search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது- பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லை
    X

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது தொடங்கியது- பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லை

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×