search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமதிப்பிழப்பு"

    • கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது?
    • ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்

    ஐதராபாத்தில் நடைபெற்ற சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 98% திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பண மதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று நினைக்கின்றேன்.

    அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்தேன்

    மேலும், சமீபகால நிகழ்வுகளை பார்க்கும் போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பொதுத்துறை வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என மோடி அறிவித்தும் அவை இயங்கவில்லை
    • புதிய நோட்டுக்கள் வேறு நீள, அகல பரிமாணங்களுடன் வெளிவந்தன

    கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.

    அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.


    இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டத்திற்கு புறம்பான வழியில் நடக்கும் "ஹவாலா" பணபரிமாற்றம், கள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், வருமானவரி கட்டாமல் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிமாற்றம் "கருப்பு பொருளாதாரம்" என அழைக்கப்படும். இதற்கு எதிராக எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அப்போதைய இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் வைத்திருப்பவர்கள் வங்கியில் தங்கள் பணத்தை செலுத்தி விகிதாசார முறையில் தினமும் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் வருமான வரி துறையிடம் சிக்கி கொள்ள நேரிடும் என்பதால் இதற்கு முன்வரவில்லை. ஒரு சில வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் வங்கியில் இருந்து புதிய நோட்டுக்களை ரகசியமாக பெற்று கொண்டு, கணக்கில் காட்டாமல் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    2016 நவம்பர் 8லிருந்து டிசம்பர் 30 வரை, சுமார் 50 நாட்கள் மக்கள் வங்கிகளில் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள மிக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பணம் இல்லாமல் தங்கள் தேவைகள் தடைபட்டு சிலர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பெறவும் மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

    மத்திய ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக அச்சடித்து வெளியிட்ட புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புது நீள, அகல பரிமாணங்களை கொண்டிருந்ததால் பணம் வழங்கும் இயந்திரங்களையே (ATM) புதுப்பிக்க வேண்டியிருந்தது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.


    இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திலும், மொத்த விற்பனையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த நோட்டுக்கள் திடீர் என செல்லாததாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர்.

    அன்றிலிருந்து இந்திய பொருளாதாரம் சுமார் 1 வருடத்திற்கு ஸ்தம்பித்தது.

    அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2023 ஜனவரி மாதம், "அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆனால், அப்போது மக்களிடம் அறிமுகம் பெற தொடங்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, தற்போது வரை மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிகமாக டிஜிட்டல் பணப்புழக்கம் இந்தியாவில்தான் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற வழிமுறையில் யாரிடமிருந்து, எவருக்கு, எப்போது, எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு பண வழித்தடத்தை (money trail) கண்டறிவது அரசுக்கு சுலபம் என்பதால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் அரசிடம் சிக்கி கொள்வார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



    2016, நவம்பர் 8 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களும் சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அரசின் நோக்கங்கள் திட்டமிட்டபடி நிறைவேறியதா அல்லது தோல்வியுற்றதா என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தற்போது வரை நிலவுகின்றன.

    இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினம். அரசின் முடிவை விமர்சித்தாலும், இந்தியர்கள் எங்கும் போராடாமல் அமைதி காத்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைத்தனர்.

    7 வருடங்கள் கடந்தும் மக்கள் அந்த காலகட்டத்தில் தாங்கள் பட்ட இன்னல்களை மறக்கவில்லை.

    • இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    • 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ?

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் மதுரை வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், ரூ.2 ஆயிரம் தாளா போகுது. ஒருவாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திரும்பவும் 2 ஆயிரம் ரூபாய் தாளை போட்டிங்கனா சொல்லிட்டு செய்யுங்க. இருக்கிற 2 ஆயிரம் ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது.

    ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கிறேன் உனக்கு. போயிட்டு வா ஆத்தா... எங்களை காக்கும் தெய்வம் நீ.. எங்களை விட்டு போற... என கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
    • உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவது, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்தி மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இது பண நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறை தான். எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான ரூபாய் நோட்டு கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

    ஒரு குறிப்பிட்ட தொடரின் நோட்டுகளை திரும்பபெற்று புதிய நோட்டுகளை வெளியிடுகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுகிறோம்.

    ஆனால் அவை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக தொடர்கின்றன. அந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே வணிகர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டபோது பணத்தின் மதிப்பை விரைவாக நிரப்பும் நோக்கில்தான் ரூ.2000 நோட்டுகள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.

    இன்று போதுமான அளவு மற்ற வகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் கூட அதன் உச்சமான 6 லட்சத்து 73 ஆயிரம் கோடியில் இருந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.

    அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அவற்றின் வாழ்க்கை சுழற்சியை முடித்துவிட்டன. வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 30-ந்தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்.

    இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர் உரிய இடவசதியை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். போதுமான அளவு அச்சிடப்பட்ட நோட்டுகள் உள்ளன. ரூபாய் நோட்டை மாற்ற 4 மாத காலம் அவகாசம் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். அனைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப வரும் என்று நம்புகிறோம்.

    வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். உயர் மதிப்புள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை.

    ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ரிசர்வ் வங்கி உணரும். 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்க வணிகர்களிடையே தயக்கம் முன்பும் இருந்தது. தற்போது திரும்ப பெறப்படுவதால் அது அதிகரித்திருக்கலாம்.

    வங்கி கணக்குகளில் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு பான் எண் தேவை. இது தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும். இந்திய நாணய மேலாண்மை அமைப்பு மிகவும் வலுவானது.

    2 ஆயிரம் ரூபாய் பணபரிமாற்றம் தொடர்பாக நடந்துவரும் செயல்பாடுகளை வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள். வங்கிகள் தினமும் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும்.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக மிக குறைவாக இருக்கும். புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் வெறும் 10.8 சதவீதம் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
    • ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதுடன் அதை வங்கிகளில் கொடுத்து மாற்ற செப்டம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 23-ந்தேதி முதல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    இதையடுத்து நாளை (23-ந்தேதி) முதல் பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சனை.
    • டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு தகுந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. குறிப்பாக கிரேட்-2 பதவியில் இருக்கும் காவல் துறையினருக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. பேச வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதில் பாதி தான் உண்மை. பாதி உண்மை இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் நாம் பயனடைந்து வருகிறோம். இது மத்திய அரசின் கனவு.

    இதை தமிழக அரசு சரியாக உபயோகப்படுத்துவதில்லை. காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். வீடுகளில் சோலார் பேனல் வைத்து இருப்பவர்களுக்கு மானியம் கொடுப்போம் என்று தி.மு.க. அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் சாராயம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்.

    மேலும் கள் விற்பனையை தொடங்க வேண்டும். இதில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கள் மூலம் வருமானத்தை எப்படி ஈட்டி கொடுக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் வெள்ளை அறிக்கையில் உள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிவைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சினை. டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாரதிய ஜனதாவுக்கு வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

    வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

    ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை, அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

    • மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    புதுடெல்லி :

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பணமதிப்பிழப்பு மூலமாக சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய, திட்டமிட்ட கொள்ளை இதே நாளில் அரங்கேற்றப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன நிலையில், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஏனென்றால், நாம் என்ன சாதித்தோம், என்ன இழந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    கருப்பு பணம் வெளிவரும் என்று சொன்னீர்கள். ஆனால், வறுமைதான் வந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    மொத்தத்தில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காவிய தோல்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தவாறு மூதாட்டி ஒருவர் பரிதவிப்புடன் மனு கொடுக்க வந்தார். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்திருந்தார்.

    எனது பெயர் மாரியம்மாள் (வயது 80). கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். ஒரே மகன் செந்தில்குமார். கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.

    லாரி டிரைவரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டான். இதனால் நான் தனியாக வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை பார்த்தேன். அதற்குள் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை நான் மாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறேன்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். அதை கேட்டு நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

    கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என ப.சிதம்பரம் வாதிட்டார்.
    • அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு தரப்பு வாதம்

    புதுடெல்லி:

    நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது.

    முன்னாள் நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், வாதாடும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என்றார். இதேபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை 1978ல் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார். மேலும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணமதிப்பு நீக்கத்திற்கான பரிந்துரைகள் மற்றம் அதுதொடர்பான உண்மைகள் மற்றும் ஆராய்ச்சியுடன் வெளிவந்திருக்க வேண்டும், அரசாங்கம் அதை பரிசீலித்திருக்க வேண்டும், ஆனால் அது இங்கே தலைகீழாக இருந்தது எனவும் ப.சிதம்பரம் வாதிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பேசும்போது 'தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.

    பின்னர் பேசிய நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு முன் வழக்கு வரும்போது, விசாரித்து பதில் அளிப்பது கடமை என்று கூறினர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை தொடரும் என கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விரிவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேணடும் என்றும் உத்தரவிட்டனர். 

    • பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று வாதம்.

    நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

    கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன், பி.வி. நகரத்தா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், இந்த விசாரணை இன்று (அக்டோபர்-12) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும் போது "தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.

    ×