என் மலர்
நீங்கள் தேடியது "Sharad Pawar"
- சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
- கூட்டறவுத் துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன?
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித் ஷா மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றிருந்தார். இவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது சரத் பவார் மத்திய அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவுத்துறைக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் மிகவும் தொன்மையான காசி (வாரணாசி) அனுபவித்த முக்கியத்துவம் போன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மேற்கு மகாராஷ்டிரா மாநில அரசு கூட்டறவுத்துறையை தனித்துவமாகவும், பிரகாசமாகவும் மாற்றும்.
நீங்கள் 10 ஆண்டுகள் விவசாய அமைச்சராக இருந்தீர்கள், கூட்டுறவுத்துறை உங்கள் அதிகார வரம்பிற்குள் இருந்தது. கூட்டறவுத்துறை, விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன என்பது மகாராஷ்டிரா மக்களிடம் சொல்ல வேண்டும் என நான் பவார் சாகேப் (சரத் பவார்) இடம் கேட்க விரும்புகிறேன். வரிச் சிக்கல்களைத் தீர்த்தீர்களா அல்லது மாதிரி துணைச் சட்டங்களை உருவாக்கினீர்களா?.
விளம்பரம் மூலம் ஒரு தலைவராக மாறுவது மட்டும் போதாது... நீங்கள் களத்தில் வேலை செய்ய வேண்டும்.
மோடி கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்தார். சர்க்கரை ஆலைகளுக்கான எத்தனால் கொள்கையை வகுத்தார். சர்க்கரை உற்பத்தியாளர்களின் வருமான வரி பிரச்சனைகளைத் தீர்த்தார் மற்றும் வரிவிதிப்புக்கான மாதிரி துணைச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.
சர்க்கரை ஆலைகளுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. பதிய குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
- டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும், மாநிலத்தில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியிலும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததில் இருந்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் தனித்து போட்டியிடப் போவதாக, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்து இருந்தது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி தேசிய பிரச்சனை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என்று இன்னும் சில நாட்களில் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் நாங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருக்கிறோம்.
டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
- நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன்.
- அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசும்போது, 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறினார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜக-வின் முன்னோடிகள்) என்னுடைய மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே முன்னதாக நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை" என்றார்.
இதற்கு சான்றாக 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.
- பா.ஜனதா வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
- 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக பா.ஜனதா மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 149-ல் போட்டியிட்டு 132 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு பிறகு முதல் முறையாக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மாநாடு ஷீரடியில் நேற்று நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு கட்சியினரை அடுத்து வரும் தேர்தல்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் பேசினா்.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
சரத்பவார் துரோக மற்றும் நம்பிக்கை துரோக அரசியலை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1978-ம் ஆண்டு தொடங்கினார். 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அந்த அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா இந்த வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
அதேபோல உத்தவ் தாக்கரேவின் வாரிசு, துரோக அரசியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர். மராட்டியத்தில் பா.ஜனதா பெற்று உள்ள வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி 'இந்தியா' கூட்டணியின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
- சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.
- எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை
மகாராஷ்டிராவில் கடந்த வருடம் நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்க, சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் வெற்றி பெற்ற பாராமதி தொகுதிக்கு விஜயம் செய்த துணை முதல்வர் அஜித் பாவார் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்ததால் அவர்கள் தனக்கு 'முதலாளி' அல்ல என்று வாயை விட்டுள்ளார்.
பாராமதியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், நீங்கள் எனக்கு வாக்களித்ததால், நீங்கள் எனக்கு முதலாளி அல்லது உரிமையாளராகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இப்போது என்னை விவசாயக் கூலி ஆக்கிவிட்டீர்களா? என்று மக்கள் கூட்டத்தை பார்த்து கறாராக கூறினார்.
Baramati: Maharashtra's Deputy CM Ajit Pawar says, "Just because you voted for me, it doesn't mean you have become my boss or owner. Have you made me a farm laborer now?" pic.twitter.com/uIk5Nm927P
— IANS (@ians_india) January 6, 2025
முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), சரத் பவார் அணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி [என்டிஏ] மற்றும் மஹாயுதியுடன் தொடர்வோம். எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிர மாநில என்சிபி தலைவர் சுனில் தட்கரே தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் பவாரின் ஆணவம் தொனிக்கும் பேச்சு வைரலாகி வருகிறது.
- தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
- எந்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தேஜஸ்வி யாதவ் கூறினார்
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் [டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை] கொல்கத்தாவில் தனியார் ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்தபோது, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.
