search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugarcane"

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாத கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    பூதலூர்:

    பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாத கண்டித்தும், உடனடியாக பொங்கல் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தலைமைவகித்தார். விவசாய அணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் நக்கீரன், திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி பிரபா, திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும், நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்தார்.

    • நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
    • வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை

    மடத்துக்குளம்,நவ.21-

    மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

    சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
    • 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார். 

    • இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
    • ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.

    இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.

    இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.

    இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.

    தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.

    • ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஆலையில் அரவை துவங்கியது.இந்நிலையில் ரெட்டிபாளையம் விவசாயிகள், கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் அலுவலர்கள் நடவடிக்கையால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். கரும்பு வெட்ட முன்னுரிமை பட்டியலை பின்பற்றவில்லை.

    குறித்த நேரத்தில்அறுவடை செய்யாமல், கரும்பு சக்கையாக மாறி கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்சிராஜ்குமார், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ரெட்டிபாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பதிவு செய்த விவசாயிகளிடம் அறுவடை குறித்து, அலுவலர்கள் எவ்வித தகவலும் தரவில்லை. வெட்டு ஆட்கள் அனுப்புவதிலும் குளறுபடி இருந்தது. ஓராண்டு கரும்பு சாகுபடிக்கு வாங்கிய கடனைக்கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கூ ட்டுறவு சங்கத்தில் சாகுபடிக்காக பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்றனர். பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

    இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவை செய்யக்கூடிய அளவிற்கு பிழிதிறன் கொண்டது. ஆனால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் அரவை நிறுத்தப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட்டு வருகிறது.

    கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெட்டப்படும் கரும்பின் அளவு குறைந்து கரும்பு அரவை நிறுத்தப்பட வேண்டியதாகிறது. இந்த அரவைப்பருவத்தில் தற்போது வரை 80 ஆயிரத்து 451 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் முதிர்ச்சியடைந்த கரும்புகளை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்புவதற்கு 13 மாதங்களுக்கு மேலாகிறது.

    இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பிற்கு 2021-2022நடவு பருவத்தில் 4 ஆயிரம் ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு வெட்டப்படாமல் காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு நடவு பருவத்தில், ஆலைக்கு கரும்பு பதிவு மந்தமாக உள்ளது. அதனால் இதுவரை கன்னி கரும்பு 110 ஏக்கர், கட்டை கரும்பு 610 ஏக்கர் என மொத்தம் 720 ஏக்கர் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு பிரிவு களப்பணியாளர்கள் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கரும்பு பதிவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    • ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.
    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதும், விரட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக கரும்புகளை ருசிக்க யானைகள் குட்டி யுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. கரும்புகளின் வாசனையால் அந்த லாரியை யானைகள் திடீரென வழி மறித்து நிறுத்தியது.

    பின்னர் அதில் இருந்த கரும்புகளை பிடுங்கி ருசித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி னார். தொடர்ந்து யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து அங்கேயே உலாவி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தினர். வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுத்தனர். நீண்ட நேரம் சாலையை வழி மறித்த யானை கூட்டம் தானாக வனப்பகுதியில் சென்றது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரும்புகளை ருசித்த யானையை வாகன ஓட்டிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    • சென்னிமலை அருகே கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. அவரது கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து சேதமானது. அந்த வழியாக சென்ற சிலர் பீடி, சிகரெட் பற்ற வைத்து விட்டு வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத்தொகையை பெற்றுத் தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் மற்றும் விவசாயிகள் உர சாக்குகளை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டும், கையில் கரும்புகளோடும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.இதையடுத்து அவர்கள் தங்களது மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது ;-

    குறுவை சாகுபடி பணிகள் டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மேலும் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளின் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது.
    • சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த தேசிய நெடு ஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது. இதை கண்டு வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை பின் நோக்கி இயக்கினர்.

    அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

    தொடர்ந்து அந்த பகுதியில் வந்த மற்றொரு காரை யானைகள் வழி மறித்து தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் இருந்தவர் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.

    இதை யடுத்து வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர். ஆனால் அங்கேயே உலாவிய யானை கள் சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசனூர் வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அதிக பாரம் இருந்ததால் டிரைவர் அந்த லாரியில் இருந்து கரும்புகளை ரோட்டோ ரம் வீசி விட்டு சென்றார்.

    இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ரோட்டோரம் இருந்த கரும்புகளை சாப்பிட்டது. கரும்புகள் தீர்ந்து விட்டதால் யானைகள் அங்கேயே உலாவி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை யானை கள் வழி மறித்து அட்ட காசம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வழியாக கரும்பு கள் ஏறறி வரும் லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீசி விட்டு செல்கிறார்கள். இதை சாப்பிடுவதற்காக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்து வருகிறது.

    எனவே லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீச வேண்டாம். மீறி கரும்புகளை வீசுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது.
    • கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

    ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.

    கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதில் தற்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் இருக்கும் கரும்பு ஆலைக்கு கரும்புகள் ஏற்றி லாரிகள் தினமும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வருகின்றது.

    இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது. பின்னர் அருகே இருக்கும் வாகனங்களை விரட்ட ஆரம்பித்தது.

    ஒரு கட்டத்தில் யானை ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்று விட்டது. பிறகு மெல்ல, மெல்ல யானை நகர்ந்து காட்டிற்குள் சென்றதால் வாகனங்கள் நகர ஆரம்பித்தன.

    இதனால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை அடர்ந்த வனப்ப–குதிக்குள் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×