என் மலர்tooltip icon

    இந்தியா

    • இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
    • கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார்.

    சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.  அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் கீழ் பிறவியிலிருந்து உள்ள இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

    அவர்களிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார். அவருடன் பேசிய குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

    ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுபிறவி அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரதமர் மனதார பாராட்டினார்.   

    • இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது இறத்தல் வந்தது.
    • 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.

    விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது ஐதராபாத் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் இந்தத் தாக்குதல் 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்றும், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிக்கவே விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு சோதனை நடந்தது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவரவே விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது. 

    ஆகஸ்ட் 2, 1984 அன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில்  மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
    • மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

    பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    • ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது.

    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

    ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என தெரிவித்துள்ளது.

    • நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.
    • மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியா விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    சுமார் 50 ஆண்டாக நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.

    அரசியலமைப்பை காட்டிக் கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், சுயநலத்திற்காக உங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர்.

    பல ஆண்டாக பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. ஏற்கனவே இருந்தவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. மருத்துவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

    நாட்டை ஆண்டவர்கள், தங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, உங்களை கைவிட்டனர்.

    2014-ம் ஆண்டு நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டோம். இன்று அதன் விளைவுகளை இந்த நாடு காண்கிறது.

    11 ஆண்டுக்கு முன் இந்தியா முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

    மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியாவும், சத்தீஸ்கரும் முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    • பெலகாவி விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது.
    • அது கர்நாடகாவின் நிலம். கர்நாடகாவின் ஒரு பகுதி. யாரும் இதை மறுக்க முடியாது.

    கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சினை மாநில மகாஜன் கமிட்டி மூலம் முடிவடைந்துள்ளது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    பெலகாவி விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது. மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் அணுகியுள்ளது. ஆனால், மகாஜன் அறிக்கை இறுதியானது. நாங்கள் பெலகாவியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏனென்றால், அது கர்நாடகாவின் நிலம். கர்நாடகாவின் ஒரு பகுதி. யாரும் இதை மறுக்க முடியாது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இருநாட்டு எல்லைப் பகுதியில் மராத்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி பெலகாவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி. மகாஜன் கமிட்டி பெலகாவி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மகாராஷ்டிரா அதை ஏற்க மறுக்கிறது.

    • லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது.
    • ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை.

    பீகார் மாநிலத்தில் வருகிற 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோசமான வானிலை காரணமாக சிவான் மன்றும் முசாபர்பூரில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் காணொலி மூலம் பேசினார். அப்போது ஜே.பி. நட்டா பேசியதாவது:-

    ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் கீழ் பீகார் காட்டு ராஜ்ஜியத்தை கண்டது. மாநிலத்தில் முழுமையான அராஜகம் நிலவியது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. தொழிலதிபர்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்து கொண்டு வந்தது.

    ஷஹாபுதீனின் பயங்கரத்தை சிவான் கண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அவரது மகனை சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தியுள்ளது. லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது. ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை. அதனால்தான் ஷஹாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

    மறைந்த முகமது ஷஹாபுதீன் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 

    • அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.
    • குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.

    குறிப்பாக குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படும் முக்கிய இடமாக இப்பகுதி உள்ளது. ஆதலால் இந்தியாவின் இந்த கூட்டு பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி காட்சிகளை இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
    • தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பீகாரின் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் இங்கு நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி பீகாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

    15 ஆண்டுகளாக காட்டு ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளிலோ அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கைகளிலா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.

    கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பாபுவும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும் நிதிஷ் பாபுவும் இணைந்து பீகாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் 5 பாண்டவர்கள் போல, ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன.

    நமக்கு முன்னால் மகாகட்பந்தன் கூட்டணி உள்ளது. அது எங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக, தங்களுக்குள் போட்டியிடும் அளவுக்கு குழப்பத்தையும் உள்கட்சிப் பூசலையும் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    • டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், நாடு கடத்தப்பட்டார்.
    • நாடு கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என டிஎம்சி தெரிவித்துள்ளது.

    நாடு கடுத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகையில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்துவர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    கர்ப்பிணி பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.

    பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.

    மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்பு பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

    சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டெல்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.

    • சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி.
    • இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்.

    கேரளா பைரவி அல்லது கேரள மாநிலம் உருவான நாளைத் தொடர்ந்து, இன்று அம்மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் "கேரள மாநிலம் தீவிர வறுமையில் இருந்து விடுபட்டுள்ளது" என அறிவித்தார்.

    இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பினராயி விஜயன் அறிவிப்பு ஒரு மோசடி என சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியின் வெளியேறினர்.

    காங்கிரஸ் தலைமையிலான UDF "பினராயி விஜய் கூறுவது மோசடி. சட்டசபையை புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் "சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி. சட்டசபை விதியை அவமதிப்பதாகும். இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    மோசடி எனச் சொல்வது அவர்களுடைய பழக்கம். எங்களால் அமல்படுத்த முடியும் என்பதை மட்டுமே சொல்கிறோம். நாங்கள் சொன்னை அமல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான பதில் என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.

    • உணவு, குடிநீர் தராமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்து வந்தார்.
    • இளம்பெண் அறையில் வைத்து பூட்டப்பட்டு சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

    ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் போலவரத்தை சேர்ந்த இளம்பெண். இவருக்கும் ஜங்கா ரெட்டி கூடேமை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு இளம்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இளம்பெண்ணின் கணவரின் தம்பிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் அவரது மாமியார் மூத்த மருமகளுடன், இளையமகனுக்கு வாரிசு பெற்றெடுக்க முடிவு செய்தார். மூத்த மகனை வேலைக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்தார்.

    மூத்த மகன் வெளியூர் சென்ற பிறகு இளைய மகனுடன் இணைய வேண்டும் என மருமகளிடம் தெரிவித்தார். மாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்து மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர் மீது மாமியாருக்கு கடுமையான கோபம் வந்தது. இளைய மகனுடன் கட்டாயம் இணைய வேண்டும் என தெரிவித்தார்.

    இளம்பெண் மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாமியார், மருமகளையும் அவரது குழந்தையும் அறையில் வைத்து பூட்டினார்.

    அவர்களுக்கு உணவு, குடிநீர் தராமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்து வந்தார். தாயும், ஒரு வயது குழந்தையும் உணவு இல்லாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

    இளம்பெண் அறையில் வைத்து பூட்டப்பட்டு சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

    இளம்பெண்ணின் பெற்றோர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர். மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் போலீசாருடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த இளம்பெண்ணின் மாமியார் மற்றும் அவரது மைத்துனர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் அறையின் கதவை உடைத்து இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

    தாயும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணின் மாமியார், மைத்துனரை தேடி வருகின்றனர்.

    ×