search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதன விவகாரம்"

    • உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
    • இந்த வழக்கு தொடர்ந்ததில் பா.ஜ.கவின் பங்கு உள்ளது.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ வாரண்ட் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை," என்று வாதாடினார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், "சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆவதில் இருந்தே, இந்த வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

    இதோடு, "இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் தகுதி இழப்பு ஆகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் என்று மனுதாரர்கள் கூறிய போதிலும், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

    "இந்த விவகாரம் அரசியல் கொள்கை மோதல் தான். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஜாதி மதம் அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கக்கூடிய சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்ற வாதங்களை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.

    வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் வாதம் நிறைவடையாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    • சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.

    இந்த மாநாட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். தி.மு.க. எம்.பி. ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளனர்.

    இதனால் இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி, தி.மு.க. எம்.பி. ராசா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜோதி, அமைச்சர்களின் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். 

    • தி.மு.க.வோடு யார் போட்டி என்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
    • ஆசிரியர்கள் போராட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 பேருக்கு இன்று எனது கையால் பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளேன். ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கே: அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.தான் எங்களுக்கு போட்டி என அண்ணாமலை கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இதை நீங்கள் அ.தி.மு.க. தலைவர்களிடம் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் யாரென்றாலும் ஒன்றுதான். பாராளுமன்றத் தேர்தலில் தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம். எதிர்கொள்வோம். தி.மு.க.வோடு யார் போட்டி என்பதில்தான் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    கே: தமிழக கவர்னர், தமிழ்நாட்டில்தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருப்பதாக பேசி இருக்கிறாரே?

    ப: அவர் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் போய் பார்க்கிறாரா? என்பது தெரியவில்லை. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது நமது மாநிலத்தில் குறைவுதான். இங்கு இல்லையென்று சொல்ல மாட்டேன். இருந்தாலும் ஆளுநர் அவரது வேலையை பார்க்காமல் தேவையில்லாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கே: சனாதனம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் மகனே அதுபோன்று பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளாரே?

    ப: நான் இதுபற்றி பல முறை சொல்லிவிட்டேன். அதைவிட முக்கியமான விஷயங்கள் எல்லாம் உள்ளன. சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பேசுவோம். மணிப்பூர் பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றியும் நான் தொடர்ந்து பேசுவேன். பேசிக்கொண்டே இருப்பேன். சனாதனம் பற்றி பெரியார், அம்பேத்கர் எல்லாம் பேசியிருக்கிறார்கள். கலைஞர் மற்றும் எங்கள் கட்சி தலைவர்கள் எல்லாம் பேசி இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவும் பேசி இருக்கிறார். அதைவிட நான் ஒன்றும் பேசிவிடவில்லை. பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை பற்றி பேசுவோம். அதன் பின்னர் சனாதனம் பற்றி பேசுவோம்.

    ஆசிரியர்கள் போராட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். நிதி நிலையை பொறுத்து முதலமைச்சர் நிச்சயமாக ஆசிரியர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பார். பள்ளிக்கூடங்கள் எல்லாம் திறந்துவிட்ட நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
    • தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    சென்னை:

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

    இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது:-

    சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும்.

    இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா? குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?

    சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.

    மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களை எடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொரு வரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உதயநிதி கருத்துக்கு பா.ஜனதா மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலர் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

    புதுடெல்லி:

    தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது. உதயநிதி கருத்துக்கு பா.ஜனதா மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.

    இதற்கிடையே சனாதனத்துக்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் செய்யப்பட்டதுடன் கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி வலதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலர் இந்த வழக்குகளை தாக்கல் செய்தனர்.

    இவ்வழக்குகள் இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சில வக்கீல்கள் சென்று சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதேபோன்று கோரிக்கை வைப்பதற்கு முன்பு, பதிவாளரிடம் தகவல் தெரிவித்து அதற்கு தனியாக வரிசை எண் பெற வேண்டும். ஆனால் இன்று சில வக்கீல்கள், முறையிடுவதற்கான நேரம் முடிந்த பிறகு தலைமை நீதிபதியிடம் சென்று உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட்டனர். அதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, எல்லாவற்றுக்கும் உரிய வழிமுறைகள் உள்ளன. ஏற்கனவே இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நீங்களே (வக்கீல்கள்) இப்படி நடந்து கொள்ளலாமா? முறையாக பதிவாளரிடம் தெரிவித்து விட்டு பிறகு என்னிடம் வாருங்கள் என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதையடுத்து கோர்ட்டு பதிவாளரிடம், தகவல் தெரிவித்து அதற்கான அனுமதியை பெற்று அடுத்த வாரம் தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையிடுவார்கள் என்று தெரிகிறது.

    • பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு “கதையை” உருவாக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயற்சிக்கின்றன.
    • தி.மு.க. அரசின் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்.

    புதுடெல்லி:

    சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள பா.ஜனதா, இது தொடர்பாக காங்கிரசையும் கடுமையாக சாடி வருகிறது.

    அந்தவகையில் காங்கிரஸ் ஆதரவுடன்தான் தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருவதாக பா.ஜனதா குற்றம்சாட்டி இருக்கிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் நாராயண திருப்பதி ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடி அரசின் பணிகளுக்கான அங்கீகாரம் அதிகரித்து வருவதை கண்டு, பா.ஜனதாவுக்கு எதிராக ஒரு "கதையை" உருவாக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயற்சிக்கின்றன.

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து மக்களை திசை திருப்பவும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் காங்கிரஸ் ஆதரவுடன் சனாதன தர்மத்தை தி.மு.க. எதிர்க்கிறது.

