என் மலர்
நீங்கள் தேடியது "குலசேகரன்பட்டினம்"
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
- அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகவும் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா பெரும் திருவிழா தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 12 நாட்கள் நடக்கும். இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு தசரா பெரும் திருவிழா அடுத்த மாதம் மாதம் 23-ந்தேதி (செவ்வாய்கிழமை) கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் வசதிக்கு ஏற்றவாறு 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 3 நாள் என விரதம் இருந்து கோவிலில் கொடியேறியதும், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிறான காப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் கொண்டு சேர்ப்பதே தசராவின் சிறப்பு அம்சமாகும்.
அந்த வகையில் 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 4-ந்தேதியும், 51 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 17-ந்தேதியும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.
அதேபோல் 31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் வருகிற 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 13-ந் தேதியும், 11 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் அடுத்தமாதம் 23-ந்தேதியும் மாலை அணிகிறார்கள்.
விரதம் தொடங்கும் முன் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துமாலை அணிவித்து விரதம் தொடங்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விரதம் தொடங்கி வருகின்றனர்.
விரதம் தொடங்கியபின் வீட்டில் முத்தாரம்மன் படம் வைத்து சின்னகுடில் அமைத்து தினசரி காலை, மாலை பூஜை செய்து வருவார்கள். தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்க தினசரி கோவிலுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
- திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார்.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி, மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன், உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் ஆணையாளர் ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். கூடுதல் பி.டி.ஒ.பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் உமரி ஷங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெசி பொன்ராணி, செல்வக் குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம் என்ற துரை, இசக்கி, முத்துசாமி, மிராஉம்மாள், தனலெட்சுமி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரசூல் தின் நன்றி கூறினார்.
- குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது.
- வழிபாட்டின் 3-ம் நாளில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடியூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் 36- வது ஆண்டை முன்னிட்டு முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது. 2-ம்நாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 3-ம் நாள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், மனோகரன், சாத்தாக்குட்டி, சுயம்புராஜ், முருகன் மற்றும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.
- இரவு 8.10 மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உடன்குடி:
ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழி பாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜ லட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அன்று மாலை 4.10 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம், 108சங்காபிஷேகம், 108கலாசாபிஷேகம், இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, இரவு 8.30மணிக்கு வில்லிசை, இரவு 12மணிக்கு கற்பூர ஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடக்கிறது.
ஜனவரி 1-ந் தேதி காலை 6மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், காலை 6.20மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, காலை 6.30மணிக்கு 108கலச பூஜை, உலக நன்மை வேண்டிய தீபாராதனை, காலை 6.45மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகாதீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8.10மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனை, காலை 8.30மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க 1008பால்குட பவனி முக்கியவீதிகள் வழியாக வருதல், பகல் 12.20மணிக்கு விவசாயம் தழைக்க, மழைவேண்டி 1008பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.10மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு 1008மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8.10மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடை மாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகி கள் செய்து வருகின்றன.
- குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.
- முத்தாரம்மன் தேர் பவனி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
உடன்குடி:
குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், ஸ்ரீ முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து நடத்தும் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5 மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடை பெறும்.
இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, 8.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கற்பூரஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 6 மணிககு மஹாகணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், காலை 6.20 மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, 6.30 மணிக்கு 108 கலசபூஜை, உலக நன்மை வேண்டிய மஹாதீபாராதனை நடைபெறும்.
காலை 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், 9 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகாதீபா ராதனை நடைபெறுகிறது.
காலை 9.30 மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க 1,008 பால்குட பவனி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்து சேரும்.
பிற்பகல் 12 மணிக்கு விவசாயம் தழைக்கவும், மழைவேண்டியும் 1008 பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு
1, 008 மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு முத்தாரம்மன் தேர் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடைமாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.
இந்த 2 நாள் நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுதீன் தர்காவில் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
- தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள செய்யது சிராஜுதீன் தர்கா தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற தர்காவில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வைத்து ஊர்வலமாக சென்று தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினசரி காலை, மாலையில் சிறப்பு தொழுகை மார்க்க உபன்னியாசம் தொடர்ந்து நடைபெறும். விழாவின் முக்கிய நாட்களான வருகிற 4-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சந்தனம் பூசப்பட்டு அபூர்வ துவா ஓதி ஓதப்படும், 5-ந் தேதி நள்ளிரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு அலங்காரத்துடன் ஊர் முழுவதும் சுற்றி வரும் வீடு தோறும் தப்ரூக் வழங்கப்படும்.
