search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. தொண்டரின் கடையில் டீக்குடித்த எல்.முருகன்
    X

    தி.மு.க. தொண்டரின் கடையில் டீக்குடித்த எல்.முருகன்

    • டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
    • பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×