என் மலர்tooltip icon

    இந்தியா

    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என டிரம்ப் அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    • சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
    • கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 7 பள்ளி சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் தகிசர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையாட வரும் சிறுமிகளை இலக்கு வைத்து இந்த அநாகரீக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட 7 சிறுமிகளும் 6 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள். இந்த நபர் சிறுமிகளுக்கு மிட்டாய்கள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் மேலும் 6 சிறுமிகளுக்கு இதேபோன்று தொல்லை கொடுத்தது அம்பலமானது.

    போலீசார் அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரி தேடப்பட்டு வருகின்றனர்.

    அங்கு, 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அங்குஷ் பரத்வாஜ் என்ற யூடியூபர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு ஏற்கனவே தங்கியிருந்த பிரமோத் குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர், யூடியூபர் இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்தச் செயலை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் குமாரை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  

    • உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க இந்த நடவடிக்கை.

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகதிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    ஏற்கெனவே அயோத்தியின் பஞ்சகோசி மற்றும் கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

    ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.

    மேலும், ராமர் கோயிலை மையமாக வைத்து 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்யக் கூடாது என்று ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது மக்களின் தனிமனித உணவு உரிமையில் தலையிடும் செயல் என்றும், உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

    • வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
    • கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

    பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுடன் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், கேரளாவில் பாஜக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என பாஜக தலைவர் சோபா சுரேந்திரன் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்று கருதுவதால், வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

    மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கம் பெரும் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் அதே வேகத்தை நிர்வாகத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டது. கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பா.ஜ.க. கட்சி தலைமைச் செயலகத்தில் நுழைய மக்கள் தயாராகிவிட்டனர். அது நடந்தால், மாநிலத்தில் என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்.

    மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பெறும் ஆதாயங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுவோம். கேரளாவில் என்டிஏ அரசாங்கத்தை அமைப்பதும், அம்மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவதும் பாஜகவின் நோக்கமாகும்.

    இவ்வாறு சோபா சுரேந்திரன் தெரிவித்தார்.

    • இந்திய சந்தையில் டெஸ்லா தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
    • குருகிராமில் 3 ஆவது டெஸ்லா ஷோரூம் திறக்கப்பட்டது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    கடந்தாண்டு மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமை டெஸ்லா திறந்தது. அடுத்ததாக குருகிராமில் 3 ஆவது ஷோரூம் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் ஷோரூம் திறப்பதாக டெஸ்லா நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

    • பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.
    • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (9-ந்தேதி) தொடங்கியது. 12-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார். பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026 பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.

    அப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் குறித்து இளைஞர்களால் எழுதப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பையும் அவர் வெளியிட உள்ளார்.

    • பெட்ரோல் பங்கு மீது சமூக விரோதிகள் குண்டு வீச்சு.
    • குண்டு வீச்சு மூலம் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது- டீலர்கள் சங்கம்.

    மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மீது இரண்டு நாட்களுக்கு முன்னதாக குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் காலவரையின்றி மூடப்படும் என பெட்ரோலிய டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக டீலர்கள் சங்கம் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "பெட்ரோல் பங்க் மற்றும் டீலர்களின் பாதுகாப்பு விசயத்தில் மாநில அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூலம், இன்னும் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது.

    உடனடி கவனமும் சுமுகமான தீர்வும் வழங்கப்படும் வரை, பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இன்று முதல் காலவரையின்றி மூடுவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், அரசாங்கம் பொறுப்புடைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் மொய்ராங் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    • இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

    டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு தூதரகப் பிரதிநிதியாக தாலிபான் அரசு மூத்த அதிகாரி முஃப்தி நூர் அகமது நூர் நியமிக்கப்பட்டார். இன்று இந்தியா வந்த அவர் பதவிப்பொறுப்பை ஏற்றார்.  

    2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    முஃப்தி நூர் அகமது நூர் ஆப்கான் வெளியுறவு அமைச்சகத்தின் அரசியல் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2025 அக்டோபரில் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்தபோது அவருடன் வந்திருந்தார்.

    இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அண்மையில் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த நியமனம் நடந்துள்ளது.

    ஏற்கனவே மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் தலிபான் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பிரதான தூதரகமும் அவர்கள் வசம் வந்துள்ளது. 

    • கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.
    • வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    தரிசனத்திற்கு பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது. வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவ வேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம். பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறிய முடியும் என்றார்.

    • அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
    • மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

    அதில், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம். அதை மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தவறான தகவல். மத்திய அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை" என்று கூறப்பட்டு உள்ளது.

    • தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான்.
    • தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது. அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.

    இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடியாக சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

    சபரிமலையில் தந்திரிக்கு உதவியாக உன்னி கிருஷ்ணன் போற்றியை நியமித்தது தந்திரி கண்டரரு ராஜீவரு தான் என்பதும், தந்திரியின் சிபாரிசு என்பதால் சபரிமலையில் உன்னி கிருஷ்ணன் போற்றி, தந்திரி குடும்பத்தின் ஒரு முக்கிய அதிகாரமிக்க பிரமுகராக வலம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தங்கம் கடத்தலுக்கு தந்திரியும் உதவியாக இருந்ததும் அம்பலமானது.

    தந்திரிக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்த அதிகாரிகள் நேற்று காலை அவரை விசாரணைக்கு அழைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து ஆதாரத்தைக் காண்பித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டார்.

    தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி கைது செய்யப்பட்டது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
    • கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்தார்.

    அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒப்பந்தத்திற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.

    அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் எனக்கூறினோம். ஆனால் இந்தியா அதற்கு தயக்கம் காட்டியது. இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம் என தெரிவித்தார்.

    அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளரான ரன்தீர் ஜெய்ஸ்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக பலமுறை பேசி உள்ளது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர். இதில், வர்த்தக ஒப்பந்தமும் உள்ளடங்கும். எனவே, வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக மோடி பேசவில்லை என்பது தவறானது என தெரிவித்தார்.

    ×