search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th exam"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விக்கான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
    • தாய் கஸ்தூரி கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்திவர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மாவின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    அவரது தாயாரை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர்.
    • தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது57). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவானி.

    இவர்களது மகள்கள் பொற்செல்வி, ஜெயலட்சமி. இவர்களில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். ஜெயலட்சமி காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

    மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித்தால்தான் வாழ்க்கை யில் முன்னேற முடியும், எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று கடைசி தேர்வு என்பதால் ஜெயலட்சுமி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    இந்நிலையில் மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார். இதனால் கடைசி தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலைகுலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது என்று கலங்கினார்.

    எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று காலை ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். இதுபற்றி அறிந்ததும் அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயலட்சுமிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி தனது கடைசி பரீட்சையை எழுதினார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, எனது தந்தை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழுதினேன் என்றார். இன்று மாலை மூர்த்தியின் இறுதி சடங்கு நடைபெறு கிறது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
    • மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    அதன்படி இன்று (6-ந் தேதி) தமிழ், 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது .

    மொத்தம் 188 தேர்வு மையங்களில் நடைபெறும் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 24, 506 ஆண்களும் 23 ஆயிரத்து 819 பெண்களும் மற்றும் 48,325 பேர் எழுதுகின்றனர்.

    தனித் தேர்வாளர்கள் 23 ஆயிரத்து 78 பேர், நரம்பியல் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 270 பேர், மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த பொதுத் தேர்வில் 2059 அறை கண்காணிப்பாளர் மற்றும் 239 பறக்கும் படையினர் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் வாட்ச், பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதித்தனர்.

    • திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 10 சதவீதம் குறைந்து 30வது இடத்தையே பெற முடிந்தது.
    • மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 31.03 சதவீதத்துடன் கடைசி நிலையில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில், 29 இடங்கள் பின்னடைந்துள்ளது.10-ம் வகுப்பை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 357 பள்ளிகளில் 150 பள்ளிகள் அரசு பள்ளிகள். அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களில் 80.25 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019ல் 98.53 சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 10 சதவீதம் குறைந்து 30வது இடத்தையே பெற முடிந்தது. பிற தனியார், மெட்ரிக் பள்ளிகள் தங்கள் தேர்ச்சி சதவீதத்தை ஓரளவு தக்க வைத்துள்ள போதும் அரசு பள்ளிகள் தக்க வைக்க தவறியதே இதற்கு முக்கிய காரணம்.அரசுப்பள்ளிகள் பல கடினமான சூழ்நிலையிலும் சாதித்துக்காட்டியுள்ளன. இருப்பினும், பல்வேறு பள்ளிகள் பின்தங்கியுள்ளன.

    மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 31.03 சதவீதத்துடன் கடைசி நிலையில் உள்ளது. இங்கு 29 மாணவிகள் தேர்வெழுதியதில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அடுத்த இடத்தில் 42.25 சதவீதம் தேர்ச்சியுடன் ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தேர்வெழுதிய, 70 பேரில் 30 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.கே.எஸ்.சி., பள்ளி 55.77 சதவீத தேர்ச்சியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு 407 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 227 பேர் மட்டுமே தேர்ச்சியாகியுள்ளனர்.

    கே.வி.ஆர்., நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 35 ஆண்கள், 38 பெண்கள் தேர்வெழுதியதில் 13 மாணவர்கள், 29 மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 57.53 ஆக உள்ளது.அதேபோல் 59.34 சதவீதம் பெற்ற அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 156 மாணவர்களில் 90 பேர், 117 மாணவிகளில் 72 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஊரடங்கு என பொத்தாம்பொதுவான காரணத்தை கூறிவிடமுடியாது.திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் தங்கள் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் பங்கெடுக்க வைக்கவும், மீண்டும் பள்ளிகளுக்கு வரவைக்கவும் பெரும் போராட்டத்தையே சந்தித்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் ஒரு தொழில் நகரம். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. பெற்றோர் தொழில், வாழ்வாதார சூழல் பெரிதும் பாதிக்கப்பட, அது மாணவர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பள்ளி திறந்தபோதும், பெருவாரியான மாணவர்கள் வரவில்லை.பலர், நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர். மீண்டும் பள்ளி சூழலுக்கு வரவைப்பது பெரும்பாடாக இருந்தது. பொதுத்தேர்வு இருக்காது என்ற மனநிலையில் வகுப்பிற்கு 10 பேர் வரவில்லை என்றார்.

    மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், முடிவுகளை ஆய்வு செய்து பின்னடைவுக்கான காரணங்களை பகுத்தாய உள்ளோம். மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைத்து தேர்ச்சி விகித்தை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாடவாரியாக, ஆசிரியர் வாரியாக ஆராய்ந்து உரிய யுத்திகளை தீட்டி செயல்முறைப்படுத்தப்படும். மீண்டும் பழைய இடத்திற்கு முன்னேற ஆவன செய்யப்படும் என்றார்.

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்

    மயிலாடுதுறை:

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×