித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்ட போது ‘நான் அரசியலை பற்றி மட்டும்தான் பதில் அளிப்பேன்’ என பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த அவர் ‘ரஜினி நல்ல மனிதர். ஏற்கனவே கூறியது போல், ‘லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும்.

    கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் நல்ல நடிகர். நடித்துக்கொண்டே இருந்து இருக்கலாம்.

    நடிப்பில் முடியாததால், வாய்ப்பு இல்லாததால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார். தி.மு.க.,வை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’.

    இவ்வாறு அவர் கூறினார். #RadhaRavi #KamalHaasan
    கருப்பு பணமாக பதுக்குவதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். #BlackMoney #RBI #Demonetisation
    புதுடெல்லி:

    2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.

    எனவே அதை தடுக்கும் வகையில் ரூ.2000 நோட்டை அச்சடிப்பதை மிகவும் குறைப்பது என மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் மிகக்குறைந்த அளவு மட்டுமே தற்போது அச்சடிப்பதாக மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.

    அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.

    2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
    கருப்பு பணத்துக்கு எதிரான வேட்டையில், சென்னையை சேர்ந்தது உள்பட 2 இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயார் என்று சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. #BlackMoney #SwissGovernment #ShareDetail #IndianFirms
    பெர்ன்:

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதை பற்றிய தகவல்களை பெறுவதற்காக, அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஜியோடெசிக் லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்கள் மற்றும் ஜியோடெசிக் லிமிடெட் நிர்வாகிகள் பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரது வங்கி முதலீடுகள் பற்றிய தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து நாட்டின் வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவை, இந்தியாவில் நிதி மோசடி தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் நிறுவனங்கள் ஆகும்.



    மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இந்தியாவில் செய்த நிதி மோசடிகள் மற்றும் வரி மோசடிகள் குறித்த ஆதாரங்களை சுவிட்சர்லாந்திடம் இந்தியா சமர்ப்பித்தது. அத்துடன், அவர்களது சுவிட்சர்லாந்து வங்கி முதலீடு விவரங்களை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அதன் அடிப்படையில், நிர்வாகரீதியிலான உதவியை அளிக்க சுவிட்சர்லாந்து வரித்துறை சம்மதித்துள்ளது.

    இருப்பினும், இந்த முடிவை எதிர்த்து, மேற்கண்ட நிறுவனங்களும், நபர்களும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது.

    ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது ஆகும். அந்நிறுவனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வர்த்தகங்களில் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது.

    அதே சமயத்தில், ஊழல் அரசியல்வாதிகளுடனான தொடர்பாலும், சட்டவிரோத பண பரிமாற்ற புகாருக்கு உள்ளானதாலும் சிக்கலை சந்தித்தது. அந்த நிறுவனத்தின் சொத்துகள் தொடர்பாக வருமான வரித்துறை, பலதடவை சோதனைகளை நடத்தி உள்ளது.

    ஜியோடெசிக் லிமிடெட், 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிட்டப்பட்ட நிறுவனம் ஆகும். பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியதற்காக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’யின் நடவடிக்கைக்கு உள்ளானது. அமலாக்கத்துறை, மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு ஆகிய அமைப்புகளின் நடவடிக்கைகளையும் சந்திக்க நேர்ந்தது. #BlackMoney #SwissGovernment #ShareDetail #IndianFirms
    வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. #PMO #BlackMoney
    புதுடெல்லி:

    பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும் அளவில் கருப்பு பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.

    2005-14-ம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடியை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய நிதி விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ரூ.53 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

    இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.

    இதனால் சதுர்வேதி மத்திய தகவல் ஆணையத்தை இது தொடர்பாக அணுகினார். அதையடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.


