search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMO"

    வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. #PMO #BlackMoney
    புதுடெல்லி:

    பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும் அளவில் கருப்பு பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.

    2005-14-ம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடியை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய நிதி விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ரூ.53 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

    இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.

    இதனால் சதுர்வேதி மத்திய தகவல் ஆணையத்தை இது தொடர்பாக அணுகினார். அதையடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.


    என்றபோதிலும் பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணைய உத்தரவின்படி கருப்பு பணம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பிரதமர் அலுவலகம் இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    கருப்பு பணத்தை மீட்பதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை வெளியே கூறினால் அது விசாரணைக்கு முழுமையாக இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

    அதேபோல் இது சிறப்பு குழுவின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் தப்பி விடுவதற்கு உதவி செய்வது போலவும் அமைந்து விடும். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு விதிவிலக்கு அளித்து இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMO #BlackMoney 
    வங்கி மோசடியாளர்கள் பற்றி விவரங்களை வெளியிடவேண்டும் என பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #CIC #PMO #RBI
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் வங்கிகள் அப்படி வெளியிடவில்லை. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்தீப் சிங் என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதை விசாரித்த ஆணையம், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாத மோசடிப்பேர்வழிகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் கூறியது.

    ஆனால் அப்படியும் அந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    இது குறித்து சந்தீப் சிங், மத்திய தகவல் ஆணையத்தை மீண்டும் நாடினார். அதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யுலு 66 பக்கங்கள் கொண்ட முழுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    அதில் அவர் வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கும், மத்திய தகவல் ஆணையத்துக்கும் கண்டிப்புடன் கூறி உள்ளது.

    இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை, அரசியல் சாசன கடமை மற்றும் அரசியல் ரீதியிலான கடமை பிரதமர் அலுவலகத்துக்கு உண்டு.

    * பல்வேறு பிரிவிலான தகவல்களையும் வெளிப்படுத்தல் கொள்கை அடிப்படையில் வெளியிட முடியாது என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரானது. ‘ரிசர்வ் வங்கி- ஜெயந்திலால் என். மிஸ்திரி’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும் இது எதிரானது. அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணர்களையும், தேசிய சட்டக்கல்லூரிகளில் கற்றுத் தேறிய சட்ட பட்டதாரிகளையும் ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை, தகவல் ஆணையத்தின் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தைரியமாக மீறுகின்றனர்.

    * தகவல் அறியும் உரிமை சட்டத்தை ரிசர்வ் வங்கி முழுமையாக அலட்சியம் செய்துள்ளது.

    * வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் யார் என அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தெரிவிப்பதும் பொது நலன் சார்ந்தது. இந்த வழக்கில் பிரதமர் அலுவலகத்தின் நிலைப்பாடு, பொது மக்களுக்கு எந்தப் பலனையும் தராது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கோகினூர் வைரம், திப்பு சுல்தான் போர்வாள் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர அரசு செய்தது என்ன? என பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். #CIC #PMO #MEA
    புதுடெல்லி:

    கோகினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் மதுக்கோப்பை, திப்பு சுல்தானின் போர்வாள், புத்தர் பாதம், சரஸ்வதி மார்பிள் சிலை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பொக்கிஷங்கள் முந்தைய காலங்களில் பல்வேறு படையெடுப்பின் கீழ் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    இதற்கிடையே, இந்தியாவின் இந்த பொக்கிஷங்கள் எப்போது இங்கு கொண்டுவரப்படும் என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் தொல்லியல் துறையை நாடுமாறு பதிலளித்துள்ளனர்.



    இதையடுத்து, தொல்லியல் துறையிடம் கேட்டதற்கு, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை கொண்டு வருவது நாங்கள் அல்ல. இருக்கும் பொருள்களை அப்படியே பார்த்துக் கொள்வதுதான் எங்கள் வேலை என தெரிவித்தனர்.  இதனை அடுத்து மனுதாரர் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

    மேல்முறையீட்டு மனுவை விசாரித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆசார்யுலு இதுதொடர்பாக, வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கலாச்சார துறை அமைச்சகம் பதிலளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். #CIC #PMO #MEA
    உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. #KMJoseph #Collegium
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கடந்த 2-ம் தேதி கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.



    கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த நீதிபதி ஏற்கனவே இருப்பதால், ஜோசப் பெயர் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. #KMJoseph
    சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உடனே கொலிஜியத்தை கூட்ட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார். #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

    கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கூடிய கொலிஜியம் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய நீதிபதிகளில் ஒருவராவார்.

    நீதிபதி கே.எம் ஜோசப்

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. #KMJoseph 
    ×