search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatana Dharma"

    • உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.
    • மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா?

    புதுடெல்லி:

    சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25, 26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதிகள், "இந்த வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்" என்று கேட்டனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "நீங்கள்தான் முதன்மையான கோர்ட்டாக இருக்கிறீர்கள். நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

    அதற்கு நீதிபதிகள், 'இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐகோர்ட்டுகள் உள்ளன. நீங்கள் எந்த ஐகோர்ட்டில் வேண்டுமானாலும் இந்த விவகாரத்துக்காக அணுகலாம்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், குறிப்பாக சனாதனத்தை வேரறுப்போம், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று கொசுவோடு சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது, கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது ஆகிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார்.

    அதன்பிறகு வழக்கு மனுவை மீண்டும் ஒருமுறை பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீசு அனுப்புகிறோம். அவர்கள் பதில் அளிக்கட்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அமைச்சர் சேகர் பாபு, சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? என்றும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
    • தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    சென்னை:

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

    இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது:-

    சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும்.

    இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா? குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?

    சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.

    மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களை எடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொரு வரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    வேடசந்தூர்:

    என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

    தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

    சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.

    செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.

    • சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாதனத்திற்கு முரணானது
    • சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மனுதாரர்

    சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
    • 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.

    என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

    அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பா.ஜனதா ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்றார். அங்குள்ள பினா பகுதிக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ கெமிக்கல் வாரியம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் உள்பட ரூ.50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியினர் இந்து மதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி செயல்படுகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கமாக உள்ளது.

    பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே காரணமாகும். விவேகானந்தர், லோக்மான்யா திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளது.

    இவர்கள் சனாதனத்தையே குறிவைக்கிறார்கள். சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல். சனாதனத்தை எவ்வளவு தாக்கி பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியா கூட்டணியின் அவதூறு கருத்துக்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அமைப்பு மற்றும் ஒற்றுமையின் பலத்துடன் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

    சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இன்றைய இந்தியா உலகை இணைக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது. மறுபுறம் சில கட்சிகள் நாட்டையும், சமூகத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தலைவர் முடிவு செய்யப்படவில்லை. அவர்களின் தலைமைத்துவத்தில் குழப்பம் நிலவுகிறது. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைகணம் கொண்டவர்கள்.

    ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஜி-20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நாட்டு மக்களையே சாரும். இது 140 கோடி மக்களின் வெற்றியாகும்.

    மத்திய பிரதேசத்தை முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்த மாநிலத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. ஊழல் மற்றும் குற்றங்களை தவிர அவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்திய மந்திரிகளும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் ஆவேசமாக கருத்துக்களை கூறி வந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடியும் முதல் முறையாக சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களை கடுமையாக விமர்சித்து இன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று பிற்பகல் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
    • ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும்.

    அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும் என்று பேசி இருந்தார்.

    அவரது இந்த பேச்சு இந்தியா முழுவதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜஸ்தானில் பேசும்போது சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், தி.மு.க.வும் வாக்கு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

    பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா பேசுகையில், 'சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம். எனது பேச்சை தவறாக திரித்து கூறி வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார்.

    ஆனாலும் உதயிநிதியின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். எனவே எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். பாராளுமன்ற தேர்தலின் போது வடமாநிலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அச்சப்படத் தொடங்கினர். இதனால் இந்த விஷயத்தை மேலும் மேலும் பேசி பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பீர் என்று கூறியதுடன், பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு பரப்பும் பாரதிய ஜனதாவினரின் திசை திருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் என்றும் கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அது மட்டுமின்றி சனாதன தர்மம் குறித்து அமைச்சர்களும் கட்சி தலைவர்களும் பேசுவதற்கு அவர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும்.
    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் நிலையான அரசியல் செய்ய முடியாது.

    தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு கண்டக்குரல் ஓங்கி ஒலித்தது.

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்தார்.

     

    இவரது கருத்துக்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது..,

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை, யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று தெரிவித்து உள்ளார்.

    • 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவான தகவல்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியது.

    இந்த நிலையில், 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த தகவல் இடம்பெற்று இருப்பது குறித்து பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து எக்ஸ் பதிவில் அவர், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே. சேகர் பாபு, தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இந்து மதமும், சனாதனமும் வெவ்வேறானது என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு அறிவாளியாகும் படி நாங்கள் பி.கே. சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுவோரின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய மந்திரி கருத்து தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத், "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது."

     

    "சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    • சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
    • ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

    சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியா கூட்டணி இதற்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக பேசிய வீடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

    சென்னை:

    சனாதன தர்ம ஒழிப்பு பேச்சில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அதே சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டிருக்கிறார்.

    அவர் பேசும்போது, சனாதன தர்ம எதிர்ப்புக்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பதாக பேசிய வீடியோவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பதாவது:-

    பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக நம்முடைய சனாதன எதிர்ப்பு கொள்கையை இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள்.

    இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான். இந்தியா கூட்டணியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

    இங்கே இருப்பவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தை காப்பாற்ற வேண்டும். ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டதுதான். 26 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருப்பதன் நோக்கம். வந்திருக்கிற நீங்கள், நாம் என்னதான் செய்தாலும் அரசியலில் வெற்றி பெற்று அங்கே அமர வேண்டும்.

    இவ்வாறு பேசி இருக்கிறார்.

    அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு வெளியானதும் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது

    ×