    என்றபோதிலும் பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணைய உத்தரவின்படி கருப்பு பணம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பிரதமர் அலுவலகம் இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    கருப்பு பணத்தை மீட்பதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை வெளியே கூறினால் அது விசாரணைக்கு முழுமையாக இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

    அதேபோல் இது சிறப்பு குழுவின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் தப்பி விடுவதற்கு உதவி செய்வது போலவும் அமைந்து விடும். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு விதிவிலக்கு அளித்து இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMO #BlackMoney 
    தெலுங்கானா எம்.பி.நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியுள்ளது. #TelanganaMP #IncomeTax

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் சீனிவாச ரெட்டி எம்.பி.

    இவர் “ராகவ்கன்ஸ்ட் டிரக்கன் குரூப்” எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் பிரசாத் ரெட்டி. அந்த கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளார்.

    அந்த கட்டுமான நிறுவனத்தில் பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ஐதராபாத் அலுவலகத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அந்த ஆவணங்கள் அனைத்தும் தனிப்படை அமைத்து ஆய்வு செய்யப்பட்டன.


    அந்த ஆவணங்கள் மூலம் ராகவ் கட்டுமான நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அது மட்டுமின்றி பல கோடி ரூபாய் கருப்புப் பணம் அந்த நிறுவனத்தில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது.

    அந்த கருப்புப் பணம் பற்றி அதிகாரிகள் குழு தனியாக ஆய்வு செய்தது. அப்போது ராகவ் கட்டுமான நிறுவனத்தில் ரூ.60 கோடி அளவுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த ரூ.60 கோடி கருப்புப் பண ஆவணங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ராகவ் நிறுவனம் எந்தெந்த பணிகளுக்கு கருப்பு பணத்தை பயன்படுத்தி உள்ளது என்ற சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சீனிவாச ரெட்டி எம்.பி.யிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #TelanganaMP #IncomeTax

    நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Demonetisation
    சென்னை:

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    பண மதிப்பு இழப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று.


    வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது. நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Demonetisation
    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னானது என்று தேசியவாத காங்கிரசார் நேற்று மும்பையில் போராட்டம் நடத்தினர். #PMModi #NCPProtest
    மும்பை:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது, வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்து, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று கூறியிருந்தார். மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகளை கடந்து, அவரது ஆட்சிக்காலம் நிறைவடையவும் உள்ளது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்குள்ள வங்கிகளுக்கு சென்று, தங்களது வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளதா என சரிபார்த்தனர்.



    பின்னர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்ஜெய முண்டே தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #PMModi  #NCPProtest #BlackMoney

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். #BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    மாதவரம்:

    செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்திய அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுவது பெட்ரோல், டீசல் விலைஉயர்வு. 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக மக்களை சந்திக்க இன்னும் 120 நாட்கள் உள்ளது. அப்போது 15ரூபாய் வரை குறையும்.

    சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. அனைத்து மசூதிகளிலும் அகமதியா முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூற முடியுமா? இரண்டு வரி புத்தகத்தை படித்து விட்டால் போதுமா?

    தூத்துக்குடியில் கலவரம் நடக்க சர்ச்சில் இருந்த பங்குத்தந்தை ஜெயசீலன் தான் காரணம். தேவாலயத்தில் மணி அடித்து விட்டு ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்ற பிறகே கலவரம் நடந்தது.


    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நவம்பர் 29-ந் தேதிக்கு பிறகு கைது செய்யப்படுவார். திகார் ஜெயிலில் களி தின்னும் போது கருப்பு பணம் குறித்து ப.சிதம்பரத்திற்கு அப்போது தெரியும்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரும் கொள்ளையர்கள், கிரிமினல்கள். அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்க சபரிமலை ஐயப்பனை வேண்டுகிறேன்.

    நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதாக கூறி சபரிமலையில் ரெஹானா என்ற பெண்ணை காவல்துறை உடையில் அழைத்து சென்ற கேரள அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய எச்.ராஜா, ஐகோர்ட்டை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இப்போது அவர் சபரிமலை விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டை விமர்சித்துள்ளார்.#BJP #HRaja #Sabarimala #ParliamentElection #PChidambaram
    ×