மும்பை குறித்து அண்ணாமலை பேச்சு: சர்ச்சையான நிலையில் கைது செய்ய சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?.முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்
மும்பை குறித்து அண்ணாமலை பேச்சு: சர்ச்சையான நிலையில் கைது செய்ய சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
Published on

மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில், மாநகராட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக மேயர் வேட்பாளரை ஆதரித்து பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின்போது, மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை எனக் கூறியதாக சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

அண்ணாமலை பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர். இது பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? எனத் தெரிய வேண்டும். அவருக்கு எதிராக இங்கே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?. முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது.

முதல்வர் பட்நாவிஸ் இதில் தெளிவான நிலை எடுக்க வேண்டும். துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டேயின் சுயமரியாதை எங்கே. நீங்கள் எவ்வளவு கையாலாகாதவர்?.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, அந்தக் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம், அதனால் அவர் சரியாக என்ன சொல்ல வந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார்.

அண்ணாமலை பிரசாரத்தின்போது "மத்தியில் மோடி ஜி, மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் ஜி, மும்பை மாநகராட்சியில் பாஜக மேயர். ஏனென்றால்... மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை. அது சர்வதேச நகரம்" எனப் பேசியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com