என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

12-வது பாட புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவு.. உதயநிதியை சீண்டிய அண்ணாமலை
- 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவான தகவல்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது.
சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியது.
இந்த நிலையில், 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த தகவல் இடம்பெற்று இருப்பது குறித்து பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் பதிவில் அவர், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே. சேகர் பாபு, தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இந்து மதமும், சனாதனமும் வெவ்வேறானது என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு அறிவாளியாகும் படி நாங்கள் பி.கே. சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டு உள்ளார்.






