என் மலர்
உலகம்

நிலநடுக்கத்தால் குலுங்கிய அமெரிக்கா.. குட்டிகளை காப்பாற்ற யானைகளின் நெகிழ்ச்சி செயல் - வீடியோ வைரல்
- 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
- காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.
இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.
நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன.






