search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மொழி"

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும்.
    • தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது.

    அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது.
    • தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனநாயக கட்சியின் 'தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்' என்ற பெயரில் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார்.

    கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய நீதிகட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக நிறுவனர் தேவநாதன், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மே மாதம் 3-வது வாரம் மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்பார். இந்தியாவில் உள்ள 543 எம்.பி.க்களையும் ஒரே மேடையில் உட்கார வைத்து அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை புத்தகமாக போட்டுக் காட்டக் கூறினால், அதில் அதிக பணிகளை செய்தவர்கள் பட்டியலில் பாரிவேந்தர் தான் முதலிடத்தில் இருப்பார்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தவிர அவர் சம்பாதித்த பணம் ரூ.126 கோடியை தனது தொகுதியில் கல்விக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் பொது மக்களுக்காகவும் செலவு செய்துள்ளார்.

    ராஜராஜ சோழன் காலத்தில் அவருக்கு எவ்வளவு பெருமை இருந்ததோ அதை மீட்டு எடுக்க வேண்டும். பிரதமர் மோடி செங்கோலை அறத்தின் சாட்சியாக புதிய பாராளுமன்றத்தில் வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.

    தொன்மையான தமிழ் மொழியை பிரதமர் ஐநா சபை வரை கொண்டு சென்று பெருமை சேர்த்து உள்ளார். அடுத்த 5ஆண்டு காலத்தில் திராவிட கட்சி இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் வளர்ச்சி அரசியலை பேசாமல் பிரிவினை அரசியலை பேசுகிறார்கள்.

    வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது. என்று அப்போதே அண்ணா விட்டுவிட்டார். அதை தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. 2024 தேர்தல் முடிவில் தி.மு.க. என்ற கட்சி இல்லாத நிலை ஏற்படும். பின்தங்கிய இந்த பெரம்பலூர் தொகுதியில் ரெயில் வசதி வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கனவை பாரிவேந்தர் மோடியிடம் மத்திய மந்திரிகளிடமும் பேசி வந்துள்ளார்.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பாரிவேந்தர் மீண்டும் எம்.பி. ஆகும்போது, அடுத்த பட்ஜெட்டில் பெரம்பலூர் ரெயில் வழி தடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதை அவரே திறந்து வைப்பார். இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை கொண்டு வருகிறோம். அதில் முதல் பள்ளி பெரம்பலூருக்கு வேண்டுமென்று முதலில் கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். அத்துடன் அதற்கு இடமும்கொடுத்து கட்டிடமும் கட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார். அவருடைய வெற்றி இந்த தொகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பேசுகையில்,

    2014-ம் ஆண்டு மோடி குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி நடத்தி வந்தார். அதன்பின்னர் மோடியுடன் பல மேடைகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றேன். அப்போது அவரிடம், விரைவில் பிரதமராக ஆவீர்கள் என்று கூறினேன். அதன்படி அவரும் பிரதமர் ஆனார். தமிழன், தன்னை தமிழன் என்று வெளியே கூற தயங்கும் நேரத்தில், தமிழை உலகம் எல்லாம் அவர் பரப்பி வருகிறார்.

    பிரதமர் மோடி ஒரு ஞானி, அவர் எங்கு சென்றாலும் இந்தியா உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் 3-வது முறையாகவும் பிரதமர் ஆவார் என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. 3-வது முறையல்ல, 4-வது முறையும் நரேந்திரமோடி தான் பிரதமர் ஆவார். இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

    • நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம்.
    • நவீன உலகின் சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

    திருப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழா்கள் தற்போது உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனா். அவ்வாறு புலம்பெயா்ந்து வாழ்ந்து வரும் தமிழா்கள், தமது பிள்ளைகள் தமிழ் பயில ஊக்குவித்து வருகிறாா்கள்.

    புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும், தமிழை கற்பதால் அடையக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் ஆசிரியா்கள் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதற்கு பொருத்தமான பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தர வேண்டும்.

    நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம். நவீன உலகின் சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

    புலம் பெயா் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.

    பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் தமிழை வளா்க்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.
    • ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது.

    சென்னை:

    தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.

    தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை "Local Language" என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் ( #StopHindiImposition) என கூறியுள்ளார்.

    • ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    • தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள்.
    • புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.

    ஆங்கில வழி கல்வியின் தாக்கம் நம் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு 'எலிஃபண்ட், டைகர்' என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் அடையாளம் தெரிகிறது என்பார் தியடோர் பாஸ்கரன்.