6-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு வான வேடிக்கை, 7-ந் தேதி இரவு 7 மணி 10 மணி வரை விளக்கு ஏற்றப்படும், 8-ந் தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரிவிழா நிறைவு பெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மூத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் செய்து வருகிறார்.
- கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வரப்படுகிறது.
- பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்தநாயகி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இது தென் மாவட்டங்களில் முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் வருகிற 31-ந் தேதி வருசாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6மணிக்கு யாகசாலை பூஜைகள், பல்வேறு மந்திரங்கள் ஒதபடும். காலை 7மணிக்கு கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவிலுக்கு வருதல். காலை 9மணி முதல் நண்பகல் 12மணிக்குள் மூலஸ்தான சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகேஸ்வர பூஜை, உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடக்கிறது. பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 7மணிக்கு சிறப்பு திரு விளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் அர்ச்சனை, கற்பூர ஆராத்தி, இரவு 8.30மணிக்கு உற் சவமூர்த்திக்கு சோடாச உபசார தீபாராதனை, இரவு 9மணிக்கு சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது.
ஏற்பாடுகளை தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், வருசாபிஷேக சிறப்பு கட்டளைதாரர்கள், குலசேகரன்பட்டினம் சைவ வேளாளர் பெருமக்கள் செய்து வருகின்றனர்.
- நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் நோன்பின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
உடன்குடி:
தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை தாங்கி நோன்பின் நன்மைகள், மகிமைகள், மற்றும் சமத்துவம், சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய செயல்பாடுகளுடன் ஒவ்வொரு மனிதனும் எப்படி செயல்பட வேண்டும், சகோதர தத்துவத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று பேசினார்.
ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகரத்தலைவர் ஆறுமுகராஜா, செயலாளர் மரிய இருதயராஜ், உடன்குடி ஒன்றிய ஆலோசகர் பேச்சுமுத்து, ஆத்தூர் கவுன்சிலர் கேசவன் மற்றும் திருமணி உட்பட பலன் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.
- இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி- அம்பாள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை மற்றும் சுவாமிகள் எழுந்தருளல் ஆகிய நிகழ்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. சிவனடியார்கள் இல்லங்குடி, சிவானந்த நடராஜன், ரமணகிரி, பண்டார சிவன்பிள்ளை ஆகியோர் தேவாரம் பாடி வந்தனர்.
சுவாமி, அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்படுதல், சமய சொற்பொழிவு மற்றும் விழா நாட்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு, கும்பபூஜை, அபிஷேகம், தீபாராதனை, திருமுறை பாடல்கள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கல், திருமுறை பண்ணிசை, நடராஜர் ஊருகுச் சட்டசேவை, நடராஜர் சிகப்பு, வெள்ளை, பச்சை சாத்தி புறப்பாடு, திருச்சுன்னம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜையுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும்.
- குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டது.
உடன்குடி:
இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.
ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நில நடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயற்கைகோள்களை ஏவ முடியும்.
இதனால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த முடியும். ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்து உள்ளது. தொலையுணர்வு செயற்கைகோள்களை தெற்கு நோக்கியும், தொலைதொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கு இருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் கிழக்கு திசையில் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது ஆகும்.
இதனால் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும்.
நிலையான கால நிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது.
இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். அதே போன்று கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு சுமார் 120 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும்.
இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவதை விட சற்று அதிகம். ஆனால் இதனால் ஏற்படும் இழப்பை புவியீர்ப்பு சுற்று வேக அதிகரிப்பால் ஏற்படும் விசையை கொண்டு ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து முதலில் பிரியும் பாகம் வங்காள விரிகுடாவிலும், 2-வது பாகம் இந்திய பெருங்கடலிலும் விழும். இதனால் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுதல்களை மேற்கொள்ள முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தமிழக அரசிடம் இருந்து நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து குலசேகரன்பட்டினம் அருகே 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. பின்னர் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை தொடங்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக ரூ. 6 கோடியே 24 லட்சத்திற்கு டெண்டர்கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர் எடுக்க விரும்புவோர் வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்ததும் அதில் இருந்து ஒரு வாரத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.
- “இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் உனக்கு பாதை காட்டும் என்றது அசரீரி.
- இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.
இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.
ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.
இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.
சிவனைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார்.
அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார்.
அப்போது, "இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும்.
அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்" என அசரீரி கேட்டது.
அதன்படியே எறும்புகள் வழிகாட்ட, அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.
பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்.
திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம்.
இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது ஆகும்.
பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.
பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி,
அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர்.
இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.
அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள, வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்குமாம்.
திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர்.
இதைத் தரிசிக்க நம் வேதனைகள் பறந்தோடி விடும்.






