என் மலர்
இந்தியா
- விஜய்க்கு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- விஜய் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானதையொட்டி டெல்லியிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சென்னை பழைய விமான நிலையத்தில் 6-ம் எண் நுழைவு வாயிலில் வந்து இறங்கிய விஜய்யை மத்திய விமான பாதுகாப்பு படையினர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அவர் விமான நிறுவனத்தின் காரில் ஏறி தனி விமானம் நிற்கும் பகுதிக்கு சென்றார்.
விஜய்க்கு ஏற்கனவே 'ஒய்' பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பின்னர் தனி விமானம் மூலம் விஜய் காலை 7.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தனி விமானத்தில் த.வெ.க. தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் சி.ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.
விஜய் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகம் செல்லும் வழியில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்கு வசதியாக இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது.
டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற விஜய், பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.
விஜய்யிடம் 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. இன்றைய விசாரணை முடிந்ததும் விஜய் தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தங்கும் அவர் நாளையும் விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானதையொட்டி டெல்லியிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய போது அவருக்கு விமான பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு அளித்தனர்.
மேலும் அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் விஜய் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியிலும், ஓட்டலில் இருந்து விசாரணைக்கு ஆஜராக செல்லும் வழியிலும் டெல்லி போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.
- மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் டெல்லி வந்தடைந்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தடைந்தார். அவருடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.
மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.
காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளதால் விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என கூறப்படுகிறது.
- 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
- பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் 10.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட் இதுவாகும்.
இதில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் நேற்றுமுன்தினம் காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர். அவர்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். கோவிலில் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மாதிரியை மூலவர் ஏழுமலையான் காலடியில் வைத்து அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
- மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழரை பால்தாக்கரே விரட்டி அடித்தார் என்று ராஜ் தாக்கரே பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களை இழிவாக பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
- மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது
- மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும். மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது. மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள் இந்தி உங்களின் சொந்த மொழி அல்ல என்பதை, உ.பி, பீகார் மாநில மக்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் இன்று அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
- ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனைக் கருவியும் பொருத்தப்பட்டது.
இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள்.
- 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது என்றார்.
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார்.
இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:
சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர்.
கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.
வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோமநாத் கோவில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோவிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றபோது அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடம் உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
- மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவையே உடல்நிலை மோசமடைய காரணம்
ஆஸ்துமா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தொடர்ந்து வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவற்றின் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இவையே அவருக்கு சுவாசக் கோளாறுகளைத் தூண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பிற துணை மருந்துகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அவரது உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஆஸ்துமா அதிகரிப்பு மற்றும் நெஞ்சு தொற்று தொடர்பான சுவாசக் கோளாறுகள் இருந்ததால், அவரது உடல்நிலை முன்னேறிய பிறகும் மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் கூட்டணியான மஹாயுதி, இன்று தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் அதாவலே, வினோத் தவ்டே, அமீத் சதம், ஆஷிஷ் ஷெலர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
- பிஎம்சி மூலம் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- முதியோருக்கான மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
- மும்பையின் 'பெஸ்ட்' (BEST) பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
- மும்பையில் உள்ள அனைத்து சாலைகளையும் கான்கிரீட் மயமாக்குவதன் மூலம் பள்ளங்கள் இல்லாத சாலைகள் உறுதி செய்யப்படும்.
- ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையை வெள்ள அபாயம் இல்லாத நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
- மும்பையில் உள்ள வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோகிங்கியாக்களை அடையாளம் கண்டு வெளியேற்ற AI கருவி பயன்படுத்தப்படும் மற்றும் அவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 30-35 லட்சம் வீடுகள் கட்டப்படும் மற்றும் 20,000 முடக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஆக்கிரமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பிஎம்சி தூய்மைப் பணியாளர்களுக்குச் சொந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
- பள்ளிக் பாடத்திட்டத்தில் மும்பையின் வரலாறு சேர்க்கப்படும் மற்றும் மராத்தி இளைஞர்களுக்காக 'மும்பை பெலோஷிப்' திட்டம் தொடங்கப்படும்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஈடுபடும் 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.
- 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) 'சத்தியாகிரகப்' போராட்டத்தை நாளைமுதல் (ஜன.12) நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை (12-ந் தேதி) திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது. சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் பா.ஜ.க. செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வருகிற 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மேலும், மாநில அரசு மேற்கொண்டு வரும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன. வடக்கு மண்டல அணிவகுப்பு காசர்கோடு முதல் பாலக்காடு வரையிலும், மத்திய மண்டல அணிவகுப்பு பத்தனம்திட்டா முதல் எர்ணாகுளம் வரையிலும் நடைபெறும். தெற்கு மண்டல அணிவகுப்பு திருச்சூர் முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும்." என்று அவர் கூறினார்.
மேலும் சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு தொடர்பாக பேசிய அவர், இந்த வழக்கில் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம் என்றும், கோயிலில் இருந்து திருடப்பட்ட தங்கம் மீட்கப்படும் என்றும் சிபிஐ(எம்) ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது என தெரிவித்தார்.