ஏன் இந்தியா கூட்டணிக்குத் தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து மாகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபி தலைவர் சரத் பவார், மமதா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்குதலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மம்தாவை தலைமை ஏற்க வலியுறுத்தி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மம்தாவை இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும். ஆனால் மம்தாவுக்கு காங்கிரஸின் எதிர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக, லாலுவின் மகனும் மூத்த ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உட்பட இந்திய கூட்டணியின் எந்த மூத்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தார், ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரியானா மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தோல்விகளாலும், கூட்டணியில் காங்கிரசின் மோசமான செயல்பட்டாலும் இந்தியா கூட்டணி மாநில கட்சிகள் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் வரிசையாக அனைவரும் மம்தாவை ஆதரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
- வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன்
- மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது
பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் சேர்நது உருவாக்கிய இந்தியா கூட்டணி உள்விவகாரங்களில் சிக்கித் திணறி வருகிறது. மாகாரஷ்டிரா மற்றும் அரியானா தோல்வி காங்கிரஸ் மீதான கோபமாக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மத்தியில் மாறி வருகிறது.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உருவாக்கிய மகா.விகாஸ் அகாதி படுதோல்வியை அடுத்து கூட்டணியில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி மகா. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. உத்தவ் தாக்கரே பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறி சமாஜ்வாதி வெளியேறி உள்ளது.
இதற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.

ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மம்தா இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க முழு தகுதியும் உள்ளவர் என்று மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று [சனிக்கிழமை] கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மம்தா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது.
அவர் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய [திரிணாமுல் காங்கிரஸ்] எம்.பி.க்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்று பாராட்டிப் பேசினார்.
ராகுல் காந்தி மீது இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் சரத் பவார் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மகா.சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 48 இடங்களை மட்டுமே மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி கைப்பற்றியது. இதில் சரத் பவார் என்சிபி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
- சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவில் சேர்ந்தார்
- சரத் பவாரின் பழைய வீடியோக்களை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
288 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன. இரு தரப்பு தேசிய தலைவர்களும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்ம், சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவில் சேர்ந்தவர் ஆவார். தேசியவாத கட்சியின் கடிகார சின்னம் அஜித் பவார் வசமே உள்ளது.
இந்நிலையில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவர சரத் பவாரின் புகைப்படம் உள்ளிட்டவரை அஜித் பவார் அணி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அஜித் பவார் அணி சமூக வலைத்தள பதிவுகள் உள்ளிட்டவற்றில் சரத் பவாரின் பழைய வீடியோக்களை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சரத் பவார் அணி உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது சரத் பவார் அணி தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்டறிந்த பின்னர், சரத்பவாரின் புகைப்படம், வீடியோவை பயன்படுத்தாதீர்கள் என்றும் சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அஜித் பவாருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
- மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம்.
- மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்று பெயர்.
மகா விகாஸ் அகாடி தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியதாக குறிப்பிட்ட சரத் பவார், இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம். இன்று முதல் நான், கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும். ராகுல் காந்தி சொல்வது போன்று நடந்தால் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
- வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
- கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஆட்சியில் இல்லை. மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதா, இல்லையா என்பதை நான் ஆலோசிக்க வேண்டும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன்.
இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். எந்தத் தேர்தலிலும் நீங்கள் என்னை வீட்டுக்குப் போக விடவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். புதிய தலைமுறையை கொண்டுவர வேண்டும்.
நான் சமூக சேவையை விடவில்லை. எனக்கு அதிகாரம் வேண்டாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதை விடவில்லை என தெரிவித்தார்.
- அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்தனர்.
- வயதை சுட்டிக்காட்டியபோது, வயது பற்றி கவலைப்பட வேண்டாம் என சரத் பவார் விளக்கம்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) கட்சி தலைவர் சரத் பவார், தன்னுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சரியான வழியில் கொண்டும் வரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாய்க் நிம்பால்கரின் சகோதரர் சஞ்சீவ் ராஜே நாய்க் நிம்பால்கர், பால்டன் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் சவான் ஆகியோர் சரத் பவார் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசும்போது சரத் பவார் கூறியதாவது:-
சில இளைஞர்கள் தங்களுடைய கையில் பேனர்கள் ஏந்தியதை பார்த்தேன். அதில் என்னுடைய படம் இருந்தது. அதில் 84 வயதான நபர் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீங்கள் வயதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், 84 வயதாக இருந்தாலும் சரி அல்லது 90 வயதாக இருந்தாலும் சரி. இந்த வயதான மனிதன் நிறுத்தமாட்டார். மாநிலத்தை மீண்டும் சரியான வழியில் கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன். உறுதியாக உங்களுடைய உதவியை பெறுவேன்.
சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சேதமடைந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுவது அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் கையிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பது உங்களுடைய மற்றும் என்னுடைய பொறுப்பாகும்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண இருக்கின்றன.
- அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் சரத் பவார் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது
- சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரசின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த மஹா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது.
அஜித் -பவார் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜகவின் என்டிஏ கூட்டணியை ஒருங்கிணைத்த மஹாயுதி கூட்டணி 17 இடங்களை மட்டுமே கைபற்றி பின்தங்கியது.
இதன் விளைவாக ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடந்த சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என்று பேச்சு அடிபட்டது.

சரத் பவாரும், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த மேலவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்காமல் இருக்க ரிஸார்டுகளில் பாதுகாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர். பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் அஜித் பவாரிடமிருந்து பிரிந்துள்ள நிலையில் சரத் பவாரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முக்கியத் தலைவர்களின் இந்த கட்சித் தாவல் அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து விரைவில் பலர் சரத் பவாரிடமே திரும்பி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.