search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GK Vasan"

    • தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாடு முழுவதற்குமான மக்களின் தேவைக்கு 70 சதவீதம் பாமாயில் மற்றும் இதர ஆயில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலை விட தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப தென்னை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும் தேங்காய் விலை குறைந்துவிடுகிறது.

    தற்போது தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் தேங்காய் விலை குறைந்து விட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் கூறியபடி சென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிர்ணயம் செய்து, தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    • பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள்.
    • உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர்களும், அவர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகர்கள் பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது. மத்திய-மாநில அரசுகள் வணிகர்களின் தொழில், வியாபாரம் பெருக, வணிகத்தினால் பொது மக்களும் பயன்பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


    ஆனால் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை. எனவே அறுவடை முடிந்த உடனேயே பயிர் காப்பீடு கிடைத்தால் தான் தொடர்ந்து நடைபெற வேண்டிய அடுத்த பருவ விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு பயன் தரும்.

    எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.
    • மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடல் கொள்ளையர்களின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நேற்று இரவு தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.

    மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
    • மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, தற்போதைய கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

    கோடைக்காலத்தில் மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாரலாம், கைப்பம்புகளை அமைக்கலாம், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்யலாம், நீர்த்தொட்டிகளை அமைக்கலாம், குடிநீர் குழாய்களைப் பராமரிக்கலாம் இப்படி தண்ணீர் கிடைப்பதற்கு உரிய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

    தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு விவசாயிகளின் ஆலோசனையை, கோரிக்கையை கேட்கலாம். எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
    • 17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.

    செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப்போகும் வீரரைத் தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

    தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
    • தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தாராபுரம்:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காக்க பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியவர் மோடி. எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு செய்துள்ளார்.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நிறைய நிலுவைப்பணி இருக்கிறது. சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையாக சரி செய்யவில்லை. இந்த தொகுதி மேலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். உயர வேண்டும். பாராளுமன்ற தொகுதி மென்மேலும் அனைத்து துறையிலும் உயர வேண்டும். அதற்கு நீங்கள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு செய்யும் தொகை உயர்வு என தி.மு.க.வின் கஜானாவை நிரப்பி கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

    தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேணுகோபால் மறைவு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
    • வேணுகோபாலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வேணுகோபால் என்கிற மாறன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

    உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இயக்க உணர்வோடு த.மா.கா தலைமை அலுவலகத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரது மறைவு இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார்.
    • இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை:

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போதைப் பொருள் கடத்தலிலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவிலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வஞ்சிப்பதிலும் தான் தி.மு.க. அரசு முன்னிலையில் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளுமே பாராளுமன்ற தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆனால் சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பிரதிபலிக்கிறார்.

    பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார்.

    அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள் ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும்.

    மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம். தி.மு.க. அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்தி ரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது.

    மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உத வித்தொகை கொடுத்து விட்டு மாலையில் குடும்ப தலைவரிடம் இருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க. பிடுங்கி கொள்கிறது. தி.மு.க. டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலக ளவில் இரண்டாம் இடத்துக்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
    • தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு வழக்கம் போல் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது.

    கர்நாடகா மாநில அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனது தான் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

    அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும். தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
    • காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூட இருக்கிறது. இம்முறையாவது தமிழகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க கர்நாடகா அரசிற்கு உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் 28 கூட்டங்களை கூட்டியுள்ளது, ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு மாநில மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப உத்தரவுகளை இடவேண்டும்.

    கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இது சரியான செயலல்ல. காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    நாளை (4-ந்தேதி) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக மக்களின் தேவையறிந்து, கடந்த காலத்தில் இரு மாநில அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய, உரிய தண்ணீரை பெற்றத்தர உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×