search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    • தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.
    • 11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து வழங்குவதற்கு சிறிதுகால அவகாசம் தேவைப்படும். அதுவரையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழக்கம் போல வினியோகிக்கப்படும்.

    11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக சான்றிதழ் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இணை இயக்குனர்கள் நரேஷ் செல்வக்குமார் உடனிருந்தனர்.

    தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையுடன் பெற்று கொள்ள வேண்டும். அரசு, மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் திங்கட்கிழமை முதல் தற்காலிக சான்றிதழை பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

    இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவரது காரில் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில் சென்னையில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சா பரிமாற்றம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுப்படி தேனி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மதுரவாயல் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மதுரவாயல் போலீசார் உடன் உள்ளனர்.

    சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே சென்னையில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

    • நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.70 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடல்போல் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவானிசாகர் அணை தற்போது குளம்-குட்டை போல் சுருங்கி காட்சியளிக்கிறது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 21 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.18 அடியாக குறைந்துள்ளது. 33.45 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.29 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீர்மட்டம் கடந்த ஒன்றரை மாதமாக முற்றிலும் வற்றிப்போய் உள்ளது.

    பவானிசாகர் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
    • சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

    திருப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

    அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.

    கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • அரியலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பில் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
    • சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26-ந்தேதி முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ-மாணவிகள் எழுதினா்.

    தோ்வு முடிவுகளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 266 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.55 சதவீதமாகும்.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.16 சதவீதம் இந்த தடவை அதிகம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கூடுதலாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்வு எழுதிய 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.58 சதவீத மாணவர்கள் தேர்ச்சியாகும்.

    மாணவிகளை பொறுத்தவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 061 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 94.54 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட 5.5 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 625 பள்ளிகள் நடத்தி இருந்தன. இதில் 4,105 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 1,364 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 87.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.77 சதவீதம் பேரும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 97.43 சதவீத பேரும், இருபாலர்கள் படிக்கும் பள்ளிகளில் 91.93 பேரும், பெண்கள் பள்ளிகளில் 93.80 சதவீத பேரும், ஆண்கள் பள்ளிகளில் 83.17 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    தமிழ் பாடத்தில் 8 மாணவ-மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக கணிதம் பாடத்தில் 20 ஆயிரத்து 691 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    தமிழ் மொழி பாடத்தில் 96.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 99.15 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவீத பேரும், அறிவியல் பாடத்தில் 96.72 சதவீத பேரும், சமூக அறிவியலில் 95.74 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    10-ம் வகுப்பு தேர்வை 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதி இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 92.42 ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகளில் 260 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 228 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் வழக்கமாக விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்து வந்தது. தற்போது அரியலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பில் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

    முன்னதாக இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப்படி வத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இணையதளங்கள் வாயிலாகவும் தோ்வு முடிவை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    • மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,308 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.31 சதவீதமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,707 பேரில 17,179பேர் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,692 பேர் தேர்வு எழுதியதில் 15,121 பேர் வெற்றி பெற்றனர். இது 95.17 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

    அரியலூர்97.31, சிவகங்கை 97.02, ராமநாதபுரம்96.36, கன்னியாகுமரி96.24, திருச்சி95.23, விருதுநகர்95.14, ஈரோடு95.08, பெரம்பலூர்94.77, தூத்துக்குடி94.39, விழுப்புரம்94.11, மதுரை94.07, கோவை94.01, கரூர்93.59, நாமக்கல்93.51, தஞ்சாவூர்93.40, திருநெல்வேலி93.04, தென்காசி92.69, தேனி92.63, கடலூர்92.63, திருவாரூர்92.49, திருப்பூர்92.38, திண்டுக்கல்92.32, புதுக்கோட்டை91.84, சேலம்91.75, கிருஷ்ணகிரி91.43, ஊட்டி90.61, மயிலாடுதுறை90.48, தர்மபுரி90.49, நாகப்பட்டினம்89.70, சென்னை88.21, திருப்பத்தூர் (வி)88.20, காஞ்சீபுரம்87.55, செங்கல்பட்டு87.38, கள்ளக்குறிச்சி86.83, திருவள்ளூர்86.52, திருவண்ணாமலை86.10, ராணிப்பேட்டை85.48, வேலூர்82.07, காரைக்கால்78.20, புதுச்சேரி91.28.

    • ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
    • தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாடு-புதுச்சேரியில் முடிந்துள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார்.

    ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பதவியை பறிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்க மாட்டார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு 1½ ஆண்டுகளில் 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் வர இருப்பதால் அதற்கும் இப்போதே தி.மு.க. தன்னை தயார்படுத்த தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க.வில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருப்பது போன்று தி.மு.க.விலும் கொண்டு வரவேண்டும் என்று தலைமைக்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

    காரணம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 5 சட்டசபை தொகுதிகளை ஒரு மாவட்டச் செயலாளர் கவனித்து வருகிறார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் இருப்பதால் அவர் முடிவு செய்வதை பொறுத்துதான் மாவட்டம் பிரிப்பது அமையும் என்று கூறி வருகின்றனர்.

    ஆனாலும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் உள்ள நிலவரங்களை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள காரணத்தால் லண்டனில் இருந்து திரும்பியதும் தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்வார் என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


    2026 சட்டசபை தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்பதை உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளார்.

    அப்படி இருந்தும் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சனை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

    தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியும் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைத்து விட்டால் இப்போது உள்ள நிலையே தொடரும்.

    ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    அதில் ஒரு மாற்றம் தான் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம். 234 தொகுதிகளுக்கும் பாகுபாடின்றி 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நடைமுறையை தலைமை கொண்டு வந்து விடும் என்று பேசிக்கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க தி.மு.க. மேலிடம் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதற்காகவே அறிவாலயம் பக்கம் கட்சி நிர்வாகிகள் பலர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த விசயத்தில் தலையிடும் போது இளைஞரணியில் உள்ள பலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    • முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்.

    மதுரை:

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
    • வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 9104 மாணவர்கள் 9253 மாணவிகள் என 18,357 தேர்வு எழுதினர். இதில் 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக குறைந்த தேர்ச்சியால் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிட்டத்தக்கது.

    இந்தத் தேர்வில் திருப்பத்தூர் மாநில அளவில் 31-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்துக்கு முன்னதாக 37-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் 36-வது இடத்தைப்பிடித்துள்ளது.

    • குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
    • உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன.

    சென்னை :

    தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

    மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!

    குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

    மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
    • போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே மாணவன் ஜீவா உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×