    யானையோ புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம், ஆனால் இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியை சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு.

    தமிழ் மொழியில் புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் என பல சொற்கள் உள்ளன.

    புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள். புல் என்பது புல்லி ஆகமாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்.

    ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது ஒரு ஐரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கை பார்த்திருக்கிறார். ஆனால் புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.

    ஆங்கிலச் சொல்லான 'எலிபண்ட் ' என்கிற சொல் பழைய பிரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தின், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, கைம்மா, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. பிறமொழி கலந்த சொற்கள் என்றால் ஐம்பதுக்கு மேல் தேறும்.

    இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர்கள். நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன என்கிறார் பி எல்.சாமி.

    ஒரு மொழியில் ஒரு சொல்லின் தோற்றமானது அந்நிலத்தோடும் அதன் பல்லுயிர்ச்செறிவோடும் தொடர்புடையது.

    இவ்வாறாகத்தான் பல்லுயிரியச் செறிவு மிக்கப் பகுதியில் வாழ்ந்த நாம் இத்தன்மையைத் நம் மொழியிலும் ஏற்றி வைத்தோம்.

    ஆனால் ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினம் குறித்த சொல் ஏதுமற்ற ஒரு வேற்று மொழி வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால் எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடாதா?

    - நக்கீரன்

    • தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
    • பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.

    புதுச்சேரி:

    அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.

    சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.

    பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.

    திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

    பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.

    பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
    • தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.

    ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

    குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விளாத்திகுளம் அருகே தி.மு.க.சார்பில் தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம்ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது என்று அமைச்சர் பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்கும் திட்டம் நாளை தொடங்கபட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் தங்களது வாழ்வாதரத்தை பெருக்கி கொள்ள முடியும்.

    கிராம புற பகுதிக ளிலும் குடியிருப்பு இல்லாதவர்க ளுக்கும் குடியிருப்பு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம்

    விளாத்திகுளம் தொகுதி யில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கும் வகையில் ரூ.608 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார்.

    வண்டி பெட்ரோல் இல்லாமல் ஓடாது அதே போல் தான ஊட்டச்சத்து இல்லாத குழந்தையும் அறிவு வளர்ச்சியை எட்டமால் போய்விடுகிறது. சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் கிராம புறங்களில் உள்ளவர்கள் சத்தான உணவுகளை உட்கொள்வ தால் தான கொரோனா பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

    பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 700 ரூ.1200 வரை சேமிப்பு ஆகிறது. தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு தலைமை நிலைய பேச்சாளர் பசும்பொன்ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் அருள்ராஜ், துணைச் செயலாளர்கள் காளிராஜ், சரவணச்செல்வி, தமிழ் வாணன், ஒன்றிய பொரு ளாளர் ராகவன், சங்கர்ராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜன், ஆதிசங்கர், ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்னமகாராஜா, பச்சை பெருமாள், சுடலை முத்து, அய்யனார், முனி யம்மாள் முத்துகரும்புலி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய, கிளை செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை.
    • மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது

    சென்னை:

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சமீபத்தில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. 86 ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 336 பள்ளிகளை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேர் கலந்து கொண்டனர்.

    3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கற்றல் ஆய்வு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது என்று தெரிய வந்துள்ளது.

    மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே 3-ம் நிலை தமிழ் உரையை புரிந்து கொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள் மற்றும் வடிவங்களை கொண்ட அடிப்படைகளை கண்டறிதல், காலண்டர்களில் தேதிகள் மற்றும் மாதங்களை கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக தென்மாநிலங்களை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் எண்ணிக்கையில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    என்.சி.இ.ஆர்.டி. தனது அறிக்கையில் 46 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 முதல் 100 எழுத்துக்களை தமிழில் சரியாகவும், சரளமாகவும் படிக்க முடிந்தது என்று கூறியுள்ளது. 47 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், தொற்று நோய் பரவலால் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகளில் கண்காணிப்பு இல்லாதது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும் என்றனர்.

    பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    • பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர்.
    • பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.

    குடிமங்கலம் :

    பள்ளிக்கல்வித்துறை, தமிழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை நடத்த உள்ளது.

    இந்தத்தேர்வை பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர். அவ்வகையில் இந்தத்தேர்வில் வெற்றி பெறும் அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,500 பேருக்கு பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நிலையில் உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் சார்பில் ராமமூர்த்தி மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை, பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×