என் மலர்
வழிபாடு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் செப். 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
- அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகவும் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா பெரும் திருவிழா தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 12 நாட்கள் நடக்கும். இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு தசரா பெரும் திருவிழா அடுத்த மாதம் மாதம் 23-ந்தேதி (செவ்வாய்கிழமை) கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் வசதிக்கு ஏற்றவாறு 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 3 நாள் என விரதம் இருந்து கோவிலில் கொடியேறியதும், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிறான காப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் கொண்டு சேர்ப்பதே தசராவின் சிறப்பு அம்சமாகும்.
அந்த வகையில் 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 4-ந்தேதியும், 51 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 17-ந்தேதியும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.
அதேபோல் 31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் வருகிற 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 13-ந் தேதியும், 11 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் அடுத்தமாதம் 23-ந்தேதியும் மாலை அணிகிறார்கள்.
விரதம் தொடங்கும் முன் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துமாலை அணிவித்து விரதம் தொடங்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விரதம் தொடங்கி வருகின்றனர்.
விரதம் தொடங்கியபின் வீட்டில் முத்தாரம்மன் படம் வைத்து சின்னகுடில் அமைத்து தினசரி காலை, மாலை பூஜை செய்து வருவார்கள். தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்க தினசரி கோவிலுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






