என் மலர்
இந்தியா

கேரளாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிரடி கைது
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது 3 பாலியல் பலாத்காரம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் ஓட்டலில் எம்.எல்.ஏ.-வை மடக்கு பிடித்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தேடிவந்த நிலையில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இந்த சூழலில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண் மின்னஞ்சல் மூலம் கேரள முதல்-மந்திரிக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மம்கூத்ததில் மீதான 3-வது புகார் ஆகும்.
இதுகுறித்து விசாரிக்க மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் இருந்த ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ.வை தனிப்படையினர் நேற்று நள்ளிரவு மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பிறகு அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். அவரது செல்போன்களையும் தனிப்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணைக்காக அவரை பத்தனம்திட்டாவில் உள்ள ஆயுதப்படை முகாமிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் தெரிவித்த பெண், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஓட்டலுக்கு வரவழைத்து ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் இருந்து விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், காலணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்காக பெரும் தொகையை தன்னிடம் இருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய தாகவும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் கருவில் டி.என்.ஏ. பரிசோதனையும் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தான் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.






