என் மலர்tooltip icon

    இந்தியா

    • அந்த மோதிரங்களில் ரஹ்மத் சர்க்கார் மற்றும் ரிஸ்வான் 2025 என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
    • புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று, ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.

    அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.

    சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.

    அந்த மோதிரங்களில் 'ரஹ்மத் சர்க்கார்'  மற்றும் 'ரிஸ்வான் 2025' என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

    புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

    அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.
    • அசாதுதீன் ஒவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அந்நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக முடியும். ஆனால், சட்டமேதை அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிரதமர், முதல்-மந்திரி அல்லது மேயர் ஆக முடியும் என தெளிவாகக் கூறுகிறது.

    இறைவனின் அருளால் ஒரு நாள் வரும், அப்போது நானும், இந்த தலைமுறையும் இருக்க மாட்டோம். ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார். முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்தார்.

    இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. அனில் போன்டே கூறுகையில், ஒவைசியின் பேச்சு பொறுப்பற்றது. எந்த ஒரு பெண்ணும் அடிமைத் தனத்தை விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்களே ஹிஜாப் அணிவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஈரான் போன்ற நாடுகளிலும் பெண்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

    • வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வரும் 12-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    சாமி தரிசனத்திற்கு பின் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:

    கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.

    வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவவேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம்.

    பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும்.

    இந்த ஆண்டு இறுதியில் குலசேகரபட்டினத்தில் இருந்து விண்கலங்களை விண்ணில் செலுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

    2027-ம் ஆண்டு சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக்கோளை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அதற்கு முன் 3 முறை ஆளில்லாத விண்கலங்களை சூரியனை ஆய்வுசெய்ய அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    இந்த ஆண்டில் முதல்முறையாக இமாதம் 12-ம் தேதி இஸ்ரோ விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

    இதன்மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 விண்கலங்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நடந்து வருகிறது.
    • வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் இந்தத் திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் சுயமரியாதை திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு சோம்நாத் கோவிலுக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

    இரவு 8 மணியளவில் கோவிலில் நடைபெற்ற தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் சோமநாதர் கோவிலில் நடைபெறும் டிரோன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.


    நாளை நடைபெற உள்ள சவுரிய யாத்திரை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் யாத்திரையில் 108 குதிரைகளின் அடையாள ஊர்வலம் இடம்பெறுகிறது. அதன்பின், சோமநாதர் நகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்துகொள்கிறார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சோமநாதர் சுயமரியாதை விழா நமது ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது நாடு முழுவதும் முழுமையான பக்தி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சோம்நாத் சுய மரியாதை திருவிழா, தனது கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பாரதத் தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவு கூரும் தருணமாகும். காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தபோதும், நெறிமுறைகளுக்கான அவா்களின் உறுதிப்பாட்டை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. இந்திய நாகரிக மீட்சியின் கொண்டாட்டம் இது.

    கடந்த 1951-ல் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2001-ல் கோவிலின் 50-ம் ஆண்டு விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் பங்கேற்றுச் சிறப்பித்தனா். நடப்பாண்டில் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    • தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
    • திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

    அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.

    தங்களது திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அவர் போலீசாரைச் சுட முயன்றபோது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

    • மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?.
    • முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்

    மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில், மாநகராட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக மேயர் வேட்பாளரை ஆதரித்து பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின்போது, மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை எனக் கூறியதாக சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அண்ணாமலை பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர். இது பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? எனத் தெரிய வேண்டும். அவருக்கு எதிராக இங்கே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?. முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது.

    முதல்வர் பட்நாவிஸ் இதில் தெளிவான நிலை எடுக்க வேண்டும். துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டேயின் சுயமரியாதை எங்கே. நீங்கள் எவ்வளவு கையாலாகாதவர்?.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, அந்தக் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம், அதனால் அவர் சரியாக என்ன சொல்ல வந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார்.

    அண்ணாமலை பிரசாரத்தின்போது "மத்தியில் மோடி ஜி, மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் ஜி, மும்பை மாநகராட்சியில் பாஜக மேயர். ஏனென்றால்... மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை. அது சர்வதேச நகரம்" எனப் பேசியிருந்தார்.

    • சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார்.
    • கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.

    மகாராஷ்டிராவில் புனே மாநகராட்சி மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார். இன்னும் பாஜக கூட்டணியிலேயே உள்ளார்.

    மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் அஜித் பவார் உள்ளார். ஆனால் இதற்கு முரணாக நடப்பு மாநகராட்சி தேர்தலில் இரு அணிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.

    புனேவில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அஜித்பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் ஒரே மேடையில் தோன்றி கூட்டுத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை. 

    • 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
    • விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்ற சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

    ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இது 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.

    விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.

    விபத்தில் சிக்கிய 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிடப்பட்டுள்ளது.  

    • மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற மம்தா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளது.

    "அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பெங்கால் வெற்றி பெறும்" என்பது முக்கிய பல்லவியாக இந்த பாடலில் அமைந்துள்ளது.

    மேலும், "புதிய திசையுடன் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம். உங்கள் இருள் புதிய விடியலுக்கு முன்னால் தோற்றுவிடும். நாங்கள் சிஏஏ அல்லது என்ஆர்சி-க்கு அஞ்ச மாட்டோம். தாய் வங்காளத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. இந்த பூமியில் அனைவருக்கும் இடமுண்டு. அன்பு மிரட்டலுக்குப் பணியாது போன்ற வரிகள் இடம் பிடித்துள்ளன" போன்ற வரிகளும் இடம் பிடித்துள்ளன.

    நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் நிறுவனமான I-PAC மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது என குற்றம்சாட்டினார்.

    • மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
    • மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.

    நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகில் உள்ள மகேஷ்வரி சமூகத்தினர் ஒன்று கூடிய மகேஷ்வரி உலக மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

    இந்த மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:-

    வீட்டில் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் தாய்மொழியில் பேசினால், அவர்கள் தானாகவே அவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய மாநிலமான ராஜஸ்தானுடன் இணைக்கப்படுவார்கள். மொழி மட்டுமே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மதத்தை நிலைநிறுத்தும். கலாச்சாரத்தை முன்னோக்கி எடுத்துக் செல்லும்.

    மற்ற இடங்களில் தேவைப்படும்போது எந்த மொழியையும் பேசலாம். வெளிநாட்டு மொழிகளை கூட பேசிலாம். ஆனால், வீட்டில் குழந்தைகளுடன் தாய் மொழியில்தான் பேச வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என டிரம்ப் அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    • சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
    • கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 7 பள்ளி சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் தகிசர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையாட வரும் சிறுமிகளை இலக்கு வைத்து இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட 7 சிறுமிகளும் 6 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள். இந்த நபர் சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் மேலும் 6 சிறுமிகளுக்கு இதேபோன்று தொல்லை கொடுத்தது அம்பலமானது.

    போலீசார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.

    அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அங்குஷ் பரத்வாஜ் என்ற யூடியூபர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு ஏற்கனவே தங்கியிருந்த பிரமோத் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர், யூடியூபர் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் குமாரை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  

    ×