search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது
    X

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது

    • தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே.
    • தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும்.

    ஊட்டி:

    மத்திய மந்திரி எல்.முருகன் ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதலமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிபடிக்கும் விடுதிகளின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு நாடகம் போடும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை நேரடியாக சென்று பார்க்க நேரம் இல்லை.

    தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே. பா.ஜனதா ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல்கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம். அவரை 2-வது முறையாக தேர்வுசெய்தபோது குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும், 3-வது முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக தேர்வு செய்து உள்ளோம்.

    மத்திய மந்திரிகள் பட்டியலில் 27 சதவீதம் பேர் மிகவும் பிற்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்கள். மேலும் 11 பழங்குடியினத்தவரும், 12 தாழ்த்தப்பட்ட பிரிவினரும் மத்திய மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் கமிஷனுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது பா.ஜனதா கட்சி.

    தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். இதற்கு உதாரணமாக 2ஜி, காமன்வெல்த் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

    அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே. புதிய பாராளுமன்றம் கட்டியபோது சோழர்களின் ஆட்சி பரிபாலனத்தின் அடையாளமாக கருதப்படும் செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் வேதமந்திரம் முழங்க நிலைநிறுத்தியவர் நரேந்திர மோடி.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதே செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் வாக்கிங் ஸ்டிக் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதனை புறக்கணித்தது யார் என்பது உலகம் அறியும். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தி கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. காசி தமிழ் சங்கமத்தை 2 தடவைகளும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நடத்தி காட்டி உள்ளோம்.

    பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். மேலும் ஐ.நா.சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் செல்லும் வாகனங்களில் அதிகாரிகள் அரைகுறையாக சோதனை நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் பல பெட்டிகள் இருந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×