    தி.மு.க. அரசின் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். இது தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. பதற்றத்தில் உள்ளது. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறது. பா.ஜனதா, அனைத்து மதங்களுக்கான கட்சி. நாங்கள் மதவாதிகள் அல்ல, அவர்கள்தான் மதவாதிகள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சரத்பவார் வீட்டில் நேற்று நடந்த இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை, 'இந்து மத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு' என பா.ஜனதா சாடியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, 'இந்தியா கூட்டணி உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது வெளிப்படையாக தெரிகிறது. இந்து மதத்தை எப்படி ஒழிக்கலாம் என அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள். அதனால்தான் கோத்ரா போன்ற சம்பவம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்' என கூறினார்.

    சோனியா காந்தியின் கிறிஸ்தவ பெயரை சுட்டிக்காட்டிய பத்ரா, இந்து மதத்துக்கு எதிரான சதியின் பின்னணியில் அவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    • சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
    • ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

    சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சனாதனத்தை பா.ஜ.க. தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.

    சென்னை:

    திராவிடர் கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சனாதனத்தை பா.ஜனதா தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திராவிடர் கழக பொருளாளர் குமரேசன், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், வக்கீல்கள் அருள்மொழி, தளபதி பாண்டியன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சனாதனம் என்பது பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் இப்போது பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.
    • ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, ''சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசுக்களை போன்று ஒழிக்க வேண்டும்'' என்று பேசினார்.

    இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    சனாதனம் என்பது பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் இப்போது பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி ஆன்மிகவாதிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வெவ்வேறு விளக்கங்களை குறிப்பிட்டு வருகிறார்கள். இதில் எதை அதிகாரபூர்வமாக சனாதனத்துக்கு பொருளாக எடுத்துக்கொள்வது என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-

    சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையாகும். இதில் படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளாகும். இதனால் அவை ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும், இணைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இத்தகைய கண்ணோட்டம், தனிமனிதன், குடும்பம், சமூகம் ஆகியவை தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை பிரதிபலிக்கும் வகையிலும், அவற்றை மதிக்கும் வகையிலும் இருக்கிறது.

    இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டாக இணைந்து நடத்தும் ஒரு ஒத்திசைவான கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சனாதன தர்மத்தை பொறுத்தமட்டில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இத்தகைய பாகுபாடுகள் சமூக தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

    சனாதன தர்மத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட வெளிபாடு ரிக் வேதத்தின் அடிப்படை கொள்கைகளில் இருந்து வெளிக்கொணரப்பட்டது. அது வருமாறு:-

    * பரமேஸ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

    * படைப்புகளை உருவாக்கிய பரமேஸ்வரர் படைப்பின் ஒவ்வொன்றிலும் அங்கமாக இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். எனவே படைப்பு முழுவதும் ஒரு குடும்பம்தான்.

    * இந்த உலகளாவிய ஒருமைப்பாடு மக்களின் ஆன்மிக முயற்சிகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது. எனவே அவர்கள் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தி, சம்பிரதாயங்கள் அல்லது நம்பிக்கையின் பிரிவுகள் என்று அழைக்கப்படும் பல பாதைகளை உருவாக்குகிறார்கள். எனினும் அடிப்படை கொள்கைகளில் எந்தவித வேறுபாடும் இல்லை.

    பெரு வழக்கமான உலக சமயங்களுக்கு உரியவையல்லாத சமய நம்பிக்கைகளை உடைய அல்லது சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை. 'உலகம் ஒரு குடும்பம்' (வசுதைவ குடும்பம்) அல்லது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகியவை சனாதனத்தின் முக்கிய பிரதிபலிப்புகளாகும். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல்.
    • உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்து இருப்பதாக அவரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இது தொடர்பான மனுவில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.

     

    இந்த நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சனாதனத்தை எதிர்க்கும் பணியில் செய்தியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு எனது நன்றிகள். நான் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவர் அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா என்று தெரியவில்லை," என்று தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, பத்மவிபூஷன் விருதாளரும், புகழ்பெற்ற செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

     

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2--வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள், செஸ் சாம்பியன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமிதம் சூழ்ந்த இந்த நிகழ்வில் வேலம்மாள் நெக்ஸஸ் நிர்வாகம் சார்பில் சர்வதேச அளவில் சாதனை படைத்த செஸ் சாம்பியன்களுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
    • உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

    சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்துக்களும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

    அந்த மனுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வழக்கு பட்டியலிடப்படலாம்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடி கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எடப்பாடி பழனிசாமி தற்போது மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

    • யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.
    • மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ராய்ப்பூர்:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றார். சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.

    மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, ராஜ்நந்தகோன் மாவட்டம் தேக்வா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்காக நாங்கள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தோம். உடனே, நாட்டின் பெயர் 'பாரதம்' என்று மாற்றப்பட வேண்டும் என்று பா.ஜனதா சொல்கிறது.

    இந்தியா, பாரதம் என்ற இரண்டுமே அரசியல் சட்டத்தில் இருக்கிறது. எனவே, ஏன் சர்ச்சையை உருவாக்க வேண்டும்?

    பாரதம் என்ற வார்த்தையை காங்கிரஸ் வெறுப்பதாக பா.ஜனதா சொல்கிறது. நாங்கள் பாரதத்தை நேசிக்கிறோம்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு 'பாரத ஒற்றுமை பயணம்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.

    நாங்கள் பாரதத்தை ஒன்றுபடுத்த பாடுபடுகிறோம். பா.ஜனதாவோ, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

    'இந்தியா' என்ற வார்த்தை மீது வெறுப்பு இருந்தால், ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா என்று திட்டங்களுக்கு பெயர் வைத்தது ஏன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×