search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harvesting"

    • வருகிற 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
    • 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 8 ஹெக்டர் அளவில் புதிய பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 20 ஹெக்டர் அளவில் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இலக்கினை 75 சதவீதம் சாதனை அடையும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை கன்று நடவு விழா வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்த மாபெரும் விழாவில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 20 லிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற கோத்ரெஜ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது.

    தற்போது நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, வயல் வரைபடம் மற்றும் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் இந்த எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தஞ்சாவூர், பூதலூர் -9943422198, ஒரத்தநாடு, திருவோணம் -9488945801, பட்டுக்கோட்டை, மதுக்கூர் - 6374921241, கும்பகோணம், திருவிடைமருதூர்,

    திருப்பனந்தாள் - 9842569664, பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு - 7539940657, பேராவூரணி , சேதுபாவா சத்திரம் -8903431728 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழைநீர் சேகரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
    • காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், ஆத்மா, காலாப்பட்டு காமராஜர் அறிவியல் நிலையமும் இணைந்து "மழைநீர் சேகரிப்பு" குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.

    வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார்.

    வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.

    வேளாண்துறை பொறியியல் பிரிவு துணை வேளாண் இயக்குனர் பிரபாகரன், நீர் பாதுகாப்பு மற்றும் அவற்றின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

    ஜெயச்சந்திரன் ஆரோ சொசைட்டி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த நுணுக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் புதுவை பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆதித்தன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டை காலாப்பட்டு மற்றும் தவளகுப்பம் உழவர் உதவியக களப்பணியாளர்கள் மாசிலாமணி, பன்னீர்செல்வம், இளங்கோ, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
    • கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.

    எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது.
    • ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும்.

    உடுமலை :

    குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பீட்ரூட் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.

    பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பீட்ரூட் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பீட்ரூட் விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பீட்ரூட் ரூ.5 முதல் ரூ. 7 வரை மட்டுமே விற்பனை ஆகிறது என்றனர்.

    • அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.

    அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

    • அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
    • மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

    தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-

    பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.

    மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி

    வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
    • நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    மெலட்டூர் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர்.

    கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.

    எனவே மெலட்டூரில் அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் உள்பட பல்வேறு பயிர்களை நடவு செய்து வருகிறார்கள். இதை யொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யும் பணி நடந்து வரு கிறது.

    இதே போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

    பாசன பகுதிகளான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம் பாளையம், அய்யம் பாளை யம், நல்லி கவுண்டனூர், பாப்பாங் காட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் பவானி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா ஏடிடி 38,39, கருப்பு கவுனி, இட்லி குண்டு, பொன்னி மற்றும் பல நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து நெல் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பாசன கூட்ட மைப்புச் செயலாளர் பா.மா.வெங்கடாஜலபதி, ஈஸ்வரமூர்த்தி, யூ/8பி யின் தலைவர் ஏகாம்பரம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் சங்க செயலாளர் மசக் கவுண்டர் ஆகியோர் கூறும்போது,

    பெரும்பா லான விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை, பனியன் கம்பெனி மற்றும் மில் வேலைகளுக்கு சென்று விட்டனர்.

    இதனால் நெல் அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. தற்போது எந்திரத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரை கொடுத்து நெல் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.

    • நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை
    • வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை

    மடத்துக்குளம்,நவ.21-

    மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைய தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

    சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்க தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராக கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.
    • மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 5.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. கடந்த மாதம் சில நாட்கள் பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

    மீண்டும் மழை இன்றி காணப்பட்டதால் அறுவடை பணிகள் வேகம் எடுத்தது. மேலும் சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி உள்ளது. தஞ்சை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, நாகை, திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. இன்றும் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

    மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் 670 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தொடர் மழையால் 19 முதல் 25 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை பகல் நேரத்தில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஏராளமான விவசாயிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நெல்லைக் கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர். தேவையான அளவில் நெல் உலர்த்தும் எந்திரங்கள் இல்லாத காரணத்தால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை, நெடுஞ்சாலைகளில் நெல்லை காய வைத்தனர்.

    ஆனால் மழை பெய்து வருவதால் தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.

    தரை வழியாக தார்ப்பாயை கடந்து தண்ணீர் உள்ளே செல்வதால் அடி பாகத்தில் உள்ள நெல்மணிகள் நனைந்து வருகின்றன.

    தொடர்ந்து மழை பெய்வதால் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் நெல்மணிகள் மீண்டும் முளைத்து வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனால் நெல்லை எப்படி விற்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    இது தவிர பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்தன.

    ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்த நிலையில் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    எனவே அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் சம்பா, தாளடி நடவு பணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறுவை அறுவடை பணிகள் மேலும் பாதிப்பு அடைவதோடு நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே உடனடியாக ஈரப்பத தளர்வை தளர்த்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் . தேவையான அளவு நெல் உலர்த்தும் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர்கள வசதியோ இல்லை.
    • நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் தான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை கிராமத்தில் 1600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர் களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் ஈரப்ப தம் உள்ள நெல்லை அரசு கொள்முதல்நிலையம் அருகே உள்ள கிராம சாலையில் கொட்டிவைத்து தினசரி உலர்த்தி வருகி ன்றனர்.

    கிராமசாலையில்நெல் உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயி கள் கூறும்போது, ராராமு த்திரகோட்டை பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு விளையகூடிய நெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் நெல்லை காயவைக்க போதுமான இடவசதி இல்லை .

    அதனால அறுவடை செய்த விவசாயிகள் கிராம சாலைகளில் கொட்டி நெல்லை காய வைக்க வேண்டி உள்ளது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றனர்.

    • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் மழையால் 100 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் துவங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்–புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்

    ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் இப்படி ஆகி விட்டது என்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×