search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண்கள்: இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை
    X

    மாணவன் கீர்த்திவர்மாவுக்கு அவரது தாயார் இனிப்பு ஊட்டிய போது எடுத்த படம்.

    10-ம் வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண்கள்: இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விக்கான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
    • தாய் கஸ்தூரி கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்திவர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மாவின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    அவரது தாயாரை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×