என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது.
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும்
ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற "அமைதி வாரிய" கூட்டத்தில் பேசிய டிரம்ப்,
"நாம் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும். நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்" என தெரிவித்தார். மேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்கிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஈரான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நிறைந்துவருகிறது. சமீப நாட்களில் F-22, F-35 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனுடன் கூடுதல் கடற்படை கப்பல்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ குவிப்பை தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது. கடந்த காலங்களில் திட்டங்கள் பலனளிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அணுகுமுறை, சமரசம் செய்யமறுக்கும் ஈரானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலவீனமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு தரப்புமே ஒரு முழு அளவிலான போரை விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், தீவிரமடைந்துள்ள ராணுவக் குவிப்புகளும், சமரசமற்ற பேச்சுக்களும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன என தெரிவிக்கின்றனர். கடலிலோ, வான்வெளியிலோ அல்லது பிராந்திய பினாமிப் படைகள் மூலமாகவோ ஏற்படும் ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
- தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
- அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

பிராந்திய நாடுகளுக்கு அமைதியின் செய்தியை வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று ஈரானிய அட்மிரல் ஹசன் மக்சூத்லு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்க்கின் ராணுவ மையத்தில், கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டும் பணிகள் நடக்கின்றன. நதான்ஸ் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
- நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
- 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "சிறந்த நாள் இது" என்று தெரிவித்தார்.
- உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
- தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளத்தியுள்ளது.
சீன உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தியாவின் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் கட்டுபாடுகளில் தற்போது மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, சீனாவிலிருந்து மின் விநியோக மற்றும் நிலக்கரி உற்பத்தி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்
- பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் BPCL நிறுவனம் 2 ஆண்டுகளுக்குப் பின், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.
பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை அடுத்து, BPCL மற்றும் HPCL மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் தலா 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை தற்போது வெனிசுலாவிடம் இருந்து வாங்கியுள்ளன.
- மாற்றுப் பாதைகள் மூலம் தங்களது விமானச் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
- நிலுவையில் உள்ள தொகை சுமார் ரூ.42 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான்வெளிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனம் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது. வங்கதேச வான்வெளியைப் பயன்படுத்த முடியாததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பல்வேறு பாதைகளை சுற்றிவருகிறது ஸ்பைஸ்ஜெட். இதனால் பயணநேரமும் அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடியுள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்த வங்கதேச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மாற்றுப் பாதைகள் மூலம் தங்களது விமானச் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர்,
இவை இத்துறையில் வழக்கமாக எழும் பிரச்சனைகளே; இதற்கு விரைவில் தீர்வு காண நாங்கள் ஆக்கப்பூர்வமாக பணியாற்றி வருகிறோம். எங்களது விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை; ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி எங்களது திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். நிலுவையில் உள்ள தொகை சுமார் ரூ.42 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி
- மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வீடியோவில் பேசிய ராஜ் சிங், " மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருந்தார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?
ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது.
- இப்ராஹிம் சத்ரான் 95 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்களிலும் அடுத்து இறங்கிய குல்புதீன் நயிப் 1 ரன்னிலும் செடிகுல்லா அடல் 44 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 95 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே கண்டறிய முடியும்.
- முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அவரது இளைய மகன் ஜய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெய் பவார் தாயாரும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இருந்தனர்.
- தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது.
- நாளை மனு விசாரணைக்கு வரவுள்ளது
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும் தேர்தல் ஆணையமும் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்காக அன்புமணி ராமதாஸ் தரப்பு தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்நிலையில் பா.ம.க.வின் தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
- ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
- அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே இலக்கு.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், "ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்று கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:
குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.






