search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L Murugan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார்.
    • மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன், மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பஜனை கோவில் வீதி, தாசம்பாளையம் கோவில் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட கல்லார் பழங்குடியின கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

    அங்கிருந்த மக்கள், இதற்கு முன்பு இருந்த எம்.பி.க்கள் யாரும் எங்களுடைய கோரிக்கை எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த முறை கல்லார் கிராமத்தின் எல்லா வாக்குகளும் பா.ஜ.க.விற்கு தான் என்றும் கூறினார்கள்.

    அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது, இதற்கு முன் இருந்தவர்கள் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனால், நான் பொறுப்பேற்றவுடன் இந்த கிராமத்தை தத்தெடுத்து, இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்றார்.

    அதன்பின் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார். அப்போது மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தை கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    • பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
    • கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.

    இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.
    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி சென்னையில் இருந்து விமானம் மூலமாக வேலூர் சென்றார். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    வேலூர் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் இருந்து விமானம் மூலமாக பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை,

    * ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    * தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய செயல்பாடு என்பதே இல்லை. பொம்மையாக ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து இருக்கார்.

    * தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் செயல்படாத ஒரு அரசு இருக்கிறது என்றால் முதல் தங்கப்பதக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசுக்கு கொடுக்கணும்.

    * 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியே பார்த்ததில்லை. மகளிர்களும், தாய்மார்களும் கொதித்து நின்று கொண்டுள்ளார்கள்.

    * தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் முதல் 10 நாட்கள் கூட்டணி வைத்து ட்ராமா, கடைசி 10 நாள் அவர்கள் சம்பாதிச்ச பாவ காச வெச்சு மக்களுக்கு கொடுக்கறது. இதை தான் 70 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    * ஆனால் இந்த முறை அன்பு சகோதர, சகோதரிகளே திராவிட முன்னேற்ற கழகக்காரர்கள் யாராச்சு தன்னுடைய பக்கெட்டுல இருந்து ஓட்டுக்கு பணத்தை கொடுத்தா அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகின்ற பணம் என்பதை மறந்து விடாதீர். அள்ளித்திண்ணிப்பதற்காக மூக்குத்தியோ, தோடோ கொடுத்தால் நம்மளுடைய ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி கசக்கி பிழிந்து 33 மாத காலமாக ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் பேசுகிறார்.

    * அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    * 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம், 5 ஆண்டு நமக்காக பிரதமர் உழைப்பார்.

    * மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கடலை, பாக்கு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன், பிரதமர் மோடி முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.

    • விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி.
    • கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.

    தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.

    விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
    • பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரிகள் இருவர் உள்பட 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர்.
    • மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக எல். முருகன் உள்ளார். இவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மொத்தம் 12 பேர் இன்று மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    எல். முருகன் நீலகிரி தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
    • எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். நேற்று அவர் குன்னூர் அருவங்காடு, சேலாஸ், காந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் நடனமாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகனும், படுகர் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.

    • தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
    • 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகத்தை இன்று மத்திய மந்திரி எல்.முருகன் திறந்துவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கச்சத்தீவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. அது குறித்து தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதனால் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே.
    • தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும்.

    ஊட்டி:

    மத்திய மந்திரி எல்.முருகன் ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதலமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிபடிக்கும் விடுதிகளின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு நாடகம் போடும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை நேரடியாக சென்று பார்க்க நேரம் இல்லை.

    தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே. பா.ஜனதா ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல்கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம். அவரை 2-வது முறையாக தேர்வுசெய்தபோது குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும், 3-வது முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக தேர்வு செய்து உள்ளோம்.

    மத்திய மந்திரிகள் பட்டியலில் 27 சதவீதம் பேர் மிகவும் பிற்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்கள். மேலும் 11 பழங்குடியினத்தவரும், 12 தாழ்த்தப்பட்ட பிரிவினரும் மத்திய மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் கமிஷனுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது பா.ஜனதா கட்சி.

    தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். இதற்கு உதாரணமாக 2ஜி, காமன்வெல்த் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

    அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே. புதிய பாராளுமன்றம் கட்டியபோது சோழர்களின் ஆட்சி பரிபாலனத்தின் அடையாளமாக கருதப்படும் செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் வேதமந்திரம் முழங்க நிலைநிறுத்தியவர் நரேந்திர மோடி.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதே செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் வாக்கிங் ஸ்டிக் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதனை புறக்கணித்தது யார் என்பது உலகம் அறியும். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தி கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. காசி தமிழ் சங்கமத்தை 2 தடவைகளும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நடத்தி காட்டி உள்ளோம்.

    பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். மேலும் ஐ.நா.சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் செல்லும் வாகனங்களில் அதிகாரிகள் அரைகுறையாக சோதனை நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் பல பெட்டிகள் இருந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.
    • பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.

    தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது.

    மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும். பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர்.

    எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×