search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள்"

    • வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன.
    • இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வாரி பாடலா வனப்பகுதியில் சீலா தோரணம் பூங்கா உள்ளது. இதன் அருகில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் ஒன்று உள்ளது.

    வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அருகில் இருந்த சீலா தோரணத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    அங்கிருந்த மரங்கள் மற்றும் பூ தொட்டிகள், பூச்செடிகள் ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

    • ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது.
    • யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் 9/6 சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் என்பதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது. சில நேரம் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை-மூணாறு சாலை பகுதிக்கு வருகின்றன. யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும். பின்னர் வாகன ஓட்டிகள் சென்றுவிடலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன.
    • யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதேப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.
    • யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    அதிலும் சமீப காலமாக யானைக் கூட்டங்கள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோமசுந்தரம் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவில் புகுந்த 3 காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 50-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.

    இதனால் விவசாயிக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    சேதமடைந்த வாழை மரங்களுக்கும், பாக்கு மரங்களுக்கும் வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
    • குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்த பகுதியாகும். வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

    வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த யானைகளுடன் ஒரு குட்டி யானையும் இருந்தது. அந்த குட்டியானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்ற போது, அங்கிருந்த முதலை, குட்டி யானையை தாக்கி இருக்கலாம் என்றும், அதில் தும்பிக்கையை இழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த குட்டி யானையை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் வழக்கம் போல சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் அந்த சாலையை யானை கூட்டம் கடந்தது. அப்போது அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்றும் நடந்து சென்றது.

    அதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தும்பிக்கை இல்லாமல் தன் தாயுடன் தன்னம்பிக்கையுடன் வாழும் குட்டி யானையை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார்.
    • யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம் மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியதில் 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார். தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இரவு நேரத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
    • யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் அந்த யானை சாலையில் பிளிறியவாறு ஓடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை அங்கேயே முகாமிட்டு ஊருக்குள் சுற்றிச்சுற்றி வந்தபடி இருந்தது.

    இதனால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வெகுநேர போராட்டத்துக்கு பிறகு யானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்திய பிறகும் யானை மயக்கமடைய வில்லை.

    இதனால் மற்றொரு டோஸ் செலுத்தப்பட்டது. அதன்பிறகே யானை மயக்கநிலைக்கு வந்தது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோரின் கூட்டு முயற்சியால் ஊருக்குள் புகுந்த காட்டு யானை 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிக்கப்பட்டது.

    அந்த யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யானை அங்குள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து கேரள மாநிலம் மானந்த வாடிக்கு வந்திருக்கிறது.


    இதனால் அந்த யானையை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியிலேயே விட முடிவெடுக்கப்பட்டது. யானையை கொண்டு செல்வதற்காக பிரத்யேக வாகனம் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் 3 கும்கி யானைகளின் உதவியுடன் காட்டுயானை ஏற்றப்பட்டது.

    இரவு 10.15 மணிக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட யானை கர்நாடகா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த யானை பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது. வனப்பகுதிக்கு செல்ல விட்டாலும், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, யானை ஒரு முறை மயங்கி விழுந்ததாக வனத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

    அந்த யானைக்கு உடல் நலம் பாதித்திருந்ததால் இறந்ததா? அல்லது அளவுக்கு அதிமாக மயக்க மருந்து செலுத்தியதால் இறந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மானந்தவாடியில் ஊருக்குள் புகுந்தபோது அந்த யானை அங்கும் இங்கும் ஓடியபடியே இருந்திருக்கிறது. ஆனால் எந்த பொருளையும் அது சேதப்படுத்தவில்லை, யாரையும் தாக்கவும் முயற்சிக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில் அந்த யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
    • வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.

    இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.

    • வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.
    • ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனபகுதியில் யானை, கரடி, புலி. சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வசிக்கின்றன.

    இந்த வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.

    தமிழக - கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வால்பாறை பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அந்த யானைகள் வால்பாறை சோலையார் அணையில் குளித்து குதூகலம் அடைந்தன. அணையில் தற்போது தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளிக்க ஏதுவாக இருந்தது. அந்த யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.

    தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கரும்புகளை ரேஷன் கடைகளில் வைத்துள்ளனர். இதனால் யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி கரும்புகளை ருசிக்க வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் கரும்புகளின் சக்கைகளை வீட்டிற்கு வெளியில் போட வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ×