search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் செய்யாததால் கரும்புகள் அழிப்பு - ரெட்டிப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
    X

    கோப்புபடம்.

    கொள்முதல் செய்யாததால் கரும்புகள் அழிப்பு - ரெட்டிப்பாளையம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

    • ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஆலையில் அரவை துவங்கியது.இந்நிலையில் ரெட்டிபாளையம் விவசாயிகள், கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் அலுவலர்கள் நடவடிக்கையால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். கரும்பு வெட்ட முன்னுரிமை பட்டியலை பின்பற்றவில்லை.

    குறித்த நேரத்தில்அறுவடை செய்யாமல், கரும்பு சக்கையாக மாறி கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்சிராஜ்குமார், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ரெட்டிபாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பதிவு செய்த விவசாயிகளிடம் அறுவடை குறித்து, அலுவலர்கள் எவ்வித தகவலும் தரவில்லை. வெட்டு ஆட்கள் அனுப்புவதிலும் குளறுபடி இருந்தது. ஓராண்டு கரும்பு சாகுபடிக்கு வாங்கிய கடனைக்கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கூ ட்டுறவு சங்கத்தில் சாகுபடிக்காக பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்றனர். பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

    இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவை செய்யக்கூடிய அளவிற்கு பிழிதிறன் கொண்டது. ஆனால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் அரவை நிறுத்தப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட்டு வருகிறது.

    கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெட்டப்படும் கரும்பின் அளவு குறைந்து கரும்பு அரவை நிறுத்தப்பட வேண்டியதாகிறது. இந்த அரவைப்பருவத்தில் தற்போது வரை 80 ஆயிரத்து 451 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் முதிர்ச்சியடைந்த கரும்புகளை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்புவதற்கு 13 மாதங்களுக்கு மேலாகிறது.

    இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பிற்கு 2021-2022நடவு பருவத்தில் 4 ஆயிரம் ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு வெட்டப்படாமல் காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு நடவு பருவத்தில், ஆலைக்கு கரும்பு பதிவு மந்தமாக உள்ளது. அதனால் இதுவரை கன்னி கரும்பு 110 ஏக்கர், கட்டை கரும்பு 610 ஏக்கர் என மொத்தம் 720 ஏக்கர் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு பிரிவு களப்பணியாளர்கள் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கரும்பு பதிவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×